“அவரது 500 நாவல்களை படித்திருக்கிறேன்…” வாசிப்பு, எழுத்து அனுபவம் பகிர்கிறார் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன்!

Date:

இந்த திட்டம் எங்களது நியோதமிழ் குழுவிடம் வெகுநாட்களாகவே இருந்தது. தமிழ் இலக்கிய வட்டத்திற்குள்ளும் எங்களது இணையதளத்தை தீவிரமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பது. அறிவியல், இயற்கை, ஆராய்ச்சிகள், வரலாறு, சமூகம் மற்றும் வாழ்வியல் அறிவியல் பற்றிய விவாதங்கள் மற்றும் அதுசார்ந்த கட்டுரைகளாகவே தமிழ் வாசிப்புத் தளத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நியோதமிழ் இலக்கிய பரப்பிற்குள்ளும் காத்திரமான உரையாடல்களை முன்வைக்க இருக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களை நேர்காணல் எடுப்பது என்று முடிவான உடனேயே நான் எங்களது குழாமில் முன்வைத்தது சி.சரவண கார்த்திகேயன் அவர்களது பெயரைத்தான். சொல்லப்போனால் அவரிடம் இதுகுறித்து பேசாமலேயே, முதல் நேர்காணல் சிஎஸ்கே-உடன் தான் என அலுவலகத்தில் சொல்லிவிட்டேன். பின்னர் பொறுமையாகத் தான் அவரை அணுகினேன். “அண்ணா, உங்களை ஒரு நேர்காணல் எடுக்கணும்” என்ற எனது குறுஞ்செய்தி சென்று சேர்ந்தவுடனே வாழ்த்துக்கள், தாராளமாக என்றார். மெசேஜ்களிலேயே, தோளில் கைபோட்டு அண்ணன் ஒருவரிடம் பேசுவது போல நம்மை உணரச் செய்திடுவது அவருடைய குணாதிசியம். இலக்கியம் பற்றியும், படைப்புகள், தர்க்கங்கள் என அனைத்தையுமே எளிமையான நடையில் அதே நேரத்தில் துல்லியமாக தன் தரப்பு விளக்கத்தை/பதிலை அளித்திருக்கிறார் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன். கீழே அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவரளித்த பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்விகள்: மாதவன் பழனியப்பன் | பதில்கள்: சி.சரவணகார்த்திகேயன்

  • வணக்கம். முதன்முதலில் புத்தகவாசிப்பினை நோக்கி உங்களை நகர்த்தியது யார்?

யோசித்துப் பார்த்தால் என் வீட்டிலோ சுற்றத்திலோ யாரும் என் வாசிப்பை நேரடியாகத் தூண்டவில்லை. சூழல் தான் என்னை அதை நோக்கி நகர்த்தியது என்பேன். எனக்கு ஏழெட்டு வயதிருக்கும். ஈரோட்டில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்பா அரசு ஊழியர். நடுத்தர வர்க்கக் குடும்பம். நான் வீட்டில் ஒரே குழந்தை. அப்போது சேர்ந்து விளையாடவும் அருகே என் வயதுப் பயல்கள் அதிகம் இருக்கவில்லை. எங்கள் வீட்டில் தொலைக்காட்சியும் கிடையாது. நானும் பொதுவாகத் தனிமை விரும்பியாகவும் அகவயத்தன்மை கொண்டவனாகவுமே இருந்தேன். அப்போது என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ப்ளாண்டி மற்றும் ஃப்ளாஷ் கார்டன் காமிக்ஸ் பக்கங்களில் வாசிப்பைத் தொடங்கினேன். அதன் நீட்சியாக வீட்டு உரிமையாளர் வீட்டில் வாங்கும் தினமலர் நாளேட்டுடன் வெள்ளி இணைப்பாக வந்த சிறுவர் மலரைக் கடன் பெற்று வாசித்தேன். அட்டை டூ அட்டை வாசிக்கத் தொடங்கியது அதைத்தான். புத்தக வாசிப்பு என்றால் அதிலிருந்து ஓரிரு ஆண்டுகளில் என் அப்பாவின் சினேகிதர் ஒருவர் என் பிறந்த நாளுக்கு வழவழத் தாள்கள் கொண்ட சிறுவர் பட‌க்கதை நூல்கள் பரிசளித்தார். அவர் பெயரோ முகமோ இன்று நினைவில் இல்லை. ஆனால் நாளேடுகள் சஞ்சிகைகள் தாண்டி புத்தகம் என்ற ஒன்றை என் கண்களில் முதலில் காட்டியது அவர் தான்.

