கிரகத்தின் மிகப்பெரும் கடலான பசிபிக்கில் காணப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு நாள்தோறும் அதிகரித்து வருவதாக கடலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துவந்த நிலையில் 40 டன் பிளாஸ்டிக் குப்பைகளை பசிபிக் பெருங்கடலில் இருந்து மீட்டேடுத்துள்ளது ஒரு குழு. Ocean Voyages Institute என்னும் நிறுவனத்தின் மிஷன் ப்ளூ (Mission Blue) அமைப்பு பசிபிக் கடலில் மிதக்குள் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை மீட்க ஏற்படுத்தப்பட்டதாகும். வரலாற்றில் கடல் கழுவுகளை இத்தனை பெரிய அளவில் அகற்றிய குழு என்ற பெருமையும் இக்குழு பெற்றிருக்கிறது.

ஹவாய் மற்றும் கலிபோர்னியா நகரங்களுக்கு இடையே தான் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கின்றன. இதனை செயற்கைக்கோள் மற்றும் டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இக்குழு உறுதி செய்த பின்னர் களத்தில் இறங்கியிருக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பொம்மைகள் அதிக அளவில் காணப்பட்டாலும் குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது பிரம்மாண்ட மீன் வலைகள் தானாம். இவர்களால் கைப்பற்றப்பட்ட இரண்டு பெரிய வலைகளில் ஒன்று 5 டன் எடையும் மற்றொன்று 8 டன் எடையும் இருந்திருக்கின்றன. தொழில்முறை மீன்பிடி கப்பல்களில் பயன்படுத்தப்படும் இந்தவகை பிரம்மாண்ட வலைகளை அந்நிறுவனங்கள் அதன் பயன்பாடு முடிந்த பின்னர் இப்படி கடலில் வீசிவிடுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நைலான் மற்றும் புரப்பலீனால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வலைகள் டால்பின்கள் மற்றும் சுறா மீன்களின் மீது படர்ந்து அவற்றின் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது.
குப்பையிலிருந்து கலைப்பொருட்கள்
கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக்கில் சுமார் 1.5 டன்னை ஹவாய் கலைக்கல்லூரி ஒன்றிற்கு வழங்குகிறது இந்தக்குழு. மேலும் தனிப்பட்ட கலைஞர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கும் இந்த பிளாஸ்டிக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கொண்டு கலைப்பொருள் தயாரிக்கும் பணிகள் அங்கே நடக்க இருக்கின்றன. மீதமுள்ள பிளாஸ்டிக் அனைத்தும் ஹவாய் தீவிற்கு தேவையான மின்னாற்றலைத் தயாரிக்க பயன்படுத்தப்படும்.

வருடத்திற்கு 1.15 முதல் 2.41 டன் வரை பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இவற்றை உடனடியாக அகற்றாவிடில் கடல்வாழ் உயிரினங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறது National Oceanic and Atmospheric Administration என்னும் அமைப்பு. மேலும், பெருங்கடலில் இருக்கும் நீரோட்டங்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மிகப்பெரிய பரப்பிற்கு விரிவடைவதை ஊக்குவிக்கின்றன இதனால் அவற்றை அகற்றுவது சிரமமான காரியம் என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.
தற்போது மிஷன் ப்ளூ நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டிருக்கும் 40 டன் பிளாஸ்டிக் என்பது 24 கார்கள் மற்றும் நன்றாக வளர்ந்த 6.5 யானைகளின் எடைக்குச் சமம். அப்படியென்றால் கடலில் மீதியிருக்கும் பிளாஸ்டிக் அளவு அவ்வளவு இருக்கும் என நீங்களே ஊகித்துப்பாருங்கள். இனியாவது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்வோம். ஏனெனில் பூமி என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல.