‘சுத்தம் சோறு போடும்’ , ‘ தூய்மை இந்தியா’ என்று சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரும் நம் நாட்டின் நகரங்கள் தான், உலகில் மோசமாக பாதிப்படைந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
காற்று மாசுபாடு தீமைகள்
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் சராசரி வாழ்நாள் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சூழலுக்குத் தீங்கினை விளைவிக்கும் இந்தக் காற்று மாசு, மனிதர்களின் வாழ்நாளையும் குறைப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்களின் மிக நுண்ணிய வடிவமான, பி.எம் 2.5 (PM 2.5) எனப்படும் மாசுத் துகள்களை சுவாசிப்பதால் மனித உடலில் ஏற்படும் தாக்கம் குறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம், மற்றும் உலகின் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
185 நாடுகளில், காற்றில் கலந்திருந்த சுமார் 2.5 மைக்ரோன்கள் அளவிலான சிறிய மாசுத் துகள்கள் (Particulate Matter) ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சிறிய துகள்கள், மனிதர்களின் நுரையீரல்களுக்குள் ஆழமாய் சென்று மாரடைப்பு, பக்கவாதம், சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்களைக் கூட உருவாக்கும் அளவிற்கு ஆபத்தானவை.
இந்தத் துகள்கள் மின் உலைகள், கார்கள், கனரக வாகனங்கள், நெருப்பு, வேளாண் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் உருவாகின்றன. இத்தகைய காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் வாழ்நாள், 1.53 ஆண்டுகள் குறைந்துள்ளது.
ஆசியாவில் காற்று மாசுபாடுகளால் ஏற்படும் உயிரிழப்பு ஆபத்து குறைக்கப்படும் என்றால், 60 வருடங்கள் வாழக்கூடிய ஒருவர் 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக, 85 அல்லது அதற்கு மேல் வாழ முடியும் என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய மக்களின் ஆயுட்காலம் 1990-க்கு முன் இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் நான்கு வருடம் அதிகமாக வாழ்கின்றனர். 1990-2013-க்கு இடைப்பட்ட காலத்தைக் கணக்கிடும் பொழுது ஆண்களின் ஆயுட்காலம் 6.9 வருடமும், பெண்களின் ஆயுட்காலம் 10.3 வருடமும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1990-இல் அதிகபட்சமாக ஆண்களுக்கு 57.25 வருடங்களும், பெண்களுக்கு 59.19 வருடங்களும் ஆயுட்காலமாக இருந்தது. 2013-ஆம் ஆண்டில் ஆண்களின் சராசரி வாழ்நாள் 64.16 வருடங்களாக உயர்ந்துள்ளது. பெண்களின் சராசரி வாழ்நாள் 68.48 வருடங்கள் என உயர்ந்துள்ளது.
இதற்குக் காரணம் நம் நாட்டில் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சியே ஆகும். ஆனால், மருத்துவ வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றத்தை சுற்றுச்சூழல் மாசு குறைத்து விடும் என்று தோன்றுகிறது.