குழந்தைப் பருவத்தில் சரியான கவனிப்பு இல்லாமை, சத்தான உணவு வகைகளை கொடுக்க தவறுவது போன்றவை குழந்தையின் உடல் நலனை பாதிக்கும். இந்தியாவில் பல குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதற்கு இவை முக்கிய காரணமாக அமைகின்றன. அதுமட்டுமின்றி, காலம் மாறி விட்ட நிலையில் இன்றைய நவீன காலத்தில் இளம் பெற்றோர் பலருக்கு தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் எளிதில் ஜீரணமாகும் படியான உணவுகளை சாப்பிட வைப்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை சாதாரண செயலாக எண்ணாமல் பொறுப்பான செயலாக எண்ண வேண்டும். ஏனெனில், வளரும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது, எதிர்காலத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விஷயங்களை முடிவு செய்கின்றன. எனவே உணவு விஷயத்தில் தாய்மார்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, குழந்தைகளின், உடல் பருமன் என்பது இன்று உடல் நல பிரச்சனையாக மட்டுமன்றி சமூக அளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்பது தான் சிறந்த உணவுப்பழக்கம். இது புரியாவிட்டால், சிறுவயதிலேயே உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும்.

உலக அளவில் கோடிக்கணக்கான குழந்தைகள் உடல் பருமன் தொடர்பான பிரச்சினையால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டிலுள்ளது. உடல் உழைப்பின்மை, தவறான உணவு பழக்கம், அதிகமாக துரித உணவுகளை உண்பது, மரபியல், ஹார்மோன் பிரச்சனை போன்றவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி, உடல் எடை அதிகமாக இருப்பது குழந்தைகளுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் அடித்தளமிடுகிறது. அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், ஆஸ்துமா, வயிறு தொடர்பான பிரச்சனை, நீரிழிவு நோய், சரும பிரச்சனை, எலும்பு தொடர்பான பிரச்சனை, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
இந்நிலையில், குழந்தைகளை ஆரோக்கியமான உணவு வகைகளை விரும்பி உண்ண வைப்பதற்கு, ஏதுவாக தற்போது உணவு மொபைல் கேம் பயன்பாடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளின் உடல் பருமன் அதிகரித்து வருவதால், இதற்கு முடிவு காண சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வுக்காண ஃப்ரெண்ட்ஸ் லியர்ன் (FriendsLearn mobile application) என்ற மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, 10 முதல் 11 வயதுடைய 104 குழந்தைகளிடம் இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்த மொபைல் கேம் பயன்பாட்டில் குழந்தைகளின் ஆரோக்கியமான உணவு தேர்வுகள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை தூண்டுவதற்கான வழிமுறைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மொபைல் கேம் பயன்பாட்டைப் பயன்படுத்திய பெற்றோர் ஒருவர் கூறும்போது, “ஒரு பெற்றோராக, நான் இது எங்கள் குழந்தைகளின் சுகாதாரத்துக்கான சிறந்த விளையாட்டு என்று நினைக்கிறேன்”. மேலும், இந்த விளையாட்டு எங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பார்கவ் கூறும்போது, இந்த மொபைல் கேம் பயன்பாட்டுடன் குழந்தைகள் விளையாடுவதன் மூலம், அவர்களின் உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த கண்டுபிடிப்புகள் பற்றிய சான்றுகள் அனைத்தும் பிரபல மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளோம் என்றார். அதேபோன்று, ஜே.எம்.ஐ.ஆர் எம்ஹெல்த் மற்றும் யுஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வானது, வாரத்திற்கு 20 நிமிட குழந்தைகளின் கேமிங் நேரம், குழந்தைகளின் உணவுத் தேர்வுகளில் வலுவான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதை உறுதி செய்துள்ளது.
எனவே, இனி வரும் நாட்களில் குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் வளர்ப்பதற்கு இன்றைய இளம் பெற்றோர்கள் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.