  • உங்களுடைய புத்தக வாசிப்புகளின் பயணம் எப்படி இருந்தது? இருக்கிறது?

நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகளான சிறுவர் மலர், தங்க மலர், லேசாய் சிறுவர் மணி ஆகியவற்றைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சிறுவர் தனி இதழ்களான பூந்தளிர், அம்புலி மாமா போன்ற சிலவும் பின்னர் அறிமுகமாகின. அப்புறம் 1993ல் தின மலர் தமிழில் முதல் முறையாக மலையாள மனோரமா பாணியில் ஒரு இயர்புக் போட்டார்கள். அப்போதே ரூ.45 விலை. ஆயிரம் பக்கப் புத்தகம். அது சிறுவர்களுக்கானதல்ல. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கானது. ஆனால், எனக்குப் பொது அறிவு விஷயங்களில் அதிக ஆர்வம் இருந்ததால் என் வீட்டில் சொல்லி அதை வாங்கினேன். என் அறிவை விஸ்தாரம் செய்ததில் அதற்குப் பிரதானப் பங்குண்டு. அப்புறம் ராணி காமிக்ஸ் அப்புறம் சில லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் இதழ்கள் வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் புத்தகங்கள் எடுத்துப் போய் பிரச்சனையாகிக் கூட‌ உள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாய் வார மலர், கதை மலர், குடும்ப மலர், கொஞ்சம் தினமணி கதிர் என நாளிதழ்களின் பிற இணைப்புகளையும், மாலைமதி, கண்மணி, ராணி முத்து போன்ற மாத நாவல்கள், ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள், சுபா, பிகேபி ஆகியோரது எழுத்துக்களையும் வாசித்தேன். பிறகு பள்ளி ஆசிரியரான பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த பொன்னியின் செல்வன். கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி த‌ன் பிஎஸ்என்எல் அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி, பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார்.

பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக நவீன இலக்கியப் பரிச்சயம். ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் நான் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போது நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்பு. பிறகு கல்லூரிக்காக சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ஹிக்கின்பாதம்ஸ், லேண்ட்மார்க், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், எனி இந்தியன் புக்ஸ், சென்னை புத்தகக் காட்சிகள் என் புத்தக வேட்டைக் களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிக ஆதர்சமான‌ எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேர்ந்த கடந்த பதினான்காண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்துவிட்டது. எழுதவே நேரமில்லை என்பது முக்கியக் காரணம். ஆனால் எழுத்தாளன் இப்படி இருக்கக்கூடாது. நிறைய வாசிக்க வேண்டும்.

  • பள்ளி, கல்லூரி துவங்கி இப்போது வரை எதன் அடிப்படையில் புத்தகங்களை படிக்க தேர்ந்தெடுத்தீர்கள் / தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அந்தந்த வயதிற்கேற்ப ஆர்வங்கள் மாறி வந்திருக்கின்றன. பொதுவாக இலக்கிய இதழ்களில் அடிபடும் எழுத்தாளர் பெயர்களில் சோதனைக்கு தலா ஒரு நூல்கள் வாங்குவேன் அல்லது நூலகத்திலிருந்து எடுப்பேன். அது பிடித்தால் தொடர்வேன். கல்லூரி விடுதிக் காலத்தில் வாசிக்க நிறைய சமயமிருந்தது. அதனால் இந்தப் பரிசோதனைகளில் எளிதில் ஈடுபட முடிந்த‌து. 2006 வரை தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், ஆக்கங்களில் மிகப் பெரும்பாலானவற்றை வாசித்திருந்தேன்.

இப்போது அதிகமும் வாசிப்பது இரண்டு விதங்களில் தான். ஒன்று என் எழுத்துக்குத் தேவையான நூல்கள், அடுத்தது நன்றாக இருக்கிறது என எதையேனும் நான் நல்ல வாசகர்களாக நம்பும் யாராவது சிபாரிசு செய்தால். ஆனால் பெரும்பாலும் புதிதாக வரும் – நான் முக்கியமெனக் கருதும் – எல்லா நூல்களையும் வாங்கி விடுகிறேன்.

