மயில்கள் பற்றி நாம் பள்ளி பாடப் புத்தகத்திலேயே படித்திருப்போம். இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவையாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பறவை இனமான மயில்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 14 தகவல்கள்!
1. மயில்களின் ஆயுட்காலம்
மயில்கள் 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது. ஆனால், பூங்காக்கள் மற்றும் மனித தடைக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இந்தியாவில் பெரும்பாலான மயில்கள் மனிதர்கள் வேட்டையாடுவதால் உயிரிழக்கின்றன.

2. மயில்களுக்கு நீச்சல் தெரியுமா?
கால் விரல்களிடையே சவ்வுகள் இருந்தாலும் மயில்கள் நீச்சலடிப்பதில்லை. அந்த சவ்வுகள் தரைப்பகுதியை, மரக்கிளைகளை பற்றிக்கொள்ள மட்டுமே உதவுகின்றன. ஆண் மயில்கள் அழகான தோகையை கொண்டிருந்தாலும், அது நீச்சலடிக்க உதவுவதில்லை.
3. மயில்களின் வடிவம்
பொதுவாக மயில்களின் உடல் அழகான வடிவம் கொண்டிருப்பதால் கண்களை கொள்ளை கொள்கிறது. உலகில் பல வகை மயில்கள் இருந்தாலும், அவை இந்திய மயில்கள் போல் அழகாக இருப்பதில்லை. பார்ப்பதற்கு பெண் மயில்களை விட ஆண் மயில்கள் தான் மிகவும் அழகாக இருப்பவை. இருந்தாலும், கவிஞர்கள் ‘மயில் போல பொண்ணு ஒன்னு‘ என்று கற்பனை செய்வதெல்லாம் ஆண் மயிலை மனதில் நினைத்தே என்பது மட்டும் முரணாகவே இருக்கிறது.
4. கலாச்சாரத்தில் இடம் பிடித்த மயில்கள்
மயில்களுக்கு புராணங்களிலும், கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க இடமுண்டு. மத வழிபாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சரஸ்வதிக்கு அடையாளமாகவும், கிரேக்கர்கள் வழிபாட்டிலும் இடம்பிடித்துள்ளது.
5. வெள்ளை மயில் தோன்றுவது எப்படி?
வண்ணமயமான மயில்களில் சில குறிப்பிட்டவை தெரிவு செய்து, கலப்பு முறையில் மனிதர்கள் இனப்பெருக்கம் செய்வதில் மயில்கள் வண்ணமற்று உருவாகின்றன. இதற்கு காரணம் உண்மையில் ஒரு மரபணு மாற்றமே ஆகும். இதுவே வெள்ளை மயில்கள் உருவாக காரணம்.
பிற வெள்ளை நிற விலங்குகள் உருவாக ‘அல்பினிசம்’ எனப்படும் மெலனின் நிறமி குறைபாடு தான் காரணம். ஆனால், வெள்ளை நிற மயில்கள் உருவாக அல்பினிசம் காரணமல்ல.
Also Read: நீங்கள் இதுவரை பார்த்திராத 10 வெள்ளை நிற விலங்குகள் – கண்ணைக்கவரும் புகைப்படங்கள்!!

6. மயில்களின் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடுதல்
மயில் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது என்பது பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் உண்மை இதுதான். பெண் மயில்களை கவர ஆண் மயில் தன் தோகைகளை விரித்து ஆடுகின்றன. பிறகு கவரப்பட்ட பெண் மயிலுடன் இனச்சேர்க்கை முடிந்தபின் பெண் மயில்கள் 3 முதல் 6 முட்டைகள் இடும். அது அடைகாத்து குஞ்சு பொரித்ததும் வளரும் வரை கோழிகளை போன்று தாய் மயில் அவற்றை பாதுகாக்கும்.
7. ஒற்றைத் துணை இல்லை
மயில்கள் ஒற்றைத் துணையுடன் வாழ்வதில்லை. அவை இனச்சேர்க்கைக்கு வெவ்வேறு மயில்களையே நாடுகின்றன. அதேபோல் இனப்பெருக்கக் காலத்தில் பல துணையுடனும் இணைவதில்லை.

8. மயில்கள் எழுப்பும் ஒலி
மயில்களால் 11 வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும். அந்த ஒலிகள் மனிதர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருக்கும். பொதுவாக மயில்கள் மழையை அறிவிக்க ஒலி எழுப்புகின்றன. நாய்கள் எழுப்பும் ஒலியை ‘குரைத்தல்‘ என்பது போல மயில்கள் எழுப்பும் ஒலியை ‘அகவுதல்‘ என்கிறோம்.
9. மயில்களின் குணம்
மயில்கள் சாந்தமான பறவையாகவே பார்க்கப்படுகிறது. எளிதில் மனிதர்களுடன் பழகும் தன்மை கொண்டுள்ளது. அவை பழகும் மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கி பழகுவதை மயில்கள் விரும்புவதில்லை. வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, மயில்களை வீட்டில் வளர்க்க தடைசெய்கிறது.
Also Read: காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019
10. பாம்பு vs மயில் – யார் வெற்றியாளர்?
காடுகளிலும், வயல்களிலும் மயில்கள் சில நேரங்களில் பாம்புகளை காணநேர்கின்றது. விஷ பாம்புகளானாலும் மயில்கள் தான் நிச்சயம் வெல்லும். மயில்கள் பாம்புகளை பிடித்து உண்ணும். இந்தியாவில் வீட்டில் மயில்கள் வளர்க்க அனுமதியில்லை. கோவில்களில் வளர்க்கப்படும் மயில்கள் அந்த பகுதியில் உள்ள பாம்புகளை துரத்துகின்றன. கோவிலை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரணாக இருக்கின்றது.
11. மயில்களின் பறக்கும் தன்மை
மயில்களுக்கு அழகான நீண்ட தோகை இருந்தாலும், நெடும் தூரம் பறக்க இயலாது. அவை குறிப்பிட்ட தூரம் மட்டுமே பறக்கின்றது. அதிலும் குறிப்பாக தன்னை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளவே பறக்கின்றன.

12. மயில் என்ன சாப்பிடும்?
மயில்கள் தாவரங்கள், விதைகள், பூக்கள், எறும்புகள், தானியங்கள் மற்றும் சிறிய பாம்புகள், தவளைகள், வண்ணத்துப்பூச்சிகள், எலிகள் உள்ளிட்டவற்றை உண்ணுகின்றன.
Also Read: பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!
13. மயிலின் வாழிடம்
மயில்கள் அடர்ந்த காடுகளில் வாழுவதில்லை. அவை குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பிலேயே வாழுகின்றன. இயற்கையாகவே அவை இந்தியா, பர்மா மற்றும் இலங்கையில் பரவலாக காணப்படும்.
14. மயில்கள் அழிய காரணம் என்ன?
வேட்டையாடுதல் மற்றும் மக்கள் தொகைப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த அளவிலான மயில்களே உள்ளன.
Also Read:அழிவின் விளிம்பில் இந்திய பறவைகள்! 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்!
இத்தகைய கண்ணுக்கு அழகான மயில்களை ரசிக்கும் போது இவை அனைத்தையும் நினைவுப்படுத்தி பாருங்கள். அவை அற்புதமான படைப்பாகவும் உங்களுக்கு தோன்றும்.