2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து ஒரு மாதமே முடிந்துள்ள நிலையில் அதிதீவிர வானிலை, உலகின் பல இடங்களில் அதன் வேலையை காட்டத் துவங்கியுள்ளது. சில இடங்களில் இதுவரை அறியப்பட்ட அதிகப்பட்ச அல்லது குறைந்தபட்ச வெப்பநிலை சாதனையை முறியடித்தும் விட்டது. மத்திய மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் குறைவாக -38 டிகிரி பாரன்ஹீட் தான் இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை மூன்று இலக்கங்களில் இருப்பது விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காற்று குளிர்விக்கும் காரணி என்பது குளிர் காற்று படுவதால் மனித உடலில் எவ்வளவு வெப்பம் இழக்கப்படுகிறது என்பதாகும்.
Credit: wion
அமெரிக்கா
கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் உள்ள ஒஹேர் சர்வதேச விமானநிலையத்தில் வெப்பநிலை -23 டிகிரிகள் இருந்துள்ளது. இது இதுவரை அங்கு அறியப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலையான 1966 ஆம் ஆண்டு இருந்த -15 ஐ விட இது குறைவு. அன்று அங்கு காற்று குளிர்விக்கும் காரணி (Wind Chill Factor) -52 டிகிரி. காற்று குளிர்விக்கும் காரணி என்பது குளிர் காற்று படுவதால் மனித உடலில் எவ்வளவு வெப்பம் இழக்கப்படுகிறது என்பதாகும். வியாழக்கிழமையும் வெப்பநிலை -27 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடும் குளிரால் சிகாகோவில் உள்ள பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. அங்குள்ள Lincoln Park Zoo, The Art Institute மற்றும் Field Museum போன்றவையும் மூடப்பட்டன. இல்லினாய்ஸ், விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. டெட்ராய்ட் நகரத்தில் புதன் கிழமை இரவு வெப்பநிலை -12 டிகிரி பாரன்ஹீடாகவும் (-24 டிகிரி செல்சியஸ்), காற்று குளிர்விக்கும் காரணி -35 டிகிரியாகவும் இருந்துள்ளது (-37 டிகிரி செல்சியஸ்). மழை, பனி, வெயில் என எதையும் பொருட்படுத்தாது வேலை செய்யும் தபால் சேவையும் கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மின்னெசோட்டாவிலும் காற்று குளிர்விக்கும் காரணி -70 டிகிரி. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நிலை மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெனில் அந்நாட்டு தேசிய வானிலை மையத்தின் கருத்துப்படி காற்று குளிர்விக்கும் காரணி -25 டிகிரி இருந்தால் அது 15 நிமிடங்களில் மனிதனின் தோலை உறையச் செய்துவிடும். அதுவே -50 க்கும் கீழே இருந்தால் அந்த காற்று மனிதர்கள் மீது படும் போது மனிதனின் தோலை வெறும் 5 நிமிடங்களில் கூட உறைய வைத்து விடும். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மின்னெசோட்டாவில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமைக்குள் அதிகரித்து குளிர் குறையும் என தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.
Credit: Stripes
பாதுகாப்பு முயற்சிகள்
உறைய வைக்கும் இந்த பனி மற்றும் குளிரால் மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. பல ஆபத்தான சாலைகளும் உயிரிழப்புகளுக்கு காரணம். பலர் பனி உறைந்த சாலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இந்தக் குளிரில் பொதுவாக வீடற்றவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகர் முழுவதும் வெதுவெதுப்பான தங்கு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குளிரில் இருந்து முதியவர்களையும், வீடு இல்லாதவர்களையும் பாதுகாப்பதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சிகாகோவில் பல பேருந்துகள் வெப்பத்தை வழங்கும் முகாம்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. சில பேருந்துகளில் செவிலியர்களும் உள்ளனர். அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவை விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றத்திற்கான சான்றாக எண்ணாமல் மோசமான வானிலையாக மட்டுமே கருதுகின்றனர்.
அடிலெய்ட் நகரத்தில் கடந்த வாரம் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியுள்ளது.
ஆஸ்திரேலியா
ஒரு பக்கம் குளிர் வட்டி வதைக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவிலோ டிசம்பர் மாதம் முதல் அதிகபட்ச வெப்பநிலை நிலவுகிறது. அங்கு உள்ள அடிலெய்ட் நகரத்தில் கடந்த வாரம் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியுள்ளது. அதாவது இப்போது நிலவும் உச்சபட்ச வெப்பம், 1939 ஆம் ஆண்டு அங்கு நிலவிய அதிகபட்ச வெப்பநிலையை முறியடித்துவிட்டது. அங்கு கடந்த 80 வருடங்களில் இப்போது தான் இந்த அளவு அதிக வெப்பநிலை நிலவுகிறது. ஆறு வாரங்களுக்கு முன் கடைசி மழைப் பொழிவை சந்தித்த ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரங்களிலும் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வண்ணம் இந்த அதிதீவிர வெப்பநிலை நிலவி வருகிறது.
Credit: The Atlantic
பாதிப்புகள்
இதனால் அங்கு நிலவிய நீர் பற்றாக்குறையால் வெப்ப ஸ்டோர்க் மற்றும் உடலில் நீர்வற்றிப்போனதால் 90 காட்டுக்குதிரைகள் இறந்துள்ளன. நவம்பர் மாதம் அங்கு இருந்த வெப்பத்தால் ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு அளவு பிளையிங் பாக்ஸ் எனப்படும் ஒரு வகை வௌவால்கள் இறந்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம் கூறியுள்ளனர். ஏனெனில் இந்த வௌவால்கள் தாங்கக் கூடிய அதிகபட்ச வெப்பம் 107 டிகிரி தான். ஜனவரி மாதம் வரை வெப்பத்தால் மட்டும் அங்கு சுமார் 23,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
Credit: ABC
வானிலை ஆய்வாளர்களை பொறுத்தவரை சுமார் 50 வருடங்காகவே வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அதாவது 1910 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா மற்றும் அதை சுற்றிய கடல்களில் வருடத்திற்கு 1.8 டிகிரி பாரன்ஹீட் (1 டிகிரி செல்சியஸ்) அளவு வெப்பம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை சுற்றிய கடல்களின் கடல் மட்டமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Berkeley Earth என்ற நிறுவனம் செய்த ஆராய்ச்சியின் படி 1850 ல் இருந்து பார்க்கும் போது 2018 நான்காவது அதிக வெப்பமயமான ஆண்டாகும். 2015,2016,2017 மற்ற மூன்று ஆண்டுகளாகும். 2018 ஆம் ஆண்டு வெப்பம் கொஞ்சம் குறைந்து இருந்தாலும் வெப்பமயமாதலில் நல்ல மாற்றம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
கடந்த வாரம் அளவிடப்பட்டதில் பூமி சராசரியை விட 0.54 டிகிரி அதிக வெப்பமாகி உள்ளது. இது 1979 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இல்லாத அளவு ஆகும். அதே சமயம் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாதபடி 1.6 டிகிரி வெப்பமாகியுள்ளது. இதற்கான தரவுகள் நாசா மற்றும் மேய்ன் பல்கலைகழகங்களில் இருந்து பெறப்பட்டவையாகும். மொத்தத்தில் மனிதனால் ஏற்பட்ட வெப்பமயமாதலும் காலநிலை மாற்றங்களுமே ஆஸ்திரேலியாவில் நிலவும் அதீத வெப்பத்திற்குக் காரணம்.