நடுத்தரக் குடும்பம். இரண்டே அறைகள் கொண்ட வீடு. டீவி, கார் போன்றவை எல்லாம் எட்டாக் கனியாகத் தோன்றிய காலம். மேற்படிப்பிற்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இவை எதுவும் சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) இமாலய வெற்றிக்குத் தடையாக இருக்கவில்லை. சென்னையிலிருந்து சிலிக்கான் வேலி வரை தன் வெற்றிச் சுவடுகளை அழுந்தப் பதித்திருக்கிறார் பிச்சை. இணைய உலகின் ஜாம்பவானான கூகுளின் (Google) தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி வகித்துவரும் சுந்தர் பிச்சையின் வெற்றிக்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்திருக்கிறார்.

கூகுள் – இணைய சாம்ராஜியச் சக்கரவத்தி
1998-ல் பிறந்த கூகுள் குழந்தையின் வளர்ச்சி அசாதாரணமானது. லாரி பேஜ்( Larry Page) , சேர்ஜி பிரின்(Sergey Brin) என்ற இருவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பல்லாண்டுகளாக கோலோச்சிய மிகப்பெரிய நிறுவனங்களை சந்தையிலிருந்து ஓரங்கட்டியுள்ளது. இன்று 60,000 பேர் கூகுளில் பணியில் உள்ளனர். தேடு பொறி (Search Engine), யூ டியூப் (Youtube), மின்னஞ்சல்(Email) வரைபடம் (Map) எனப் பல தயாரிப்புகள் மிகப்பெரிய வெற்றியை கூகுள் நிறுவனத்திற்கு அளித்துள்ளது எனச் சொல்லலாம்.

சென்னையிலிருந்து சிலிக்கான் வேலி வரை!!
கரக்பூர் ஐஐடி யில் உலோகப் பொறியியல் பயின்ற பிச்சை, 2004-ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். 11 வருடக் கடின உழைப்பு. எந்த வியர்வைக்கும் வெற்றி ஒருநாள் வேர் வைக்கும் என்பதற்கு சுந்தர் பிச்சையின் வாழ்க்கை ஒரு சான்று. அனுபத்தில் மூத்தவர்கள் அவ்வளவு பேர் இருந்த போதும், 2015-ஆம் ஆண்டு கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. திறமை மற்ற எல்லாவற்றையும் தோற்கடித்த நாள் அது. அது முதல் கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர் மென்பொருள் உற்பத்தியில் புதிய வேகம் பெற்று இயங்கி வருகிறது. 2013-ஆம் ஆண்டிலிருந்து ஆண்ட்ராய்டு நிறுவனத்திற்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் பிச்சை.

வெற்றிக்கான காரணம்!
வெற்றி பெற நினைப்பவர்களுக்கு சுந்தர் பிச்சை கூறும் அறிவுரைகள்:
- திறன் மிளிர் உழைப்பு( Smart work). வேலையில் தம்முடைய தனித் திறமையை உலகத்திற்குக் காட்டுவது வெற்றிக்கான முதல்படி. அதுதான் மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக்காட்டும்.
- உங்களின் வெற்றியில் மட்டும் கவனத்தைக் குவிக்காதீர்கள். சக ஊழியரின் வெற்றியின் மீதும் பற்றுக் கொள்ளுங்கள். தலைமைப் பண்பிற்கான அடிநாதம் இதிலிருந்துதான் துவங்குகிறது.
- உங்கள் கனவுகளைத் துரத்துங்கள். எது உங்களைத் தொடர்ந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறதோ அந்தப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருங்கள். வெற்றிக்கான எளிய வழியும் அதுவே.
- தோல்விகளைப் பெருமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நாளை அவை தான் உங்களை வெற்றியின் கரங்களை முத்தமிட வைக்கும்.
- வாழ்க்கையில் எதற்கும் எதிர்வினை ஆற்றாதீர்கள். மாறாக சிறு புன்னகையுடன் பதிலளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- உங்களின் கருத்துக்களிலிருந்து வேறுபடும் நபர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் வேலைகளின் மீதான கவனத்தை, உங்களின் எல்லைகளை விரிவடையச் செய்ய இதுவே சிறந்த முறை.
- வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் மேற்கொள்ளுங்கள். அனுபவத்தைப் பெறும்போது நீங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதை உணருங்கள்.
- கடிகாரத்தை உங்களது போட்டியாளராக நினையுங்கள். அதைத் தொடர்ந்து துரத்துங்கள். அப்போது வெற்றி உங்கள் பின்னால் ஓடிவரும்.
- இறுதியாக, மனிதநேயத்தை மீறிய எதுவும் வெற்றியைத் தராது என்பதில் கவனமாக இருங்கள்.
சுந்தர் பிச்சை போன்றே, உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பு வகித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, இன்ஃபோசிஸ்(Infosys) நிறுவனத்தின் தலைவரான நாராயணமூர்த்தி( Narayana Moorthi), மைக்ரோ சாஃப்ட்( Microsoft) நிறுவனத்தில் சத்யா நாதெல்லா (Satya Nadella), விப்ரோ (Wipro) நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி (Asim Premji) என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. உலகின் வளர்ந்து வரும் தொழிநுட்பங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவும் முன்னேறி வருவதையே இவை குறிக்கின்றன.