நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம் வீட்டில், நம் கண் முன் உலாவரும் கொசுக்கள், ஈக்கள் போன்றவை வெளியில் இருக்கும் நோய்களை நம் அனுமதியில்லாமலேயே வீட்டுக்குள் பரப்பிவிடுகின்றன. சில நேரங்களில் சுற்றுச்சூழல் காரணமாக இருந்தாலும், பல நேரங்களில் வீட்டை நாம் வைத்திருக்கும் விதமே அதற்குக் காரணமாகிறது.
இவற்றை தடுக்க நாம் என்ன முயற்சிகள் எடுத்தாலும், அது தற்காலிக விடுதலையாகவே இருக்கிறது. சுவற்றின் ஓரங்கள், சுவற்றில் இருக்கும் ஓட்டைகள், மூலை முடுக்குகள் என ஏதாவது ஒரு வழியில் எறும்புகள் வந்துவிடும். நம்மைச் சுற்றிலும் 12 ஆயிரம் வகையான எறும்புகள் இருக்கின்றன.

10,000 ஒரு குவாட்ரில்லியனுக்கும் அதிகமான எறும்புகள் கிரகத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எறும்புகள் நிலத்தடியில் மிகப்பெரிய காலனியாக வாழும் பூச்சியினம். இதில் ராணி எறும்பு, தொழிலாளி எறும்பு என்று வேறுபாடு உள்ளது.
தொழிலாளி எறும்புகள்தான் ராணி எறும்புகளுக்கு உணவுகளை சேமித்துத் தருகின்றது. எறும்புகள் மிகவும் சிறியவை என்பதால், அவை வீட்டுக்குள் வருவதை நீங்கள் தடுப்பது மிகவும் கடினம். உங்கள் வீட்டை சுற்றியுள்ள கதவுகள் அல்லது ஜன்னல்களை சுற்றியுள்ள மிகச் சிறிய விரிசல்கள் வழியாகவும் எறும்புகள் வீட்டிற்கு நுழையும்.
எறும்பை கட்டுப்படுத்துவது எப்படி?
எறும்புகளை கட்டுப்படுத்த பொறுமை தேவை. எறும்புகளின் வரிசையை பார்த்ததும் நீங்கள் அதற்கு மருத்துகள் தெளித்து கொல்ல நினைப்பது தவறு. ஏனெனில், பெரும்பாலும் எறும்புகள் உணவுக்காக மட்டுமே வீட்டுக்குள் வரக்கூடியவை. சில நேரங்களில் மட்டுமே குளிர்ச்சியான இடத்தை தேடி வரும். வீட்டுக்குள் வரும் சிறு கூட்டத்தை அழித்துவிட்ட பிறகு வீட்டுக்கு வெளியே சிறிது தொலைவில் அவ்வப்போது உணவு வைத்தால் எறும்புகள் வீட்டுக்குள் வராது.
1. எலுமிச்சை
எலுமிச்சையின் வாசனை எறும்புகளுக்கு பிடிக்காது. எனவே தரையை துடைத்து சுத்தம் செய்யும் போது, தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து, தரையைச் சுத்தம் செய்யலாம். எறும்புகள் வரும் வழியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து விடலாம். எலுமிச்சை தோலை வைப்பதன் மூலமும் எறும்புகள் வருவதை தடுக்க முடியும்.

2. மிளகு
எறும்புகளுக்கு இனிப்பு பிடிக்கும் அளவிற்கு நேர்மாறாக காரம் பிடிக்காது. குறிப்பாக மிளகு இருந்தால், அந்த வாசனைக்கு எறும்புகள் வீட்டிற்குள் வராது. மிளகு எறும்புகளை கொல்லாது ஆனால் எறும்புகள் வீட்டிற்குள் நுழைவதை நிச்சயம் தடுக்கும். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் வழிகளில் மிளகை தூளாக்கி தூவி விடலாம். இது எறும்புகளை விரட்டி விடும். அல்லது எறும்புகள் நுழையும் இடங்களில், மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து பெப்பர் ஸ்ப்ரே ஆகவும் தெளித்து விடலாம்.

3. ஆரஞ்சு
எலுமிச்சை போலவே ஆரஞ்சு பழத்தின் வாசனையும் எறும்புகளுக்குப் பிடிக்காது. ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஆரஞ்சு பழத்தோலை முக்கி, பின்பு பசை போல செய்துகொள்ளவும். அதை எறும்பு வரும் இடங்களில் தெளித்தால் எறும்புகள் வீட்டிற்குள் வருவதை தடுக்கலாம்.

4. சாக்பீஸ்
எறும்புகளை வருவதை தடுப்பதற்கு கரப்பான் பூச்சிகளுக்கான சாக்பீஸ்களைப் பயன்படுத்தலாம். வீட்டிற்கு வெளியே வாசலில் சாக்பீஸைக் கொண்டு கோடு போட்டு விடலாம். உணவு பொருட்கள், நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், சர்க்கரை இவற்றை நோக்கி எறும்புகள் வந்தால், அந்த பாத்திரத்தைச் சுற்றிலும் தரையில் கோடு போடலாம். இது ஒரு நல்ல தீர்வாக அமையும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த சாக்பீஸ் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
5. உப்பு
உப்பைப் பயன்படுத்தியும் எறும்பு தொல்லையில் இருந்து விடுதலை பெற முடியும். கொதிக்க வைத்த தண்ணீரில், உப்பைச் சேர்த்து கலக்கி, எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம். வேண்டுமானால் ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி தெளிக்கலாம்.