ஒரு போர் என்னவெல்லாம் செய்யும்? பல்லாயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவிக்கும். அகதிகளை உருவாக்கி நாடு நாடாக அலையவைக்கும், நாட்டின் எல்லைகளைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும், அதன்பின்னால் போரினால் ஏற்பட்ட சேதங்களை உலக வங்கி பில்லியனில் கணக்கெடுக்கும். ஆனால் சில சமயங்களில் இது போன்ற நெருக்கடி நிலைமைகள் கூட மாபெரும் முன்னேற்றத்திற்கான வாசலை அகலத்திறந்து வைக்கும். அப்படிப்பட்ட போர் தான் ரமதான் போர் அல்லது யோம் கிப்பூர் போர்(Yom Kippur War) அல்லது அக்டோபர் போர். என்ன பெயர் வைத்தால் என்ன? போர் என்றாலே அக்கப்போர் தான்.

1973 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி , யூதர்களின் மிக முக்கிய பண்டிகையான யோம் கிப்பூரில் ஒட்டுமொத்த இஸ்ரேலும் மூழ்கியிருந்தது. யோம் கிப்பூர் தினத்தன்று உணவு கூடாது, பொழுது போக்கு கூடாது, மற்ற வேலைகள் கூடாது, போரா ? மூச்… மொத்தத்தில் கடவுளை தொழுவதைத் தவிர வேறேதும் செய்யக்கூடாது.
அந்நாளில் தான் எகிப்தும் அதன் ஒன்றுவிட்ட சகோதரனான சிரியாவும் இஸ்ரேலின் மீது போர்தொடுத்தது. விரத தினம் என்பதால் பல்லைக் கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது இஸ்ரேல். அடுத்தநாள் காலை இஸ்ரேலின் படை களமாட தயாரானது. தொடர்ந்து இருபது நாள் போர் !!! மரண அடி என்று கூட சொல்லலாம். யாருக்கு என்கிறீர்களா? எகிப்துக்கும், சிரியாவிற்கும். போர்க்காலங்களில் வாகைப்பூக்களையே வென்றெடுத்துப் பழக்கப்பட்டவர்கள் இஸ்ரேலியர்கள். பட்ட அவமானங்களையும், அடிகளையும் மூட்டை கட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தன எகிப்தும் சிரியாவும்.
எவ்வளவு தூரம் போரிட்டாலும் இஸ்ரேலை வீழ்த்த முடியவில்லை என்ற கோபம் மத்தியக்கிழக்கில் பெரும்பான்மையான நாடுகளுக்கு இருந்தது. திருப்பி அடிக்க வேண்டும் ஆனால் இம்முறை இன்னும் அழுத்தமாக , மீண்டு வரமுடியாத அளவிற்கு அடிக்கவேண்டும் என்ன செய்யலாம்? யோசித்தார்கள்.
அட இதை மறந்து விட்டோமே? என்று வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார்கள். 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பான OAPEC (Organization of Arab Petrol Exporting Countries.) ஐ அவசர அவசரமாகக் கூட்டினார்கள்.
- OAPEC – ORGANIZATION OF ARAB PETROL EXPORTING COUNTRIES அங்கம் வகிக்கும் நாடுகள் : குவைத், லிபியா மற்றும் சவுதி அரேபியா. அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, ஈராக், கத்தார், சிரியா, துனிசியா.
- OPEC- ORGANIZATION OF PETROL EXPORTING COUNTRIES. அங்கம் வகிக்கும் நாடுகள் : அல்ஜீரியா, அங்கோலா, காங்கோ, வெனிசுலா, சவூதி அரேபியா, ஈகுவடார் , காபன், ஈராக், ஈரான்,குவைத், லிபியா, நைஜீரியா,கத்தார், ஐக்கிய அரபு அமீரகம்.
இஸ்ரேலின் வெற்றிக்கான மிக முக்கிய காரணம் அவர்களுக்கும் மேற்குலக நாடுகளுக்கு இடையேயான நட்பு . அதை முறியடிப்பதன் மூலம் இஸ்ரேலை தனிமைப்படுத்தலாம். அதன் பின் என்ன? ஆற அமர இஸ்ரேலை ஒரு கை பார்த்துக்கொள்ளலாம். அதுசரி அவர்களின் நட்பை எப்படிப் பிரிப்பது? இருக்கவே இருக்கிறது எண்ணெய் வியாபாரம். முடிந்தது கதை. அடுத்தநாள் இஸ்ரேலின் நட்பு நாடுகள் அனைத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ” இஸ்ரேலுக்கு உதவி செய்வதை நிறுத்தும் வரை உங்களுக்கு கச்சா எண்ணெய் , பெட்ரோல், டீசல் எதுவோ கிடையாது!! கால் கிலோ “தார்” கூட வாங்க முடியாத நிலைமை.
ஒரு கணம் அதிர்ந்து போனது மேற்குலகம். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், பிரேசில்,கனடா நாட்டு பிரதமர்கள் கன்னத்திலும், அந்தந்த நாட்டின் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அதிபர்கள் தலையிலும் கை வைத்தார்கள் ஒரு சேர.
கார்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்த்தாலே தலை சுற்றியது அவர்களுக்கு . எவ்வளவோ கேட்டுப்பார்த்தார்கள் ஒன்றும் கதை நடக்கவில்லை. வேறு எங்காவது வாங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. என்ன செய்யலாம்? மக்களை பொறுமை காக்க சொல்வதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஏதாவது செய்தே ஆக வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக என்ன செய்யலாம் எதை பயன்படுத்தலாம்? கேட்டவர் நிக்ஸன் , அமெரிக்க அதிபர்.
மேல்மட்ட , நடுமட்ட மற்றும் கீழ்மட்ட என எல்லா அதிகாரிகளும் கூடி விவாதித்து ஒரு அறிக்கையை தயார் செய்தார்கள். இனிமேல் மைலிற்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்லவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. தொழிற்சாலைகள் , உணவகங்கள், பள்ளிகள் என அனைத்தும் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்பட்டன. குறைந்த செலவில், குறைந்த எரிபொருளில் அதிக தூரம் ஓடக்கூடிய கார்களை தயாரித்துத்தருமாறு டெட்ரோய்ட் வாகன உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னால் எரிபொருளை சாத்தியமிருக்கும் எல்லா வழியிலும் சிக்கனப்படுத்த தொடங்கியது அமெரிக்கா. மக்கள் அவற்றிக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டதன் விளைவாக அமெரிக்கா அந்த நெருக்கடி நிலையை சமாளித்தது. அதன் பின்னர் தைரியமாக சூரிய சக்தியினை பயன்படுத்த ஆயுத்தமாகினர் அமெரிக்கர்கள். அதிலும் வெற்றி. உண்மையில் அவர்கள் அரபு நாடுகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்ததாக ஜப்பான். அமெரிக்க அளவிற்கு பொருளாதார பலமோ, வசதிகளோ இல்லாத ஜப்பான், மிகத்திறம்பட சிக்கலை சமாளித்தது என்றே சொல்லலாம். அமெரிக்காவில் அதிகாரிகள் முடிவெடுத்தார்கள், மக்கள் கேட்டார்கள். ஆனால் ஜப்பானிலோ மக்கள் தங்கள் நாட்டின் பிரச்சனையை உணர்ந்து அவர்களே முடிவெடுத்துக்கொண்டார்கள். அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக மக்கள் அனைவரும் கார்களை வீட்டிற்குள் பாதுகாப்பாக வைத்துவிட்டு அலுவலகங்களுக்கு நடக்க ஆரம்பித்திருந்தார்கள்!! தூரம் அதிகமா? சரி சைக்கிள் வாங்கிக்கொள்கிறோம் என்றார்கள் மக்கள். ஜப்பானில் சைக்கிள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டது அந்த நெருக்கடிக்குப்பின்னால் தான். இன்று வரை அங்கே சைக்கிளின் பயன்பாடு மிக அதிகம். ஜப்பானியர்களுக்கு மூக்குத்தான் சற்று முன்னப்பின்ன இருக்குமே தவிர மூளை என்றுமே டாப் என உலகம் அப்போதும் ஒருமுறை அறிந்து கொண்டது.