  • இலக்கியத்தின் வரையறைகளாக நீங்கள் நினைப்பது என்ன? ஏன் ஒருவர் இலக்கியம் வாசிக்க வேண்டும்?

இலக்கியத்தின் நோக்கு ஒரு காலகட்டத்தைப் பதிவு செய்வது. அக்கால மனிதர்களின் புற, அக அலைக்கழிப்புக்களைச் சித்தரிப்பது. அவ்வளவு தான். அது தீர்ப்போ தீர்வோ தராது, தரக்கூடாது. அது வாசகனைச் சிந்திக்கத் தூண்ட‌ வேண்டும். அவன் அதைத் தன் மனப்போக்கு மற்றும் அனுபவங்களின் வழியே அணுகிப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் ஒரு பிரதிக்கு ஒரே அர்த்தம் கிடையாது. அது வாசகனைப் பொறுத்து மாறும், வெவ்வேறு நிறங்கள் எடுக்கும். நல்ல இலக்கியம் அப்படித்தான் இருக்கும். மற்றபடி, இலக்கியம் கோனார் உரையோ, க்ளார்க்ஸ் டேபிள்ஸோ கிடையாது. சில தினம் முன் விதைகள் வாசகர் வட்டத்தைச் சேர்த்த யாழினி ஆறுமுகம் ஒரு விஷயம் சொன்னார்: “மனிதனை மனிதனுக்கு உணர்த்துவதே இலக்கியத்தின் நோக்கம்”. மிகச் சரியானது.

  • காலப்போக்கில் உங்களுடைய எழுத்து ஆதர்சங்கள் (எழுத்தாளர் திரு. பாலகுமாரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், பெருமாள்முருகன்..) தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் எனச் சொல்லலாமா? ஆம் எனில் எந்த புள்ளியில் இந்த நகர்வுகள் ஏற்பட்டன?

அது இயல்பு தானே! வாசிப்புப் பரிணாமம் என்று இதைச் சொல்வேன். அது மாறத்தான் வேண்டும். நம் சிந்தை விரிவடைகிறது. நமது ஆர்வங்கள் மாறுகின்றன. நம் திராணி கூடுகிறது. அதற்கேற்ப வாசிப்பின் போக்கு மாறும். மாற்றப் புள்ளிகள் என யோசித்தால் பதின்மத்துக்கு முன் ராஜேஷ்குமார் ஈர்த்தார்; பதின்ம‌த்தில் சுஜாதாவும் பாலகுமாரனும் வசீகரித்தார்கள்; கல்லூரி காலத்தில் சுந்தர ராமசாமி, லா.ச.ரா. முதலான சீனியர் நவீன இலக்கியவாதிகள்; அதன் பிறகு ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன் என்ற 90களில் எழுத வந்தவர்கள். ஆனால் இப்போதும் அவர்களிடமிருந்து விலகி வந்து விடவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று பிடிக்கும். அவ்வளவு ஏன், இப்போதும் light reading மனநிலையில் இருக்கையில் பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிக்கிறேன்.

இன்றைய தலைமுறைக்கு அந்த மாதிரியான ஒரு படிநிலை சாத்தியப்படவில்லை என நினைக்கிறேன். அவர்களுக்கு முதல் எழுத்தாளராகவே ஜெயமோகன் அறிமுகமானால் சுஜாதாவை அறிய முடியாமல் அல்லது அறிந்தாலும் ரசிக்க முடியாமல் போகலாம்.

  • எழுத தூண்டியவர் அல்லது தூண்டியவை அல்லது சம்பவங்கள் ?

ராஜேஷ் குமார் தான். பித்துப் பிடித்தது போல் நான் ராஜேஷ் குமாரை மாதந்தவறாமல் தேடிப் பிடித்துப் படித்த காலம் உண்டு. அவர் இன்றைய தேதியில் 1,500 நாவல்கள் எழுதி இருப்பார் என நினைக்கிறேன். அதில் எப்படியும் 500 நாவல்களேனும் வாசித்திருப்பேன். அவரது நூறாவது க்ரைம் நாவல் நூலை வெகுநாள் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான‌ அவரது ஆயிரமாவது நாவலான ‘டைனமைட் 98’ன் அத்தியாயங்களைச் சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன்.

