பெண்களின் பேறுகாலம் என்பது மறுஜென்மம் போன்றது. புதிய உயிர் ஒன்றினை இந்த மண்ணிற்குக் கொண்டுவர அவள் படும் கஷ்டங்களுக்கு இணை சொல்ல யாராலும் முடியாது. இத்தனை வலிகள் நிறைந்த பயணத்திற்கு நடுவே இயற்கையின் அவிழ்க்க முடியா முடிச்சுகளின் வழி காலம் சில நேரங்களில் பயணிக்கிறது.

பிறந்த குழந்தை சராசரியாக இரண்டரை கிலோ எடை உடையதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பத்து மாதத்திற்கு முன்னே குழந்தை பிறப்பு நடைபெறுமேயானால் அது குழந்தையின் எடையை கணிசமாக பாதிக்கும். எடை மட்டுமல்லாது மூளை, இதயம், நரம்பியல் மண்டலம் ஆகியவையும் இதனால் பாதிப்படையக்கூடும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
பல்வேறு சிக்கல்களுக்குப் பின் பிறந்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் தான் இருந்திருக்கிறது.
ஜப்பான் குழந்தை
மேலே கூறிய அதே சிக்கலை ஜப்பானைச் சேர்ந்த தம்பதியர் ஒருவரும் சந்தித்திருக்கின்றனர். ஆறாவது மாதத்தில், வழக்கமான சோதனையின் போது அவர்களுடைய குழந்தையின் வளர்ச்சி போதுமான அளவு இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததும், உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை கியோ மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்டனர். பல தடைகளையும் மீறி ஆண் குழந்தையை வெளியே எடுத்து சாதனை புரிந்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

பல்வேறு சிக்கல்களுக்குப் பின் பிறந்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் தான் இருந்திருக்கிறது. ஆறுமாதத்தில் பிரசவித்த குழந்தை என்பதால் இதனை எதிர்பார்த்தே இருந்தார்கள் மருத்துவர்கள். அதிர்ஷ்டவசமாக குழந்தையின் இதயம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகள் நன்றாகவே இருந்திருக்கிறது. மருத்துவமனையில் அளிக்கப்பட தொடர் சிகிச்சையின் பலனாக குழந்தையானது 3.2 கிலோ வரை எடை அதிகரித்திருக்கிறது. பிரசவத்திற்கு சில வாரங்களுக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறான் குட்டிப்பையன்.
அதிசயம்
எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு மிகவும் சிக்கலான விஷயம் என்கிறார் எட்வர்ட் பெல் (Edward Bell) என்னும் மருத்துவர். மனிதகுல வரலாற்றிலேயே இதுவரை 4 குழந்தைகள் தான் இந்த அளவிற்கு எடைகுறைவாக பிறந்து உயிர் பிழைத்திருக்கின்றன.
பெல்லிடம் 1936 ஆம் ஆண்டிலிருந்து எடைகுறைவாக பிறந்த குழந்தைகளின் ஜாதகமே இருக்கிறது. கடும் முயற்சி எடுத்து இதனை சேகரித்து வைத்திருக்கிறார் பெல். இதனை இணையம் வழியாகவும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அவருடைய நீண்டகால ஆராய்ச்சியின்படி உலகின் பிறந்த எடை குறைந்த குழந்தைகளின் பட்டியலில் நாம் மேலே பார்த்த குட்டிப்பையனுக்கு நான்காவது இடமாகும். அப்படியென்றால் முதல் மூன்று இடம்?

முதல் குழந்தை டோக்கியோவிலும், இரண்டாவது குழந்தை இல்லினைஸிலும், ஜெர்மனியில் மூன்றாவது குழந்தையும் பிறந்திருக்கின்றன. அவற்றின் எடை முறையே, 265, 260 மற்றும் 252 கிராம்கள் ஆகும்.
பெரும்பாலும் பெண்கள்
பெல்லின் குறிப்பில் இருக்கும் 210 குழந்தைகளில் 75% பெண் குழந்தைகள் தான். எடை குறைவான ஆண் குழந்தைகள் பிறப்பது மிகவும் அபூர்வம். ஏனெனில் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களின் வளர்ச்சியானது மிகவும் வேகம் குறைவு. ஆண் குழந்தை தோன்றி அவற்றின் வளர்ச்சி தடைபடுமேயானால் அதனை பராமரிப்பது கடினம் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்போது தாயின் கருவறை வழியாக போதுமான ஆக்சிஜன் கருவிற்கு கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். ஆனால் பெண் சிசுக்கள் இந்த கடினமான சூழ்நிலையையும் சமாளித்து தேவதையாய் பூமிக்கு வருகிறார்கள்.
இப்படியான குழந்தைகளுக்கு கற்றலில் குறைபாடுகள் வரலாம். ஆனால் தொடர் மருத்துவ ஆலோசனையின் மூலம் இதனைச் சரிசெய்துவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.