பருவநிலை மாற்றத்தால் பெண் ஆமைகள் மட்டுமே உருவாகும் ஆபத்து!

0
351
sea-turtles

பச்சை கடல் ஆமைகளின் பாலின நிர்ணயம் என்பது மனிதர்களில் உள்ளது போல பாலின குரோமோசோம்கள் மூலமாக நடப்பது கிடையாது. இவற்றின் முட்டையின் வெளிப்புறத்தில் இருக்கும் வெப்பநிலை தான் அவற்றின் பாலினத்தை தீர்மானிக்கிறது. ஆம் அடைகாக்கும் வெப்பநிலை அதிகமாகும் போது பெண் ஆமைகளும், வெப்பநிலை குறையும் போது ஆண் ஆமைகளும் முட்டையிலிருந்து வெளிவருகின்றன. கடல் ஆமைகளின் இந்த அதிசய பண்பு தான் அவற்றின் அழிவுக்கு காரணமாகிவிடுமோ என ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

Credit: Huffington post

உடலமைப்பு

பச்சை கடல் ஆமைகளின்  உடலைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால், மற்ற ஆமைகளைப் போல சுருங்கவும் விரியவும் முடிவதில்லை. இவற்றின் பச்சை என்கிற பெயருக்கு காரணம், அதன் ஓட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பச்சை நிறக் கொழுப்புப் பகுதியாகும். இவற்றின் ஓடு பழுப்பு நிறமானது.

வெப்பநிலை

பச்சை கடல் ஆமைகளின் பாலினம் என்பது  அவற்றின் பாலினம் மரபியல் அடிப்படையில் நிகழாமல் அடைகாக்கும் வெப்பநிலையை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இந்த வகை ஆமைகள் ஆண் பெண் என கலந்து முட்டையிட ஏற்ற வெப்பநிலையாக ஆராய்ச்சியாளர்கள் கருதுவது 29.3 டிகிரி செல்சியஸ் ( 85 பாரன்ஹீட் ). இதை விட சில டிகிரிக்கு வெப்பநிலை குறைந்தால் முட்டையிலிருந்து ஆண் ஆமைகள் வெளிவரும். அதே போல 29.3 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது முட்டையிலிருந்து பெண் ஆமைகள் மட்டுமே வெளிவரும்.

பச்சை கடல் ஆமைகளின் டிஏன்ஏ கூட பாலினம் குறித்த தகவல்களை அளிப்பதில்லை!

வெப்பத்தின் காரணமாக ரெய்னே தீவில் காணப்படும் ஏராளமான  கடல் ஆமைகளின் முட்டைகள் பெரும்பாலும் பெண் ஆமைகளாகவே வளர்ந்து வருகின்றன என்பதை அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில பத்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்குப் போதுமான அளவு ஆண் ஆமைகளே இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Sea turtle eating sea grass bedCredit: cruising guides

முக்கியத்துவம்

சுமார் 2,00,000 ஆமைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள ரெய்னே தீவின் கடற்கரையிலும் அதைச் சுற்றிய தீவுகளிலும் முட்டை இடுகின்றன. உலகிலேயே அதிகமாக  பச்சை கடல் ஆமைகள் கூடும் இடங்களில் இதுவும் ஒன்று. பச்சை கடல் ஆமைகள் சுற்றுசூழலில் நெருக்கடியான பங்கை வகிக்கின்றன. காரணம் கடல் புல் படுகைகளை மேயும் ஒரு சில விலங்குகளில் பச்சை கடல் ஆமைகளும் அடங்கும். சாதாரண புல்வெளிகளைப் போல கடல் புல் படுகைகளும் அவ்வப்போது வெட்டப்படவேண்டும். அப்போது தான் அங்குள்ள தாவரங்கள் ஊட்டம் பெற முடியும். இதன் மூலம் பல வகையான கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள் ஊட்டம் பெற்று அது மனிதர்களுக்கும் கடத்தப்படும்.

