டெல்லியில் மிக மோசமான காற்றின் தரம் – வரலாற்றில் முதல் முறை

0
457
தலைநகர் டெல்லி வழக்கம் போல் இந்த ஆண்டும் கடுமையான காற்று மாசால் திண்டாடுகிறது. டெல்லியில் நிலவும் காற்று மாசு அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.  சமீப காலத்தில் இந்த அளவுக்கு டெல்லியில் காற்றின் தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை எனத் தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் எனக் கூறி அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில், இந்தியா கேட் பகுதியில் பனியுடன் சேர்ந்து புகைப் படலமாக எங்கும் காட்சி அளித்தது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன. நடைபயிற்சி சென்றவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையே இதற்கு காரணம் ஆகும்.

காற்றுத் தரக் குறியீட்டு எண் 50-க்குள் இருப்பதே சரியானது. எனினும், 100-லிருந்து 200-க்குள் இருந்தால் மிதமானது. ஆனால்,  டெல்லியின் சில பகுதிகளில் இன்று காற்றுத் தரக் குறியீட்டு எண் 469 ஆக உயர்ந்துள்ளது.  இது மிகக் கடுமையாகக் காற்று மாசு அடைந்திருப்பதை காட்டும் அறிகுறி என்று மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Credits : Mocomi

இது தொடர்பாக சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் புரே லால் கூறுகையில், டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம் அடையாது என்று நம்புவோம். ஆனால், நிலைமை மோசமாகி விட்டால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகிலுள்ள மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகளை எரிப்பதும், காற்று வீசும் வேகம் குறைந்ததுமே இதற்கு காரணம் என்று காற்று தரம் குறித்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றுத்தரம் மோசமான நிலையில் இருப்பதால் தற்போது டெல்லி முழுவதும் கட்டுமான பணிகளுக்கு பத்து நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.