கங்கையின் நிலையை நோக்கி காவேரி ?!!

Date:

பூவார் சோலை மயிலாடப்

புரிந்து குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருக அசய

நடந்தாய் வாழி காவேரி….   

                                                         – சிலப்பதிகாரம்.

 இப்படி பண்டைத்தமிழர்களால் கொண்டாடப்பட்ட பொங்குபுனல்   காவிரி இன்று குப்பைகளின் வழியே சுழித்து  ஓடுகிறது. மாதந்தோறும் திருவிழாக் காணும் தமிழர் மரபில் ஆடி மாதத்திற்கென தனிச்சிறப்புண்டு.  ஆடிப்பெருக்கு  தினத்தின் போது மண் வளத்தையும், மக்கள் நலத்தையும் செழிக்கச்செய்யும் நதிகளை வழிபடுவர் தமிழ்மக்கள். காலங்காலமாய் நடைபெற்று வந்த இந்நிகழ்வு தற்போது நாம் வணங்கும் காவிரித்தாயின் வளத்திற்கு எதிராகவே திரும்பியுள்ளது.

1500 கிலோ எடையுள்ள பழைய துணிகளை பணியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று  தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக்  கொண்டாடப்பட்டது. திருச்சியில் ஆடிப்பெருக்கினையொட்டிப்  பல்லாயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் கோவில்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர். காவிரியில் குளித்த மக்கள் தங்கள் பழைய ஆடைகளை வேண்டுதலின் காரணமாக ஆற்றின் கரைகளிலேயே விட்டுச் சென்றனர். இதனால் காவிரியின் கரைகளில் ஆடைக்கழிவுகள் மலை போல் குவிந்தது.

POLLUTION IN CAUVERY RIVER
CREDIT: DAILYO

அடுத்த நாள் காவிரியின் கரைகளை  சுத்தம் செய்ய பணியாளர்கள் செல்ல, அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி  காத்திருந்தது. 1500 கிலோ எடையுள்ள பழைய துணிகளை  பணியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

அறிந்து தெளிக!
சென்ற வருடம் ஆடிப்பெருக்கு அன்று காவிரியில்  தேங்கிய குப்பைகளின் எடை  2500 கிலோ ஆகும்.

இந்தியாவில் இதுபோன்ற பல ஆறுகள் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அசுத்தமாக்கப்பட்டு வருகின்றன. இவற்றினால் நீர்மாசுபாடு ஏற்படுவதோடு நீர்நிலை உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. தொழிற்சாலைக்கழிவுகள் ஆற்றுநீரில் கொட்டப்படுவதை எதிர்த்துப்  போராடும் பொதுமக்களே ஆற்றை அசுத்தப்படுத்தும் செயல்களில் இறங்குவது  தவறு என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் காவிரிக்கும் கங்கையின் நிலைமைதான்.

பற்றாக்குறைப் பட்டியலில் தண்ணீர்!?

இந்தியாவில் நிலத்தடி நீரினை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதை விடக்கொடுமை 2017- ல் தமிழகத்தின் வருடாந்திர மழை சராசரியினை  விட 6% அதிகம் பெய்த போதிலும் நம்மால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இயலவில்லை என்பதுதான்.

இந்தியாவிலேயே அதிகம் மாசடைந்த ஆறு கங்கை தான்.

பருவ மழைகள் காலம் மாறி பெய்யும் இக்காலத்தில், நமக்குக்  கிடைத்திருக்கும்  ஆற்றுநீரை திறம்பட சேமித்து, பயன்படுத்த வேண்டியது நம் கடமையாகும். தேவைகளைப்  பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவின் பெரிய ஆறுகளான கங்கை, யமுனா போன்றவை மக்களின் இறைநம்பிக்கையின் மீதான தவறான புரிதலின்  விளைவாகத்  தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. இந்தியாவிலேயே அதிகம் மாசடைந்த ஆறு கங்கை தான். இவ்வாறு மாசடையும் நீரினைப் பயன்படுத்துவதால் மக்களும் சுகாதார பாதிப்பினை அடைகிறார்கள். நன்னீர் சரியாக பராமரிக்கப்படாமல் போகவே அது சாக்கடை உருவாக வழிவகுக்கிறது.

சாக்கடையால் ஏற்படும் பாதிப்புகளைக்குறித்து சொல்லத்தேவையில்லை. எனவே தண்ணீரை தேவைக்கேற்ப பயன்படுத்தவும், மாசுபடுத்தாமல் வாழவும் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

 வருடந்தோறும் நீர்நிலை மாசுபாடுகளால் உயிரிழப்பு நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

இனி என்ன செய்யலாம்?

நீர்நிலையில் ஏற்படும் சிறிய  மாறுதல்கள் கூட இயற்கைச் சமநிலையை பெருமளவில் பாதிக்கும். கந்தையானாலும் கசக்கிக் கட்டு , கூழானாலும் குளித்துக் குடி என்று சுத்தத்தை வலியுறுத்திய தமிழ்ச் சமுதாயம்  இன்று பொதுசுகாதாரத்தையும் பேணவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  தண்ணீரின் தேவை வருடந்தோறும் அதிகரித்துவரும் நிலையில் அதற்கேற்ப சிக்கன நடவடிக்கைகளும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.  வருடந்தோறும் நீர்நிலை மாசுபாடுகளால் உயிரிழப்பு நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இவை மக்களின் கவனக்குறைபாடுகளாலும் , அரசின் மெத்தனப்போக்கினாலும் நடைபெறுபவை.

DXitvfyW0AAPKCg
credit: central pollution control board

இப்பொழுது நம் செய்ய வேண்டியவையெல்லாம் தனி மனித சுத்தத்தையும், பொது சுகாதாரத்தையும் ஒரு சேர பாதுகாப்பது தான். இயற்கை அளித்த எல்லா வளங்களையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் கடமை நமக்கிருக்கிறது. எனவே தேவையை அறிந்து செயல் பட்டால் எதிர்காலம் நிச்சயம் வசந்த காலமாக இருக்கும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!