நீங்கள் சுற்றுலா விரும்பிகளா? புகைப்பட ஆர்வலர்களா? இயற்கையை உலகை வித்தியாசமான கோணத்தில் ரசிக்க விரும்புகிறீர்களா? தாராளமாக மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியமறைவைக் காண , ஒரு முறை நீங்கள் நியூயார்க் நகரத்திற்கு சென்று வரலாம்.
அங்கு அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா? காலம் காலமாக இரு மலைகளுக்கு நடுவில் மறையும் அல்லது உதிக்கும் சூரியனைத் தானே கண்டு ரசித்திருக்கிறோம்.ஆனால் நியூயார்க்கின் மான்ஹாட்டன்ஹென்ஜ் (Manhattanhenge, Newyork) என்ற இடத்தில் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட வீதிகளுக்கு நடுவில் பேரெழிலுடன் மறைகிறது சூரியன். “மான்ஹாட்டன்ஹென்ஜ் நிகழ்வு” என்றே இது அழைக்கப்படுகிறது.
வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கோடைகாலத்தில் இந்நிகழ்வு நிகழ்கிறது.
இந்த அழகிய மற்றும் அதிசய நிகழ்வினை தினமும் எல்லாம் நம்மால் காண முடியாது. வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கோடைகாலத்தில் இந்நிகழ்வு நிகழ்கிறது. நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் இருந்தீர்களேயானால் உங்கள் வாழ்வின் மிக அற்புதமான தருணமாக அது இருக்கலாம்.
‘மான்ஹாட்டன் தீவு’ என்ற சொல்லின் முதல் பாதியையும், ‘ஸ்டோன்ஹென்ஜ்’ என்ற சொல்லில் வரும் ஹென்ஜ் என்பதையும் இணைத்து மான்ஹாட்டன்ஹென்ஜ் என இவ்விடம் அழைக்கப்படுகிறது.
மான்ஹாட்டன்ஹென்ஜ் சூரியன் மறையும் அழகை ரசித்த பின் இந்த இடம் எதார்த்தமாக கட்டமைக்கப்பட்ட அதிசயம் என்றே தோன்றும்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆயிரக்கணக்கான மக்களின் நடுவே, மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்திற்கும், குவிந்திருக்கும் கேமரா குவியங்களுக்கும், அந்த தெருக்களில் அசாத்தியமாக உயர்ந்திருக்கும் கண்ணாடி கட்டிடங்களின் பிரதிபலிப்புகளுக்கும் நடுவே இளஞ்சிவப்பு வண்ண கதிரவன் நேர்த்தியாக மறைவதை காண்பதென்பது எத்தனை பேரனுபவமாக இருக்கும்.
அத்தகைய அதிசய நிகழ்வு தான், இன்றும், நாளையும் நியூயார்க் நகரில் நடக்க இருக்கிறது. இன்று இரவு சரியாக 8.20 மணிக்கு சூரியன் முழுமையாக மறைவதையும், நாளை இரவு 8.21 மணிக்கு பகுதி சூரியன் மறைவதையும் கண்டு களிக்கலாம்.
- மே 29, இரவு 8:13 மணிக்கும்
- மே 30, இரவு 8:12 மணிக்கும்
- ஜூலை 12, இரவு 8:20 மணிக்கும்
- ஜூலை 13, இரவு 8:21 மணிக்கும் மான்ஹாட்டன் நகரில் காணலாம்.
சூரிய மறைவை முழுமையாக கண்டு ரசிக்க ஏதுவான வீதிகளாக 14வது வீதி, 34வது வீதி, 42வது வீதி, 59வது வீதி மற்றும் 79வது வீதி ஆகியன அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் நேரம் இருப்பவர்கள் விரைவாகவே சென்று விட்டால் விருப்பமான கோணத்தில் சூரியனை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்
உலகின் அனைத்து நகரங்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஹென்ஜ் சூரியனுக்கு சாட்சியாகும்
இதை பார்க்க நாங்கள் அவ்வளவு தூரம் பயணிக்க முடியுமா என்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்காக தான் வடிவமைப்பாளர் ஆண்ட்ரூ ஹில் (Andrew Hill), NYCHenge என்ற ஒரு ஒருங்கிணைந்த வரைபடத்தை வடிவமைத்திருக்கிறார். அதில் வருடத்தின் எல்லா நாட்களிலும் சூரியன் மறையும் இது போன்ற சந்தர்ப்பங்களை குறித்திருக்கிறார்.
மேலும் உலகில் ஹென்ஜ் சூரியனை பார்க்க இயலும் ஒரே இடம் நியூயார்க் மட்டுமே இல்லை என தெரிவிக்கிறது அந்த வரைபடம் உலகின் அனைத்து நகரங்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஹென்ஜ் சூரியனுக்கு சாட்சியாகும் என்கிறார் ஹில்.