கடந்த ஒருவாரமாக தொலைக்காட்சியில் இந்தோனேஷிய மக்களின் கவலை தோய்ந்த முகங்களே தென்படுகின்றன. நிலநடுக்கம் அதைத்தொடர்ந்து வந்த சுனாமி அந்நாட்டு மக்களை உலுக்கியிருக்கிறது. எங்கு நோக்கிலும் மரண ஓலங்கள், புதைந்த உடல்கள், ராணுவ வீரர்களின் பாதுகாப்பு அறிவுரைகள் என அந்நாடே பரபரப்பாக உள்ளது. நிலநடுக்கத்தின் விளைவாக இதுவரை 1400 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. உலகமெங்கிலும் உதவிப் பொருட்கள் இந்தோனேஷியா நோக்கி வந்த வண்ணம் உள்ளன.

அதிர்ந்த நிலம்
இந்தோனேஷியாவில் நிலநடுக்கங்கள் வருவது எப்போதும் நடக்கக்கூடிய நிகழ்வு என்றாலும் இம்முறை வந்த நிலநடுக்கம் பல இன்னல்களை இந்தோனேஷியா மண்ணில் கரை சேர்த்திருக்கிறது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுலவேசி தீவைக் கடுமையாக பாதித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்டெடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பல கட்டடங்களில் மக்கள் புதையுண்டு இருப்பதாகவும் அவற்றை மீட்க போதுமான வசதிகள் இல்லையென்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் வித்தியாசமானதாக இருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர். இப்படி ஒரு நிலநடுக்கம் இங்குவர வாய்ப்பில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குழப்பம் நிறைந்த இந்தோனேஷியாவின் நிலநடுக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
கொந்தளிக்கும் சுனாமி
கடற்கரை நகரமான பலுவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சுனாமியால் ஏராளமான கடற்கரையோர மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலைமையில் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. சுத்தமான குடிநீர், உணவு ஆகியவை வழங்கப்படாத மக்கள் கடைகளை உடைத்துப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருட்கள் செல்லவில்லை என்பதால் இம்மாதிரியான சம்பவங்கள் தவிர்க்க முடியாததாய் ஆகின்றன.

வெடித்துச் சிதறிய எரிமலை
நிலநடுக்கத்தின் காரணமாக வடக்கு சுலாவேஸியில் உள்ள சொபுடான் எரிமலை வெடித்துச் சிதறியிருக்கிறது. நிலநடுக்க மையத்திலிருந்து தொலைவில் இருந்தாலும் இந்த எரிமலை வெடிப்பு ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பூமிக்கடியில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் 6000 அடி உயரத்திற்கு சாம்பல் மேகங்கள் அந்த பிராந்தியத்தை சூழ்ந்துள்ளன.

உணவுப் பொருள் விநியோகம் சரிவர நடக்காததால் மக்கள் இடிபாடுகள் மற்றும் குப்பைகளில் கிடைக்கும் உணவுகளை சேகரித்து உண்ணும் நிலைமையில் உள்ளனர். நிலச்சரிவு, பாதை துண்டிப்பு போன்றவை காரணமாக மீட்புப்பணிகள் தாமதமடைந்து வருகிறது. மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க முயற்சிகளை துரிதகதியில் எடுக்குமாறு இந்தோனேஷியா அரசிற்கு ஐ.நா வலியுறுத்தியிருக்கிறது. சுனாமி, நிலநடுக்கம், எரிமலை விபத்து, பசி என ஏராளமான இன்னல்களுக்கு இடையில் அம்மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கையின் சீற்றம் எப்படியிருக்கும் என்பது மறுபடியும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.