பாலின அடையாளம்

பொதுவாக இளம் ஆண் ஆமைகளை பெண் ஆமைகளிடமிருந்து வேறுபடுத்துவது எளிமையான விஷயம் கிடையாது. ஏனெனில் பாலினத்தை அடையாளம் காண அவற்றின் வெளிப்புற அம்சங்கள் உதவி செய்வதில்லை. சொல்லப்போனால் டிஏன்ஏ கூட பாலினம் குறித்த தகவல்களை அளிப்பதில்லை. முன்பெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் இளம் ஆமைகளின் மேல் சிறு கீறல் போல அறுத்து தான் அவற்றை ஆராய்ச்சி செய்வார்கள். தற்போது இவை ஆபத்தில் இருக்கும் உயிரினம் என்பதால் லாபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறையும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

Credit: seewinter

பாலின குரோமோசோம்கள் இல்லாத இந்த உயிரினங்களின் பாலினத்தை அறிய விஞ்ஞானிகள் இப்போது ஒரு எளிய முறையைக் கண்டறிந்துள்ளனர். அதாவது ஆராய்ச்சியாளர்கள் பல வாரங்களாக ஆமைகளைக் கண்காணித்து அவற்றின் பிளாஸ்மா மாதிரிகளை சேகரித்து விட்டு பின்பு அவற்றை கடலில் விட்டுவிடுகின்றனர். இவற்றின் பிளாஸ்மா மாதிரிகளை ஆய்வுகூடங்களுக்குக் கொண்டு சென்று அவற்றின் ஹார்மோன்களை பரிசோதித்து பாலினத்தைக் கண்டறிகின்றனர்.

உண்மையில் ஆமைகளின் பாலினம் ஏன் வெப்பநிலையை பொறுத்தது என்பதற்கான சரியான விடையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் குளிரில் வளரும் போது பெரிதாக வளருவதால் ஆண் ஆமைகளாக வளரலாம் என கருதுகின்றனர்.

குறையும் ஆண் இனம்

உலக வெப்பமயமாதலால் பச்சை கடல் ஆமைகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள எல்லா ஆமை இனங்களும் பாதிக்கப்படுகின்றன. ரெய்னே  தீவை பொறுத்தவரை இப்போது சுமார் 99% இளம் ஆமைகள் பெண் ஆமைகள் தான். 87% வளர்ந்த ஆமைகளும் பெண் ஆமைகள் தான். ஒரு இளம் ஆமைக்கு 116 பெண் ஆமைகள் என்ற விகிதத்தை எட்டியுள்ளது. பொதுவாக ஆமைகள் இனத்தில் 50:50 என்ற ஆண், பெண் விகிதத்திற்கான அவசியமில்லை. சொல்லப்போனால் இனப்பெருக்கத்திற்கு ஆண் ஆமைகள் குறைவாக இருந்தாலும் முட்டை இடுவது பெண் ஆமைகள் என்பதால் இளம் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஒரு பெண் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ அதே கடற்பகுதிக்கு மீண்டும்  வந்து அங்கு தான்  முட்டையிடும்.

1990 களுக்குப் பிறகு தான் ஆமைகள் முட்டையிடும் மணலின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. ஆமைகள் முட்டையிடும் இன்னொரு இடமான ரெய்னே தீவின் தெற்குப் பக்கம் குளிர்ச்சியான சூழலே நிலவுவதால் அங்கு  ஒரு ஆண் ஆமைக்கு 2 பெண் ஆமைகள் என்ற விகிதத்தில் உள்ளன. ஆனால் இதனால் பிரச்சனை இல்லை என்று அர்த்தம் இல்லை.

Credit: scroll

இனப்பெருக்கம்

கடல் ஆமைகள் மாறுபட்ட இனப்பெருக்கப் பண்பைக் கொண்டவை. அவை, முட்டையிடுவதற்காகப் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முட்டையிடும் இடத்தை அடைகின்றன. முட்டை உருவான பிறகு பெண் ஆமைகள் கடல் நீரிலிருந்து வெளியேறி மணற்பாங்கான கடற்கரை பகுதியில் பாதுகாப்பான இடத்தில் துடுப்புகளின் உதவியால் குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. பின்பு அந்தக் குழியை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பி விடுகின்றன. சுமார் 60 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியேறும். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு பெண் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ அதே கடற்பகுதிக்கு மீண்டும்  வந்து அங்கு தான்  முட்டையிடும். வேறு பகுதியில் முட்டையிடாது. விளைவு அதே வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதியிலேயே முட்டையிடும் என்பதால் பெண் ஆமைகள் மட்டுமே உருவாகும்.

தீர்வு

பொதுவாக பச்சை கடல் ஆமைகள் 60 முதல்  70 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்பதால் இன்னும்  சில ஆண் ஆமைகள் இருக்கும் என்பதே உயிரியலாளர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். இதனால் அதிக வெப்பமான கடற்கரை பகுதிகளில் நிழற்குடைகளை அமைப்பது அல்லது மணலில் தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்வதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆஸ்திரேலியா அரசாங்கமும்  ரெய்னே  தீவு மீட்பு திட்டம் மூலம் அங்குள்ள உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.