ரெட் அலெர்ட் அபாயகரமானதா ? – எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் ?

0
63
red alert

மீபகாலமாக கனமழை என்றாலே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என்பது மாதிரியான வார்த்தைகள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன.

தற்போது தமிழகத்தில் மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டிருக்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் என்று அறிவித்திருப்பதாக பல தொலைக்காட்சிகளில் முக்கிய செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பினர். இதற்கேற்றாற் போல மாநிலம் முழுவதும் விடாமல் கொட்டித் தீர்த்து வருகிறது கனமழை.  இது பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், அச்சப்படத் தேவையில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை வண்ணங்கள்

இந்த நிலையில் பல வண்ண “அலர்ட்” (எச்சரிக்கைகள்) குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். நான்கு வித்தியசமான அலர்ட்கள் உண்டு. அவை, பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert) மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.

red alertபச்சை எச்சரிக்கை (Green Alert) : பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் அஞ்சத் தேவை இல்லை.

மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) : வானிலை மிகவும் மோசமாக இருப்பதைத் தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற சமயங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்பர் எச்சரிக்கை (Amber Alert) : பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுக்கும். இது போன்ற சமயங்களில் மக்கள் பயணங்களைத் தவிர்ப்பது நலம்.

சிவப்பு எச்சரிக்கை (Red Alert) : மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த சூழலில், போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யக்கூடும்.

அறிந்து தெளிக !!
கேரளாவில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அங்கிருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. வருகின்ற 7-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரள மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று கணித்த வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. சூழலுக்கேற்ப முன்னேற்பாடுகளை செய்துகொண்டால் போதும்.

எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும்?

இந்நிலையில் எந்தெந்த தினங்களில் எவ்வளவு அளவிலான  மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் இன்று (05/10/2018), கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழகம், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளது.

red alertஅக்டோபர் 6-ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவின் ஒருசில பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதியன்றும் மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.