கஜா புயல் இன்று மாலை கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலைப் பற்றி அறிவித்த போது மக்கள் கலக்கமடைந்தாலும், ரெட் அலெர்ட் திரும்பப் பெறப்பட்டதும் ஓரளவு பயமின்றி இருக்கின்றனர். சரி கஜா இருக்கட்டும், அதைப் போலவே தமிழகத்தைத் தாக்கிய பிற புயல்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாமா?
1. அதி தீவிரப் புயல் (1994)
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர, சென்னையைத் தாக்கிய வர்தாவைப் போன்ற அதிதீவிரப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
Also Read: புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது ?

1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புயல், சென்னை – கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பின்னரும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி அச்சுறுத்தியது. இப்புயலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
2. ஜல் புயல் (2010)
கடந்த 2010-ஆம் ஆண்டில் உருவான ஜல் புயல், சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்ற போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டது.
3. தானே புயல் (2011)
ஆனால், அடுத்த ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக சீரடைய வெகு காலம் எடுத்துக் கொண்டது. 2011-ல் டிசம்பர் 30-ல் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே அந்த தானே புயல் கரையைக் கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. இதில் தமிழகத்தில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வீணாகின.
Also Read: அச்சுறுத்தும் கஜா புயல் – பொதுமக்களுக்கு 10 டிப்ஸ்
4. நீலம் புயல் (2012)
நீலம் புயல் (Cyclone Nilam) கடந்த 2012 – ஆம் ஆண்டு, அக்டோபர் 28 – ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31-ம் தேதி புயலாக மாறியது. நீலம் என பாகிஸ்தான் நாடு பெயர்சூட்டிய இந்த புயல், மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது. அப்போது, கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.
5. வர்தா புயல் (2016)
22 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 -ஆம் ஆண்டு சென்னையை அதி தீவிரப் புயலான வர்தா புயல் தாக்கியது. இந்தப் புயலுக்கு ‘வர்தா’ என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது. உருது மொழிச் சொல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்பது பொருளாகும். சென்னையை புரட்டிப் போட்டு தாண்டவமாடிய இந்தப் புயலால் ஏகப்பட்ட மரங்கள் விழுந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. சில நாட்கள் மின்சாரம் இல்லை. இதனால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டது. வர்தா புயலுக்கு ஏறத்தாழ 20 பேர் உயிரிழந்தனர்.
Also Read: பருவமழை காலங்களில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்
6. ஓகி புயல் (2017)
2017 சென்ற வருட இறுதியில் கன்னியாகுமாரியைத் தாக்கிய ஓகி புயலை யாரும் மறந்து விட முடியாது. கடுமையான சேதத்தை விளைவித்த இந்தப் புயலின் போது பெய்த கன மழை காரணமாக மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் 11 பேர் பலி ஆயினர். அத்தோடு தென்னை, ரப்பார், வாழை மற்றும் தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், ஏராளமான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன. தமிழகத்திற்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்திய இந்தப் புயல்களின் பட்டியலில் கஜா புயலும் சேருமா என்பது இன்று மாலை தெரிந்து விடும்.