என் வாசிப்புப் படியாக இருந்தவர் என்பது தாண்டி பன்னிரண்டு வயதில் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’ போன்ற உள்ளடக்கம் கொண்ட வெகுஜனப் படைப்பு அது. அதே உத்வேகத்தில் அவரது நடையை, பாணியைப் பிரதியெடுத்து பதின்மூன்று எழுதிய நாவல் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’. அது இன்னும் கைப்பிரதியாகவே எஞ்சி இருக்கிறது. என்றேனும் பிரசுரிக்க நேர்ந்தால் அதை ராஜேஷ் குமாருக்குத் தான் சமர்ப்பணம் செய்வேன் என்பதில் சந்தேகம் இல்லை.

  • உங்களுடைய முதல் சிறுகதை எது? அது பற்றிச் சொல்லுங்கள்.

என் முதல் சிறுகதை ‘நியூட்டனின் மூன்றாம் விதி’. எதிர்காலத்தில் நடக்கும் விஞ்ஞானச் சிறுகதை. என் பதினாறு வயதில் எழுதியது. அப்போது குமுதம் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டிக்கும் பின் ஆனந்த விகடனுக்கும் அனுப்பினேன். குமுதத்தில் ஜெயிக்கவில்லை. ‘தொடர்ந்து எழுதவும்’ என்று ஒரு துண்டுச் சீட்டு விகடனிலிருந்து வந்தது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து மியாவ் சிறுகதைத் தொகுப்பில் முதல் முறையாகப் பிரசுரமானது. இன்னொரு சுவாரஸ்ம்: எந்திரன் படத்தில் வரும் Robo Sapiens என்ற வார்த்தையை அதே பொருளில் அதற்குப் பத்தாண்டுகள் முன்பே அக்கதையில் பயன்படுத்தியிருந்தேன்

  • தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எழுத விருப்பம் எது புனைவா? அபுனைவா?

புனைவு தான். சந்தேகமே இல்லை.

முன்பே சொன்னபடி புனைவுகள் வாசித்தே எழுத்தாளனாகும் வேட்கை உண்டானது. நான் ரசித்தது போலவே நான் ரசிக்கப்பட வேண்டும் என்ற இச்சை கதை வாசிப்பில் உண்டானது. என்னைப் புனைவெழுத்தாளனாகவே உணர்கிறேன். கவிஞனாகவோ கட்டுரையாளனாகவோ, அல்ல. அதிலும் பிரதானமாக நான் சிறுகதையாளன் தான்.

நான் அபுனைவு எழுதத் துவங்கியது பிரசுர வாய்ப்புக்காகவே. சந்திரயான் நூல் அப்படித் தான் எழுதினேன். அம்ருதா இதழில் 2011 நொபேல் பரிசுகள் பற்றி தொடர் கட்டுரை எழுதியது அப்படித்தான். குங்குமம் இதழில் எழுதிய ச்சீய் பக்கங்கள் தொடரும் அப்படித் தான். மற்றபடி இப்போது கட்டுரைகள் எழுதுவது நட்பின் நிமித்தம் மட்டுமே.

நானாக விரும்பி எழுதிய அபுனைவு நூல்கள் / தொடர்கள் ஐந்து தாம்: 1) குஜராத் 2002 கலவரம் அப்போது மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காலத்தின் தேவை கருதி எழுதினேன் 2) இந்திய ராக்கெட் இயலின் சரித்திரத்தை (ஆகாயம் கனவு அப்துல் கலாம்) அப்துல் கலாம் மறைவை ஒட்டி எழுதினேன். அது சுஜாதா மற்றும் அப்துல் கலாமின் கனவு என்பதால் 3) 96: தனிப்பெருங்காதல் – ரசனையும் நுட்பமும் 4) இந்தி தேசிய மொழியா? இந்திய அரசியல் சாசனத்தின் மீதான என் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக. 5) க்றிஸ்டோஃபர் நோலன் படங்கள் பற்றிய காலத்தின் கலைஞன் தொடர்.

