ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் இருந்து 2,750 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கோகோஸ் தீவு. ஆஸ்திரேலிய பிராந்தியத்தின் கடைசிப்புள்ளி இந்தத்தீவு. இந்தியப் பெருங்கடலின் எல்லைக்குள் இருக்கும் இந்த தீவில் மனிதர்களின் நடமாட்டமே இல்லை. அந்த பகுதிகளில் இருக்கும் தீவுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து ஆய்வு செய்யப் போனவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

தீவு முழுவதும் குப்பைகள். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகள் அந்த தீவில் கொட்டிக்கிடந்திருக்கின்றன. இதில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஷூக்கள் மற்றும் 370,000 டூத் பிரஷ்கள் இருக்கும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சைன்ஸ் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports ) தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் இந்த தீவுக்கூட்டத்தில் மட்டும் சுமார் 238 டன் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
இங்கே மொத்தம் 27 தீவுகள் அருகருகே அமைந்துள்ளன. இதில் பாட்டில் மூடிகள், உறிஞ்சு குழாய்கள், ஷூக்கள், செருப்புகள் அதிகமாக தேங்கியிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்து 500 பேருக்கான வீட்டுவசதி பொருட்களை தயாரிக்கலாம் என்கிறது ஆய்வு.

சுற்றுசூழலுக்கு ஏற்படும் மிகப்பெரிய தாக்கம் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்குகள் தான். கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 12.7 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இப்படி கடற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தீவுகளில் கரை ஒதுங்குகின்றன. இதனால் கடல் மற்றும் காடுசார் உயிரினங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றன. தன் தேவைப்பற்றிய புரிதல் இல்லாத மனிதர்களாலேயே இந்த உலகம் அழிவைச் சந்திக்க இருக்கிறது.

பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் குறைக்க பல நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன என்பது உண்மை தான் எனினும் செயல்பாட்டின் வீச்சு மிகவும் குறைவே. அத்தோடு நம்மிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்ச்சி செய்வதன் மூலம் ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம்.