மலரும் மனிதம் – தாய் குகை தந்த நாயகர்கள்..!

0
58

மகிழ்ந்திருக்கும் தருணங்களை விடவும் இன்னல்கள் சூழ்ந்திருக்கும் நேரங்களில் மட்டுமே எந்தவொரு பாரபட்சமுமின்றி உதவியை நாடுதலும் , வேறுபாடுகள் களைந்து ஓடிச்சென்று உதவுவதுமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இக்கட்டான நேரங்களில் தான் சாதாரண மனிதர்களும் கதாநாயகர்களாக வடிவெடுக்கிறார்கள்.

குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்

தாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் (Tham Luang) என்ற குகைக்கு கடந்த ஜுன் மாதம் 23–ந் தேதி சுற்றுலா சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர்.

அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இதையடுத்து அவர்களை காப்பாற்ற தாய்லாந்து கடற்படையினர் களத்தில் குதித்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க தங்களது நாட்டு கடற்படை வீரர்களை அங்கு அனுப்பி வைத்தன.

அந்த குகைக்குள் அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், 9 ஆம் தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.

மீதமிருந்த மற்ற 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் நேற்று கடற்படையினர் மீட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அளித்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நாயகர்காளாக உருவான மூன்று பேரைப்பற்றி இப்போது பார்க்கலாம்.

1. உயிர் காக்கும் வித்தையை கற்று தந்த நாயகன்

அவர்கள் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த குகைக்குள் கால்பந்து விளையாடும் 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது.

ஆனால், எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இல்லாமலும் , 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினம் என்பதால் அந்த சிறுவர்களை பாதுகாக்க பயிற்சியாளர் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளார்.

அவர்களிடம் இருந்த உணவை பகிர்ந்து கொண்டு சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் பயிற்சியாளர் எகாபோல் (Ecc Gopaul) பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்துள்ளார். இந்த வழிமுறைதான் அவர்களை 15 நாட்களுக்கு மேலாக உயிருடன் வைத்துள்ளது.சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளர் தான் அவர்களுக்கு உயிர் பிடிக்கும் வித்தையை கற்றுத்தந்த கதாநாயகன்.

2. விடுமுறை கேளிக்கைகள் துறந்து குகைக்குள் சென்ற நாயகன்

இந்த சம்பவத்தில் குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 பேரையும் வெளியே பத்திரமாக மீட்டுவிட்டு கடைசியாக வெளியே வந்தவர்தான் மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ் (Richard Harris).

விடுமுறை எடுத்துவிட்டு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ், தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்கும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஒரு குகை நீச்சல் பயிற்சி வீரரும் கூட. இந்த ஒரு முக்கியத் தகுதிதான் இவரையும் தாய்லாந்து குகை சம்பவத்தில் இன்று கதாநாயகனாக்கியுள்ளது.

நண்பர்களின் அழைப்பை ஏற்று, தாய்லாந்து குகையில் மீட்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ரிச்சர்ட் ஹாரிஸ், தேவையான மருந்துகளுடன் குகைக்குள் சென்று கடைசி வரை சிறுவர்களுடன் இருந்து அவர்களது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். ஒவ்வொருவராக மீட்கப்படும் போது, அடுத்து யாரை மீட்க வேண்டும் என்பது வரை அவர் தான் முடிவு செய்து கொடுத்துள்ளார்.

3. தன்னுயிர் ஈந்து சிறுவர்களை காத்த நாயகன்

குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்ற தனக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜனை அவர்களுக்கு வழங்கிவிட்டு திரும்ப நீந்தி வரும்போது உயிரிழந்திருக்கிறார் முன்னாள் கடற்படை வீரர் சமன் குனன் (Suman Gunan)என்ற கதாநாயகன்.

குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீரர் சமன் குணன் குகையின் உட்புறமாக நீந்திச் சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்தார். இவர் கொண்ட சென்ற சிலிண்டர்கள் அங்குள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லாததால், தான் நீத்திச் செல்லும்போது பயன்படுத்திய ஆக்ஸிஜன் சிலிண்டரை குகையின் உள்ளே சிக்கிக் கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிவிட்டு, வெறுமனே நீந்தி வந்தார்.

ஆனால்  குகையை விட்டு வெளியே வருவதற்குள் சமன் குணன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மற்ற கடற்படை வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

 

மனிதம் இன்னும் முழுதாக மரித்துவிடவில்லை என்று உணர்த்தவே காலம் சில சம்பவங்களையும் அதன் மூலம் சில கதாநாயகர்களையும் பரிசளித்துக்கொண்டே இருக்கிறது.