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. அபுனைவு எழுத்துக்களில் மிகப் பெரும்பான்மை சமகாலத்துக்காக எழுதப்படுபவை. அதன் ஆயுள் குறைவு. புனைவுகள் அப்படியல்ல.

  • தினசரி வாசிப்பு அல்லது எழுத்திற்கென எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள்?

தினசரி என்கிற ஒழுக்கமில்லை. என் வேலை அழுத்தம் மற்றும் சொந்த அலுவல்கள் அதை அனுமதிப்பதில்லை. சமயம் கிடைக்கும் போது வாசிக்கிறேன், எழுதுகிறேன். பொதுவாக வார இறுதிகள், இரவுகள், அதிகாலைகள். ஆனால் தினசரி என்று ஒதுக்கும் திட்டம் இருக்கிறது. பத்தாண்டுகளாக அதை அமல்படுத்தத் தான் முயன்று வருகிறேன்.

  • பரத்தைக் கூற்று போன்ற மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய சூழலில் பிரபல்யமான நீங்கள் அதன்பிறகு கவிதைகளில் பெரியளவில் ஈடுபடாதது ஏன்?

நான் நவீன கவிஞன் என்று சொல்ல முடியாது. பரத்தை கூற்று கனமான உள்ளடக்கம் கொண்ட ஆனால் வெகுஜனச் சாயல்கள் நிரம்பிய தொகுப்பு. பத்தாண்டுகள் முன் நவீன கவிதை வாசிப்பில் ஓர் ஆர்வம் இருந்தது. அப்போது அதுவுமே அருகி விட்டது. கவிதை எழுதுவதை விடுங்கள், அதன் வாசிப்பிற்கே தனித்ததொரு மனநிலை வேண்டும் என நினைக்கிறேன். அது என் மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். ஆனால் அதையொட்டி கவிதை மீதான ஆர்வம் தொடரவில்லை. கடந்த சில ஆண்டுகளில் புத்தகக்காட்சிகளில் நான் வாங்கிய நூல்களின் பட்டியலைப்‍ பார்த்தாலே தெரியும், அவற்றில் கவிதை நூல் இருப்பதில்லை. இப்போதைக்குக் கவிதை என்றால் மனுஷ்ய புத்திரனை மட்டுமே வாசிக்கிறேன். ஏதேனும் ஒன்றைக் கவிதை வடிவில் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றினால் மட்டுமே அதை எழுதிப் பார்க்கிறேன். ஆனால் ஒரு தொகுப்பாக்கும் அளவு கவிதைகளை எழுதி இருக்கிறேன் தான். செய்யவில்லை.

என் சிந்தனைகள் ஒரு பெருவெடிப்புக்குரியவையாக இருக்கின்றன. அதற்குக் கவிதை வடிவம் பொருத்தமா என்றும் தெரியவில்லை. எதிர்காலத்தில் ஒருவேளை கவிதைக்குத் திரும்பக்கூடும். மனதில் ஒரு பிரம்மாண்டத் திட்டமிருக்கிறது. நடக்கிறதா பார்ப்போம்.

  • எழுத்து, வேலை என உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் பின்பற்றும் அல்லது பின்பற்ற நினைக்கும் 3 ஆளுமைகள் யார்? ஏன்?

நூதனமான‌ கேள்வி தான். முயற்சிக்கிறேன். ஜெயமோகன் எழுதிக் குவிப்பதில். இளையராஜா கற்பனையின் உச்சத்தில். காந்தி சத்தியத்திலும் அஹிம்சையிலும்.

  • நமக்கு நேரெதிர் அரசியல்/ சிந்தனை நிலைப்பாடுகள் கொண்டவராக எழுத்தாளர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய குறிப்பிடத்தக்க படைப்புகளும் அதன்காரணமாக ஒதுக்கப்படுவது தமிழ்ச் சூழலில் தற்போது அதிகளவில் நிகழ்கிறதல்லவா? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது எல்லா மொழிகளிலும் இருக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒருவர் எழுத்தாளன் ஆவதே சுயத்தின் உந்துதலில். அதனால் சுயத்திற்கு இடையேயான மோதல்கள் படைப்புலகில் இருந்து கொண்டே தான் இருக்கும். அதை இயல்பென்றே கடக்கப் பழக‌ வேண்டும். அதிகபட்சம் எழுத்தாளன் செய்ய முடிந்தது தான் இலக்கிய மதிப்பீடுகளை, இலக்கியவாதிகளைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது தான்.

