வயிற்றில் குழந்தை உருவானது முதலே பல அம்மாக்களுக்கு மகிழ்ச்சியுடன் கவலையும் தொற்றிக் கொள்ளும். குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுப்பதில் இருந்து அதன் பின் அவர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என அவர்களின் கவலைகள் நீண்டு கொண்டே செல்லும்.
குழந்தைகளின் குறைவான எடை என்பது ஊட்டச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறி. அதனால், பல அம்மாக்களுக்கு இருக்கும் முக்கியமான கவலைகளில் ஒன்று குழந்தைகளின் எடை பற்றியது தான்.
நீங்கள் என்ன தான் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தாலும் குழந்தைகளின் எடை அதிகரிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளன.
1. மரபணுக்கள்
குழந்தைகளின் மரபணுக்கள் எடை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாரம்பரியமாக வழி வழியாக வந்த மரபணுக்களில் உள்ள சில மூலக்கூறுகள் குழந்தைகளின் எடை அதிகரிப்பைத் தடுக்கக் கூடும். அப்படி மரபணு காரணமெனில் நீங்கள் எடை ஏற்றுவதற்கு எதுவும் செய்ய தேவையில்லை.
2. கலோரிகள் பற்றாக்குறை
குழந்தைகள் எடை அதிகரிக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம். போதுமான அளவு கலோரிகள் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உடல் எடையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. குழந்தைகள் பல்வேறு காரணங்களால் உணவு மீது வெறுப்புக் காட்டக்கூடும்.
பெற்றோர்கள்குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரே வகையான உணவுகளை குழந்தைகளுக்குத் தருவதால் தேவையான கலோரிகள் கிடைப்பதில்லை. இதுவும் ஊட்டச்சத்து குறைபாடு தான். சரிவிகித உணவு குழந்தைகள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். குறிப்பாகக் குழந்தைகள் தாய்ப்பால் சரியாகக் குடிக்காமல் இருப்பது கூட காரணமாக இருக்கும்.
3. விழுங்கும் திறன்
குழந்தைகளின் வாய் ஆரோக்கியம் கூட குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். இத்தகைய சிக்கல்கள் குழந்தைகளின் விழுங்கும் திறனை பாதிக்கின்றன. சில குழந்தைகள் உணவை மெல்லாமல் விழுங்கிவிடுவார்கள். பொதுவாக தொலைக்காட்சி அதிகம் பார்க்கும் குழந்தைகள் இப்படி செய்வதுண்டு. ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். நன்றாக மென்று சாப்பிடும் உணவு தான் விரைவில் செரிக்கும்.
4. அமிலச் சிக்கல்கள்
சில சமயம் குழந்தைகள் அதிகப்படியான வாந்தி பிரச்சினையால் போதுமான உணவை எடுத்துக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் குழந்தைகளுக்கு ஏற்படும் அமிலப் பிரச்சினைகள் ஆகும். இது குழந்தைகளின் தசைகளை பலவீனமாக்குவதோடு அவர்கள் எடையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
5. கணையச் செயல்பாடு
கணையச் செயல்பாடு சரியாக இல்லாத குழந்தைகளின் எடை அதிகரிக்க வாய்ப்பு குறைவு. இது போன்ற சிக்கல்களால் தளர்வான தசைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
6. குடல் நோய்கள்
சில நோய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. செலியாக் அல்லது க்ரோன் போன்ற குடல் நோய்கள் குழந்தைக்கு இருக்கும் போது அது எடை அதிகரிப்பைத் தடுக்கும்.
7. அதீத சுறுசுறுப்பு
சில குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதே அவர்கள் எடை அதிகரிப்பைத் தடுக்கும். கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் போது குழந்தைகளின் எடை அதிகரிக்காது. ஹைப்பர் ஆக்டிவ் ஆக இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒல்லியாகத்தான் இருப்பார்கள். அது ஒரு பிரச்சினையில்லை.
ஜங்க் உணவு அதிகம் சாப்பிடும் குழந்தைக்கு அதிக உடற்பருமன் ஏற்படுகிறது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டவை. அது தான் காரணம்!
Also Read: உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய, உங்கள் குழந்தைகள் உண்ணும் சில உணவுகள்..!!!