டைட்டானிக்(Titanic) என்றவுடன் நம்மில் பலருக்கும் பல ஞாபகங்கள் வரும். வருடந்தோறும் எத்தனையோ கப்பல்கள் கடலுக்குள் மூழ்கிக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனாலும் டைட்டானிக் கப்பல் மூழ்கிய வரலாறு இன்று வரை மக்களால் பேசப்பட்டுக்கொண்டே வருகிறது. ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒருவரது கைக்கடிகாரம் சமீபத்தில் விடப்பட்ட ஏலத்தில் 40 லட்ச ரூபாய்க்கு விற்றுப் போயிருக்கிறது.

வரலாற்றுச் சோகம்
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன்(Southampton) துறைமுகத்திலிருந்து கிளம்பிய டைட்டானிக் கப்பல் நியூயார்க்(New York) நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையால் சேதமடைந்த இக்கப்பல் கடலுக்குள் மூழ்கிப்போனது. 1500க்கும் மேற்பட்டோர் இவ்விபத்தில் மரணமடைந்தார்கள். அப்படி அட்லாண்டிக் கடலில், அந்தக் குளிரில் இறந்துபோனவர்களில் ஒருவர் தான் சினாய் கண்டோர்(Sinai Contour).

கப்பல் மூழ்கிக்கொண்டிருந்த நேரம். பாதுகாப்புப் படகுகளில் ஏறுவதற்காக முயற்சிக்கையில் அட்லாண்டிக்கின் உயிர் உறையும் குளிரில் சிக்கி இறந்துபோனார் கண்டோர். அடுத்த சில மணி நேரங்களில் அவரது மனைவி மரியமும் இறந்துபோனார். அதன்பின்னர் நடத்தப்பட்ட ரோந்து பணிகளின் போது கண்டோரின் உடல் கண்டெடுக்கப்பட்டு நியூயார்க்கில் புதைக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் தேடிப் பார்த்ததில் சட்டைப் பாக்கெட்டிற்குள் கைக்கடிகாரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிலைமைகள் சரியான பின்னர் கடிகாரம் அவரது வாரிசுகளுக்கு நேரிடையாக வழங்கப்பட்டது.
40 லட்சம் ஏலம்!!
1921-ஆம் ஆண்டு டைட்டானிக் மூழ்கிப் போனது. நூற்றாண்டுகள் கழித்து அதில் பயணித்தவரின் கடிகாரம் ஏலத்திற்கு வருகிறதென்றால் யாருக்குத்தான் அதை வாங்க ஆசை இருக்காது? பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் இந்தக் கடிகாரத்தை 57,500 அமெரிக்க டாலருக்கு (40,70,137 ருபாய்!!) வாங்கியிருக்கிறார்.
இதற்கு முன் ஏலத்திற்கு வந்த “டைட்டானிக்” பொருட்கள்!!
டைட்டானிக் கப்பலைப் பற்றி அதிகளவில் மக்கள் பேசத்தொடங்கியது டைட்டானிக் திரைப்படத்திற்குப் பிறகுதான். கப்பலில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் பின்னாளில் ஏலத்தில் விடப்படும் போது மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்தன. அப்படி ஏலத்தில் அதிக விலைக்கு விற்ற ஐந்து பொருட்களைப்பற்றி கீழே காணலாம்.
கைக்கடிகாரம்( Wrist watch)

முதல் வகுப்பில் அதிகாரியாகப் பணியாற்றிய எட்மண்ட் ஸ்டோன்(Edmund Stone) என்பவருக்குச் சொந்தமானது இது. கண்டெடுக்கப்பட்ட போது கடிகாரம் காட்டிய நேரம் 2.26. ஆமாம் கப்பல் கடலுக்குள் போன அதே நேரம்.!! இந்தக் கடிகாரம் 1.07 கோடிக்கு ஏலம் போனது!!
கம்பளியால் ஆன கோட்(Fur Coat)
1.73 கோடிக்கு விற்பனையான இந்தக் கோட், இந்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர் ஒருவருடையதாகும்.

கப்பலின் கட்டுமான வரைபடம்(Ship Plan)
9.2 மீட்டர் நீளமுள்ள இந்த வரைபடமானது 2.55 கோடிக்கு விற்பனையானது. கப்பல் மூழ்கிய விதத்தைப் பற்றிப் பின்னால் எழுந்த பல கேள்விகளுக்கு இந்த வரைபடம் விடையாய் அமைந்தது.

வெல்லஸ் ஹார்ட்லி (Wallace Hartley)பயன்படுத்திய வயலின்(Violin)

டைட்டானிக் படத்தில் கப்பல் மூழ்கத் துவங்கும் காட்சியில் இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைப்பார்கள் அல்லவா? அது உண்மை தான். கப்பலில் இருந்த வெல்லஸ் ஹார்ட்லி என்பவர் கடைசியாக இந்த வயலினில் வாசித்த படியே பாடல்களைப் பாடினாராம்.!! இதன் விற்பனை விலை என்னவென்று தெரியுமா? 12.41 கோடி!!
வைரத்தாலான கைச்சங்கிலி (Diamond Bracelets)

பெரும்பாலும் டைட்டானிக் ரசிகர்களுக்கு மறக்காதது அதில் கதாநாயகி அணிந்திருந்த கழுத்துச் சங்கிலி. அதே போல் உண்மையாகவே கப்பலில் இருந்தும் கைச்சங்கிலி ஒன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏமி(Amy) என்று பொறிக்கப்பட்ட இச்சங்கிலி தான் கப்பலில் இருந்து எடுக்கப்ப பொருட்களிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அதன் விலை 14.06 கோடி ருபாய்!!