ஒருவேளை இந்த விஷயம் தமிழ் சூழலில் அதிகமிருக்கலாம். தமிழர்கள் எதிலுமே கொஞ்சம் அதிகம் தானே! இங்கே இருக்கும் ஒரே ஒற்றுமை குழு மனப்பான்மை தான். இங்கே எழுத்தாளன் சாதாரணர்களை விடவும் மனச்சிக்கல் நிறைந்தவனாக அறத்தை மறுதலிப்பவனாக இருக்கிறான். புறங்கூறலும் முதுகில் குத்தலும். எழுத்தாளர்களுடன் பழகவே அச்சமாக இருக்கிறது. நான் இது எதிலும் பட்டுக் கொள்ளாமல் விலகி நிற்கவே விரும்புகிறேன். அதனால் எனக்கு இழப்புக்கள் இருக்கும் என்று தெரியும். பகையாவேன். இருட்டடிப்பு நிகழும். ஆனால் நிம்மதி முக்கியம் அல்லவா! நாம் வியந்து வாசித்த ஓர் எழுத்தாளரின் முகத்திரை கிழிந்து தொங்குவதைக் காண்பதை விட இது நல்லதே.

  • வெகுநாட்களாக எதிர்பார்க்கப்படும் “ஜெய் பீம்” நாவல் எப்போது வெளிவரும்? அதுவும் ஆப்பிளுக்கு முன் போல வரலாற்றுப் புனைவா?

ஆம். ‘ஜெய் பீம்’ வரலாற்றுப் புனைவு தான். இருநூறு ஆண்டுகளின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கும் பெரும்நாவல். அது வரிசையில் இருக்கிறது. அதற்கு முன் இன்னொரு நாவல் மனதில் இருக்கிறது. இதை முடித்த பின் அதை எடுக்கலாம் என. எப்படியும் அதில் நான் இறங்கவே ஓரிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும். இப்போது எனக்கு வந்திருக்கும் கிருமி காலத் தொடர்-கதை மனநிலையும் அதன் தாமதத்தை அதிகப்படுத்துகிறது. அது கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு விஷயம். தவிர, பலம் வாய்ந்த அத்தலைப்புக்கு நியாயம் செய்வது போல் இருக்க வேண்டும் என்ற பொறுப்பும் காரணம். அதை எழுதுவதற்குரிய முழு மனவிரிவையும் அடைய வேண்டும்.

  • கிண்டில் போன்ற டிஜிட்டல் வாசிப்புத் தளங்களின் வருகைக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்களின் மீது எம்மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது?

அவர்கள் படைப்பு முறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. மாறவும் வேண்டியதில்லை. பதிப்பகங்கள் மீதான சார்பு சற்று குறையலாம். கிண்டிலிலிருந்து நேரடியாக ராயல்டி வருவது என்ற விஷயம் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும். அது அவர்களைத் தொடர்ந்து நிறைய எழுத வைக்கக்கூடும். இந்த ஊரடங்கு காலத்தில் வரிசையாக நிறைய நவீன எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் கிண்டிலில் நுழைவதைப் பார்க்கிறேன். நானே என் அத்தனை அச்சு நூல்களையும் கிண்டில் வடிவாக்கியது இந்த ஊரடங்குக் காலத்தில் தான். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒருவேளை படைப்புகளின் உள்ளடக்கத்திலும் கிண்டில் மாற்றத்தைத் தூண்டும் எனக் கணிக்கிறேன். மீண்டும் தமிழில் வெகுஜன எழுத்து என்பது செழுமையுறும்.

  • சினிமா சார்ந்த ரசனை எழுத்துக்களுக்கு எப்படி உங்களைத் தயார் செய்துகொண்டீர்கள்? அதற்கான உங்களது திறப்பாக எதைச் சொல்வீர்கள்? 