ஜப்பானையாவது அந்தக்கால கட்டத்தில் வளரும் நாடுகளில் சேர்த்துக்கொள்ளலாம், தென்னமெரிக்க நாடான பிரேசில் அப்போதுதான் வளர தயாராகிக்கொண்டிருந்தது. அமெரிக்கா குட்டிக்கார்களை தயாரித்துக்கொண்டது. ஜப்பானியர்கள் பேசவே வேண்டாம் சைக்கிள் பெடல் மிதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாம் என்ன செய்யலாம் என்று எமிலியோ கார்ராஸ்தாசு மெடிசி (Emílio Garrastazu Médici) என்று எளிதில் நம் வாய்களில் நுழையாத பெயரைக் கொண்டவரான பிரேசிலின் அப்போதைய அதிபர் தலையைக் குடைந்து கொண்டிருந்தார். தலை வலி தாங்காமல் உதவியாளரை தேநீர் எடுத்துவரச்சொல்லியிருக்கிறார் அதிபர். அடுத்த பத்தாவது நிமிடத்தில், தேநீரோடு தனியாக கிண்ணத்தில் சர்க்கரையும் கொண்டுவைக்கப்பட்டது. அதிபரின் தலைவலி முடிவுக்கு வந்தது!! ஆமாம் பிரேசிலில் அதிகம் விளையக்கூடியது கரும்பு தான்.

கரும்பை பிழிந்து சர்க்கரை எடுக்கும் தொழில் அங்கே அமோகமாக நடந்துகொண்டிருந்த காலம் அது. மிஞ்சிப்போன கரும்புச்சக்கையிலிருந்து மீத்தைல் ஆல்கஹால் அல்லது மீத்தேன் எடுக்க கற்றிருந்தார்கள் பிரேசிலியர்கள். மீத்தைல் ஆல்கஹால் என்றால் என்ன என்கிறீர்களா? அட நம்ம ஊர் எரிசாராயம்!! தொழில் வர்த்தகர்களை கூடிப்பேசினார் அதிபர். ப்ரோ ஆல்கஹால் என்னும் திட்டம் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. எத்தனால் மூலமாக காரை இயக்குவது பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்குவிக்கப்பட்டன.
இன்று பெட்ரோலியத்திற்கான மாற்று என்று கூகுளில் தேடினால் கிடைக்கும் பெருவாரியான பதில் எத்தனாலாகத் தான் இருக்கும். ஆனால் அவற்றிற்க்கான விதை முதன்முதலில் பிரேசிலில் தான் போடப்பட்டது. இன்று சர்க்கரை தொழிலும் , மீத்தேன் தொழிலும் பிரேசிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது என்றே சொல்லலாம். அட!! மறந்துவிட்டேனே அந்தப் போரும் தான்!!