ஈக்கள், மனிதனை கடிக்காமலே அவற்றின் கால்கள், ரோமங்கள் மூலம், ஆபத்தான நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை பரப்புகின்றன. திறந்திருக்கும் உணவுகளில் அமர்ந்து அதில் பாக்டீரியாக்களை பரப்பி அதன் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்த கிருமிகளால், காலரா, சீதபேதி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உணவுப்பொருட்கள், தண்ணீர், தின்பண்டங்கள், பழங்கள் ஆகியவற்றில் ஈக்கள் உட்காராமல் பார்த்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். திறந்தவெளியில், உணவுப் பொருட்களை வைப்பதை முதலில் தவிர்க்க வேண்டும்.
ஈக்கள் மிகவும் அருவருப்பானவை. ஆனால், தேனீகளுக்கு அடுத்தப்படியாக மகரந்த சேர்க்கையாளர்கள் ஈக்கள் தான். இது அழுக்குகளில் தான் முட்டையிட்டு பெருகுகின்றன.

ஒவ்வொரு பெண் ஈயும் 100 முதல் 150 முட்டைகளிடும். அவை இரண்டு வாரங்களில் ஈக்களாக உருவெடுக்கும். ஈக்கள் கழிவுகளில் வாழ்வதால் அவை நோய்களை பரப்பிவிடுகின்றன.
Also Read: மழைக்காலத்தில் பரவும் 7 நோய்கள் என்னென்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?
ஈக்களை கட்டுப்படுத்துவது?
- உற்பத்தி: உங்கள் வீட்டை சுற்றி ஈக்கள் முட்டையிடும் இடங்கள், பொருட்களைக் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். ஒருவேளை நீங்கள் அதன் லார்வாக்களை கண்டால், பூச்சி மருந்துகளை தெளித்து அழிக்கலாம்.
- கற்பூரம்: கற்பூரத்தை ஏற்றி, தங்கியிருக்கும் இடம் முழுவதும் காட்டினால், அதன் நறுமணத்தினால் ஈக்கள் உடனடியாக வெளியேறிவிடும்.
- திரைச்சீலைகள்: வீடுகளில் ஜன்னல்கள் மற்றம் கதவுகளில் திரைகள் இடுவது நல்லது.
- துளசி: வீடுகளில் துளசி, புதினா, ஓமம், சாமந்தி ஆகிய செடிகளை வளர்ப்பது, ஈக்களை வராமல் தடுக்கும்.
- எண்ணெய்கள்: யூகலிப்டஸ், பெப்பர்மின்ட், லாவெண்டர் ஆகிய எண்ணெய்களை ஒரு பேப்பரில் தெளித்து ஓரிடத்தில் வைத்துவிட்டால் அதன் வாசனைக்கு ஈக்கள் வராது.
- உணவுப்பொருட்கள்: வீடுகளில் உணவுகளை, பழங்களை கட்டாயம் மூடி வைக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது சிறந்தது.
- ஈ காகிதங்கள் (Fly papers) : சூடான கலவையான பிசின் மற்றும் ஆமணக்கு எண்ணெயினால் தயாரிக்கப்பட்ட பசைத்தன்மையுள்ள இந்த காதிதங்கள் ஈக்களை அந்த பேப்பரில் சிக்க வைக்கின்றன. பறக்கும் போது ஈக்கள் இந்த பசைத்தன்மையுள்ள பேப்பரில் சிக்கிக்கொள்கின்றன.
- கிராம்பு: கிராம்பின் வாசனையை பொறுக்காத ஈக்கள், அடுத்த நொடியே வீட்டை விட்டு ஓடிவிடும்.
- இலவங்கப் பட்டை: இதனை ஏர் ஃப்ரெஷ்னராக பயன்படுத்தினால், அதன் நறுமணம் பொறுக்காமல் ஈக்கள் வெளியேறிவிடும்.
- சிவப்பு மிளகாய்: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிவப்பு மிளகாயை போட்டு சிறிதளவு தண்ணீரை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். இந்த ஸ்ப்ரேயை வீட்டினுள் தெளியுங்கள். ஈக்கள் கொல்லப்படும் மேலும் வருவது தடுக்கப்படும்.
- இஞ்சி: ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, 2 ஸ்பூன் உலர்ந்த இஞ்சி தூள் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலக்கவும். பிறகு அதனை ஈக்கள் குவியும் இடமெல்லாம் தெளிக்கவும்.
- சுற்றுப்புற தூய்மை: ஈக்கள், ஈரமான அல்லது அழுகிய உணவுகளுக்கு அதிகம் ஈர்க்கப்படுகின்றன. நீங்கள் தேநீர் அல்லது மற்ற உணவுப்பொருட்கள் சிந்தும் போது உடனடியாக சுத்தம் செய்யுங்கள்.