கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக கடல் ஆமைகளின் மீதான மனிதர்களின் தாக்குதல் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்கியிருக்கிறது. ஓடுகளுக்காகவும், அவற்றின் உடம்பில் சுரக்கும் ஒருவித எண்ணெய்க்காகவும், இறைச்சிக்காகவும் ஆமைகள் வேட்டையாடப்படுகின்றன. இந்த உலகில் சுமார் 300 வகையான ஆமையினங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே அழிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் காலபகோஸ் ஆமை. (Galapagos tortoise) ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் பகுதியில் மட்டுமே வாழ்ந்துவந்த இந்த பிரத்யேக ஆமையினம் 1906 ஆம் ஆண்டு அழிந்துவிட்டதாக ஆராச்சியாளர்கள் நம்பிவந்தனர்.

ஆமைகள் பாதுகாப்பு
ஈகுவடார் நாட்டில் இயங்கிவரும் GTRI (Giant Tortoise Restoration Initiative) என்னும் அரசு உதவிபெறும் அமைப்பு அங்குள்ள ஆமைகளைப் பாதுகாத்து வருகிறது. இந்த இயக்கத்திற்கு ஈகுவடார் அரசு கணிசமான பணத்தினை வருடந்தோறும் ஒதுக்குகிறது. சென்ற வாரம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த GTRI ஆராய்ச்சியாளர்கள் தான் அந்த ஆமையினை முதன்முதலில் பார்த்திருக்கின்றனர். சோதனை செய்து பார்த்ததில் அந்த ஆமை காலபகோஸ் வகையைச் சேர்ந்தது என்று உறுதிசெய்தனர். அடுத்தநாள் அந்த அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளர்களால் அழிந்துபோயிற்று என நம்பப்பட்ட காலபகோஸ் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஆமை
ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆமை முட்டையிடுவதற்காக வெளிவந்திருக்கிறது. எனவே இந்தவகை ஆமையில் இன்னும் சில ஆமைகள் உயிரோடு இருக்கவேண்டும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். காலபகோஸ் தீவு அமைந்துள்ள பசிபிக் தீவு முழுவதும் இந்த அமைப்பு தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் மொத்தம் 19 தீவுகளில் இந்தவகை ஆமைகள் வாழக்கூடும் என நம்பப்பட்டு வந்தது. தற்போதைய இந்தப்புதிய ஆமையின் வரவால் ஆராய்ச்சியாளர்கள் புதுவேகம் பெற்றிருக்கின்றனர்.
