இன்றைய தேதியில் டாட்டூ மிகச்சாதாரண விஷயம். தங்களுடைய பெயரை அல்லது நெருக்கமானவரின் பெயரை வித விதமாக பல வண்ணங்களில் டாட்டூவாக குத்திக்கொள்கிறார்கள். அதற்கென பிரத்யேக மின்னாற்றலால் இயங்கக்கூடிய கருவிகள் வந்துவிட்டன. பத்தே நிமிடம் உங்களுடைய பெயரை உங்களுக்கே புரியாத மாதிரி உங்கள் உடம்பிலேயே குத்தி விடுவார்கள். இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது. நீங்கள் யாருடைய பெயரை வேண்டுமானாலும் குத்திக்கொள்ளலாம். யாராலும் அத்தனை சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது.

சைபீரியா, எகிப்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் டாட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டு பழமையான பனிமனிதனின் உடல் முழுவதும் டாட்டூகள் இருந்தன. ஆக, டாட்டூவின் வயது 5000 த்திற்கும் அதிகம் என்பது தெளிவாகிறது.
டாட்டூ குத்திக்கொள்ளவில்லை எனில் திருமணத்திற்கு பெண் தரமாட்டார்களாம்.
எலும்பு ஊசி
ஆனால், அக்காலத்தில் எப்படி இதனைச் செய்திருப்பார்கள்? எந்தந்த கருவிகளை உபயோகித்திருப்பார்கள்? என்ற கேள்வி பல வருடமாக கேள்வியாகவே இருந்தது. அதற்கான பதில் ஆஸ்திரேலிய பல்கலைகழகத்தின் பல்லாண்டுகளாக மூடப்பட்ட அறையில் திறப்பிற்காக காத்திருந்திருக்கிறது. முதன்முதலில் அதன் கதவைத் திறந்தவர்கள், அங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான்.

தூசிப்படலத்திற்கு நடுவே சுமார் 2700 வருடம் பழைமையான டாட்டூ போடும் கருவிகளை கண்டறிந்துள்ளர்கள். அவற்றில் இருந்தவை அனைத்தும் மனித எலும்புகள் மற்றும் பறவையின் எலும்புகளால் செய்யப்பட்ட ஊசிகள் என்கிறார்கள் தூசு தட்டிய ஆராய்ச்சியாளர்கள் அனைவரும்.
தெற்கு பசிபிக்கில் இருக்கும் தோங்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் இவை என அருங்காட்சியக ஆவணங்கள் சாட்சியளிக்கின்றன.
இதற்கு முன்
உலகம் முழுவதும் டாட்டூக்கள் வெவ்வேறு முறையில் போடப்பட்டிருக்கின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டில் சாலமன் தீவுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 3000 ஆண்டு பழைமையான டாட்டூ ஊசி ஒன்று கிடைத்துள்ளது. அவை எரிமலைக் குழம்புகளால் ஆன பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டவையாகும். அமெரிக்காவின் டென்னீசே மாகணத்திலும் மனித எழும்புகளால் ஆன டாட்டூ ஊசி ஒன்று சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கு அமெரிக்க மாகாணமான உடாவில் இருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தட்டிருக்கும் பழங்கால சிறுமியின் உடலில் டாட்டூக்கள் இருக்கின்றன. இவை சப்பாத்திக்கள்ளியின் முட்களால் வரையப்பட்டவையாகும்.
நீண்ட வரலாறு…
டாட்டூ எனப்படும் வார்த்தை பாலிநேசிய வார்த்தையான “tatau” வில் இருந்து வந்தது. ஹவாய் தீவுகளில் டாட்டூ போட்டுக்கொள்வது பாரம்பரிய நிகழ்வாக பார்க்கப்பட்டிருக்கிறது. டாட்டூ இல்லாமல் யாரும் இருக்க கூடாது. அதுவும் ஆண்கள் இருந்தால் கிண்டல் கேலி தூள் பறக்கும். டாட்டூ குத்திக்கொள்ளவில்லை எனில் திருமணத்திற்கு பெண் தரமாட்டர்களாம். பெண்களும் டாட்டூ குத்தியவர்களைத்தான் குறிவைத்ததாக வரலாறு வருத்தம் தெரிவிக்கிறது. பன்னெடுங்காலமாக இருந்துவந்த நடைமுறையில் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கைவைக்க, இப்போது அந்த கலாச்சாரம் மெல்ல அழிந்துவருகிறது.