தமிழனுக்கு ஜீன்களில் சினிமா இருக்கிறது. அதனால் அவன் தனியே கற்க ஏதுமில்லை என நினைக்கிறேன். நல்ல சினிமாக்களைக் கூர்ந்து கவனித்தாலே திரைக்கதை நுட்பங்கள் பிடிபட்டு விடும். கல்லூரி நுழைந்த காலத்திலேயே அந்த நுண்ணர்வு இருந்தது. கல்லூரி வாசிக்கையிலேயே குஜராத் கலவரங்களின் பின்னணியில் ஒரு திரைக்கதை முழு வடிவில் மனதில் இருந்தது. உட்கார்ந்து எழுதவில்லை. பிறகு சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகம் சினிமா தொடர்பான என் புரிதல்களை மேலும் ஒழுங்கு செய்து கொள்ள உதவியது. ஆக, சினிமாவை மதித்து, கவனித்துப் பார்ப்பது, பின் யோசிப்பது தான் இதற்கான திறப்பு எனக் கொள்ளலாம்.

  • தமிழில் மாயாஜால பின்னணியில் படைப்பு குறைவாக வருகின்றனவே? Fantacy எழுத்து தமிழ் சூழலில் எப்படி இருக்கிறது?

ஆம். ஆனால் விரைவில் தமிழில் எழுதப்படும் என நினைக்கிறேன். ஷான் கருப்பசாமி எழுதக்கூடும். எனக்குமே ஒன்றிரண்டு மேலோட்டமான கருக்கள் மனதில் இருக்கின்றன.

  • ஒரு வளரும் வாசிப்பு / எழுத்தாளர்கள் இதையெல்லாம் கற்கவேண்டும் என நீங்கள் கருதுவது என்ன?

நானே அந்த ‘வளரும்’ பட்டியலில் தான் வருகிறேன் என்பதால் அவர்களுக்கு அறிவுரை சொல்லும் அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் புரிதலில், என் சொந்த அனுபவத்தில் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டே விஷயங்கள் தான்:

1) நிறைய வாசிக்க வேண்டும். தமிழில் அத்தனை நவீன இலக்கிய முன்னோடிகளையும் முழுமையாக வாசித்து விட வேண்டும். அப்புறம் பிற மொழிகளின் சொல்லத்தக்க படைப்புகளை. மலையாளம், மராத்தி, கன்னடம், வங்காளம், ரஷ்ய மொழி, லத்தீன் அமெரிக்கா என எல்லாமும். அப்புறம் தமிழின் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பக்தி இலக்கியம் என எல்லாவற்றிலும் அடிப்படைப் பரிச்சயம். அப்புறம் பிழையின்றி எழுதத் தமிழ் இலக்கணம் பயில வேண்டும். தமிழில் குறைந்தது நூறு இலக்கியப் புத்தகங்களை வாசிக்காமல் எதையும் எழுதத் தொடங்காதீர்கள்.

2) நிறைய எழுத வேண்டும். இதில் நான் முக்கியமாகச் சொல்வது தொடர்ச்சி. விடாமல் இயங்க வேண்டும். சோம்பலையும் சொந்த வாழ்வின் அழுத்தங்களையும் தாண்டி இதைச் செய்வது தான் சவால். அதற்கு அடுத்து நன்றாக இராதோ என்ற தாழ்வு மனப்பான்மையிலும் எழுத்தை ஒத்திப் போடக்கூடாது. எழுத எழுதத் தான் எழுத்து கைவரும். வெறுமனே காத்திருப்பதின் மூலமாக அல்ல. நன்றாக இல்லை என்றால் காலம் கழித்து விடும். நாம் இப்போது அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

  • உங்களுக்குப் பிடித்த சிறுகதைத்தொகுப்பு மற்றும் நாவல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்: புதுமைப்பித்தன் சிறுகதைகள், லா.ச.ரா. சிறுகதைகள், சுந்தர ராமசாமி சிறுகதைகள், ஜி.நாகராஜன் ஆக்கங்கள், அசோகமித்திரன் சிறுகதைகள், அ.முத்துலிங்கம் கதைகள், ஜெயமோகன் சிறுகதைகள், அம்பை சிறுகதைகள், ஆதவன் சிறுகதைகள், யுவன் சந்திரசேகர் சிறுகதைகள், பெருமாள்முருகன் சிறுகதைகள், சுஜாதாவின் தொகுதிகள். (இப்படி முழுத் தொகுப்புக்களையும் வாசிக்க வேண்டும்.)

