தமிழகம் முழுவதும் நாளை +2 தேர்வுகள் துவங்க இருக்கின்றன. இந்நேரம் அந்தக் கேள்வி வருமா? இந்தக் கேள்வி வருமா? என மாணவர்கள் வழக்கபோல குழப்பத்தில் இருப்பார்கள். குழந்தைகளின் மனதும் குழந்தை மாதிரிதான் இருக்கும் என்பதை மட்டும் இந்த சமூகம் ஒருபோதும் ஒப்புகொள்ளாது. அவர்களுடைய திறனைப் பற்றி அவர்களுக்கே சந்தேகம் ஏற்படும் வேளையில் ஆதரவாக இருக்க வேண்டிய பெற்றோர் உண்மையில் அப்படி இருப்பதில்லை.

மேற்படிப்பில் சிறந்த கல்லூரி, சிறந்த படிப்பு எனத் தேர்ந்தெடுக்க இந்த +2 மதிப்பெண்கள் மிக அவசியம். அதற்காக இன்று இரவு அதைப்பற்றி பேசி மேலும் மாணவர்களை பயமுறுத்த வேண்டாம். சரி, பெற்றோர்கள் தேர்வுக்காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எனப் பார்ப்போம்.
பெற்றோர்களுக்கான டிப்ஸ்
- இயன்ற அளவு குழந்தைகளுடன் பேசுங்கள். தேர்வு நேரம் என்பதால் பெரும் மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களிடம் பாசமாக நடந்துகொள்ளுங்கள்.
- முடிவைப்பற்றி கவலைப்படாதே, உன்னால் முடிந்த அளவு சிறப்பாக எழுது என தட்டிக்கொடுங்கள். பாதி குழந்தைள் வாழ்க்கையில் வெற்றிபெறாமல் போவதற்கு மிக முக்கியக் காரணம் அவர்களை உற்சாகப்படுத்த பெற்றோர்கள் தவறியதுதான் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
- எக்காரணத்தைக்கொண்டும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். ஆண்டு முழுவதும் படித்து, வெற்றியின் இறுதிப்படியில் நிற்கும் மாணவர்களை உங்களுடய சுடு சொற்கள் அசைத்துப்பார்த்துவிடும். அவர்களுடைய குறிக்கோளும் சிதறிப்போகும். அதேபோல் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது கணவன் மனைவி இடையே சண்டையிடாமல் இருப்பது நல்லது.
- குழந்தைகள் படிக்கும்போது சுற்றுச்சூழலை அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொடுத்தல் அவசியமாகும். உதரணமாக நீங்கள் தொலைக்காட்சி பார்க்காமல் இருத்தல், செல்போன் பயன்படுத்தாமல் இருத்தல்.
- எளிதில் செரிக்கக்கூடிய உணவுப்பொருட்களை மட்டுமே கொடுங்கள். முடிந்தவரை அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்.
- இது வெயில் காலம் என்பதால், இளநீர், மோர், தர்பூசணி போன்றவற்றை தினமும் பருகச்செய்யுங்கள். பழச்சாறுகள் குடிக்கச் சொல்லுங்கள்.
- குழந்தைகளின் உடைகளில் கவனமாக இருங்கள். நேர்த்தியான உடை மன மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- குழந்தைகள் சரியாக தூங்குகிறார்களா? என்று கவனியுங்கள். பயம் காரணமாக சிலருக்கு தூக்கம் குறையவும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை மொழியில் பேசி உடம்பிற்கு ஓய்வளிக்கச் செய்யுங்கள்.
- தேர்வு முடியும்வரை நீங்களே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
- தேர்வில் சரியாக எழுதவில்லை என உங்கள் குழந்தை சொன்னால், ஒருபோதும் திட்டிவிடாதீர்கள். ஏனெனில் இக்காலத்தில் குழந்தைகள் பெற்றோர்களிடம் தன்பற்றிய செய்திகளை சொல்வது மிக அரிது. அவர்களை எப்படி அடுத்த நாள் தேர்விற்கு தயார்படுத்தலாம் என சிந்தியுங்கள்.
- எதிர்காலம் குறித்து எதுவும் எதிர்மறையாக பேசாதீர்கள்.
- உங்களால் இயன்றவரை அவர்களது படிப்பிற்கு உதவுங்கள். சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள்.