ஐக்கியநாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல அமைப்பான யுனிசெப் (UNICEF) புத்தாண்டு அன்று உலக முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டுள்ளது. நாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தப் பட்டியலில் 69,944 குழந்தைகளின் பிறப்பின் மூலம் இந்தியா முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த புத்தாண்டு அன்று உலகில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 3.95 லட்சம் ஆகும். சென்ற ஆண்டும் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது நினைவிருக்கலாம்.

புத்தாண்டைக் கொண்டுவந்த செல்வங்கள்
குழந்தையின் பிறப்பு என்பது பெற்றோர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பெருமகிழ்ச்சியின் தருணம். அதுவும் உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நாளில் இந்த பூமிக்கு வரும் செல்வங்களால் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இந்த ஆண்டு புது ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் பிறந்துள்ளன.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 44,940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25,685 குழந்தைகளும், பாகிஸ்தானில் 15,112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,256 குழந்தைகளும், அமெரிக்காவில் 11,086, காங்கோவில் 10,53, வங்கதேசத்தில் 8,428 குழந்தைகளும் பிறந்துள்ளன.
முதல் குழந்தை
மணி சரியாக நள்ளிரவு 12 மணியை அடைந்தவுடன் பிறந்த குழந்தைகளின் பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. டோக்கியாவில் 310 குழந்தைகளும், பெய்ஜிங்கில் 605 குழந்தைகளும், மாட்ரிட்டில் 166 குழந்தைகளும், நியூயார்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளன.
தீருமா சோகம்?
உலக அளவில் சுகாதரக்கேடு மற்றும் போதிய மருத்துவ வசதி இல்லாமையின் காரணமாக பல குழந்தைகள் பிறந்த முதல் நாளைக் கடக்க முடியாமல் இறந்துபோகின்றன. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டில், உலக அளவில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த அன்றே இறந்துள்ளன. 25 லட்சம் குழந்தைகள் ஒருமாதத்திற்குள்ளாக இறந்துள்ளன. இதற்கு அந்தந்த நாடுகள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான உரிமைகளை அரசுகள் தங்குதடையின்றி வழங்கிடவேண்டும் என்று யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் சார்லோட்டி பெட்ரி கோரிநிட்கா தெரிவித்துள்ளார்.

கிராமந்தோறும் மருத்துவ வசதிகள் கிடைத்திட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேலும் போதுமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கவலைக்குரிய எண்களைக் குறைக்கக்கூடிய தீர்வாகும்.