நாவல்கள்: ஜே.ஜே.: சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி), ஒற்றன் (அசோகமித்திரன்), சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜெயகாந்தன்), புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்), குருதிப் புனல் (இந்திரா பார்த்தசாரதி), என் பெயர் ராமசேஷன் (ஆதவன்), விஷ்ணுபுரம் & பின்தொடரும் நிழலின் குரல் (ஜெயமோகன்), யதி (பா.ராகவன்), பகடையாட்டம் (யுவன் சந்திரசேகர்), கங்கணம் (பெருமாள்முருகன்), ராஸ‌லீலா (சாரு நிவேதிதா), சிலுவைராஜ் சரித்திரம் (ராஜ்கெளதமன்), யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்), புலிநகக்கொன்றை (பிஏ கிருஷ்ணன்), காவல் கோட்டம் (சு.வெங்கடேசன்), வாரணசி (எம்டி வாசுதேவன் நாயர்).

*

வாசகர்களின் கேள்விகள்

  • தமிழ் இளம் எழுத்தாளர்களிலேயே உங்களுக்குத்தான் அதிக வாசகிகள் இருப்பதாக சொல்லப்படுவது எந்தளவிற்கு உண்மை?

இருக்கலாம். தொடர்ச்சியாக ஆண் – பெண் உறவுச் சிக்கல்களை என் புனைவுகளில் சித்தரிப்பதும், பெண்களை மையப் பாத்திரமாக்குவதும் காரணமாக இருக்கலாம். ஃபேஸ்புக்கில் என் பெண் விமர்சனக் கருத்துக்களினால் (அவர்கள் பாஷையில் பெண் வெறுப்பு) கோபமுற்று ஓரெல்லைக்குப் பின் நிகழும் ரசவாதமாகவும் இருக்கலாம்.

போலவே எதிர்ப்பும் ஏராளம். எத்தனையோ பெண்கள் என்னை விலகியிருக்கிறார்கள். அல்லது நான் உணர்ந்து விலகி வந்திருக்கிறேன். பிறகு புதிய பெண்கள் வருவார்கள். அது அப்படித்தான் நடக்கும். அதற்காக கருத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாதே!

  • சமூக வலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் செலவிடுகிறீர்கள்?

துண்டு துண்டாக இரண்டு மணி நேரம் இருக்கும். இது மிக மிக அதிகம். குறைத்துக் கொள்ளத் தான் பிரய‌த்தனப்படுகிறேன். ஏன் குறைக்க வேண்டும் என்றால் இங்கே உருப்படியாக ஏதும் செய்ய முடியாது எனும் போது இவ்வளவு நேரம் அனாவசியம்.

  • பெண்கள் சார்ந்த ரசனை எழுத்திற்கு வீட்டில் கண்டனங்கள் எழவில்லையா?

வீட்டில் என் ஃபேஸ்புக் பதிவுகளை வாசிப்பது என் மனைவி ஒருத்தி தான். அவளுக்கு அதில் இதுகாறும் பிரச்சனைகள் ஏதுமில்லை. எல்லை மீறுவதாக நினைக்கையில் அவள் சுட்டிக்காட்டத் தயங்குவதில்லை. அது எனக்கும் சரியெனப்பட்டால் திருத்தி விடுவேன்.

  • அதேபோல உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து மாறுபடும் குடும்பத்தினர் / நண்பர்களை எப்படி கையாள்கிறீர்கள்?

அது எளிமையானது. அவர்களிடம் நான் அரசியல் பேசுவதில்லை. அவர்களாகப் பேச எத்தனித்தால் தலையாட்டியோ, புன்னகைத்தோ கடந்து விடுவேன். சில நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் எல்லாம் பேசுவதுண்டு. அது விளிப்பே கெட்ட வார்த்தையில் துவங்குமொரு அதிபுரிதல் வட்டம். அதனால் அரசியல் உறவைப் பங்கப்படுத்தாது.

***

Share post:

Subscribe

Popular

More like this
Related