பூமியின் வெப்பத்தை அதிகம் உறிஞ்சும் கடல்கள்

Date:

அதிகமான எரிபொருள் மற்றும் இயந்திரங்கள் பயன்பாடு ஆகியவற்றால் வெளியாகும் வெப்பத்தை கடல்கள் தான் அதிகம் உறிஞ்சுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கடல்கள் உறிஞ்சும் வெப்பத்தின் அளவானது முன்பு கணித்திருந்ததை விட தற்போது 60% அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ocean
Credit : Smithsonian Magazine

பசுமை இல்ல விளைவு

பெட்ரோல் டீசல் போன்ற  எரிபொருள்கள் உபயோகத்தால் வெளிப்படும் மாசுகள் மற்றும் வெப்பம் ஆகியவை பூமியை அதிக அளவில் பாதித்து, வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

புவி வெப்பமடைவதைத் தடுப்பது அத்துணை எளிதான விஷயம் இல்லை. சவால்கள் நிறைந்தது என்பது தான் இந்த ஆராய்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டும் செய்தி.

பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gas) என்பவை, பூமியில் இருந்து வெளிப்படும் வெப்பம், பூமியைக் கடந்து போகாமல் தடுத்து, புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருக்கின்றன. இதையே விஞ்ஞானிகள் பசுமை இல்ல விளைவு (Green House Effect) என்கின்றனர்.

பசுமை இல்ல விளைவால் தடுக்கப்பட்ட அதிகப்படியான வெப்பத்தின் 90 சதவீதத்தை கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன என்பது உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான குழு ( Intergovernmental Panel on Climate Change) சமீபத்தில் செய்த மதிப்பீட்டின் படி தெரிய வந்துள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள்
கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஓசோன், குளோரோ புளோரோ கார்பன் மற்றும் அதிக அளவிலான நீராவி போன்றவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும்.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்திய ஆற்றலைப் போல 150 மடங்கு வெப்ப ஆற்றலை கடல் உறிஞ்சுகிறது என்கிறது இந்தப் புதிய ஆராய்ச்சி.

மனித நடவடிக்கைகள் மற்றும் மாறி வரும் வாழ்க்கை முறையால் வெளியாகும் பசுமை இல்ல வாயுக்கள் எவ்வளவு வெப்பத்துக்குக் காரணமாகின்றன என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தான் புவி எவ்வளவு வெப்பமாகிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.

ஆனால், கணக்கிட்டதை விட பசுமை இல்ல வாயுக்களால் அதிக வெப்பம் உற்பத்தியும் ஆகிறது. கணக்கிட்டதை விட அதிகமான வெப்பத்தைக் கடலும் உறிஞ்சுகிறது.

வெப்பத்தால் கடல் மட்டம் உயரும்

தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த புவி வெப்ப நிலையை விட 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்ப நிலை உயராமல் பாதுகாக்க வேண்டும் என்று ஐ.பி.சி.சி. அண்மையில் குறிப்பிட்டது. ஆனால், அவ்வாறு பாதுகாப்பது மற்றும் அப்படியே தொடர்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று தான் இந்த ஆய்வு முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ocean
Credit : Waiving Entrophy

புவி வெப்பமயமாவதைப் பொறுத்த வரையில் திட்டமிட்ட இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும் என்ற கருத்தை நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ( Princeton University, New Jersey.) பேராசிரியர் டாக்டர் லாரி ரெஸ்பிளாண்டி-யும் (Dr Laure Resplandy) தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வு முடிவுகளின் படி, புவி வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அடைய வேண்டும் என்றால் மனித நடவடிக்கைகளும் வாழ்க்கை முறையும் மாற வேண்டும். கடல்கள் அதிக வெப்பத்தை உள்வாங்குவதால் கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்கிறார் டாக்டர் லாரி. கடலின் வெப்ப நிலை உயர்வதால், வெப்பத்தால்எந்தப் பொருளும் விரிவடையும் என்ற விதிப்படி கடலும் விரிவடைந்து கடல் மட்டமானது உயரும். கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் விளைவுகளைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

என்ன தான் தீர்வு ?

இதற்கு என்ன தான் தீர்வு? கடலால் உறிஞ்சப்பட்ட வெப்பம் மீண்டும் கடலாலேயே வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு விடையளித்துள்ள டாக்டர் லாரி, ” ஆம், புவியின் வெப்பநிலையை நம் குளிரச் செய்யும் போது, கடலால் உறிஞ்சப்பட்ட வெப்பம் உமிழப்படும். ஆனால், அந்தக் கடின இலக்கு தற்போது சாத்தியமில்லை. நூற்றாண்டுகள் கழித்து சாத்தியம் ஆகலாம்.” என்கிறார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!