உலக வரலாற்றில் மனிதன் இதுவரை தயாரித்ததிலேயே மிகப்பெரிய கப்பல் என்ற பெருமை சீவைஸ் ஜியன்ட் (Seawise Giant) என்ற ஜப்பானியக் கப்பலையே சேரும். பூமியில் மிகப்பெரும் நகரும் இயந்திரமான இந்தக் கப்பல் ஆங்கிலக் கால்வாய், பனாமா கால்வாய் என கடல் வர்த்தகப் பாதைகள் பெரும்பாலானவற்றில் பயணித்திருக்கிறது.1979 ஆம் ஆண்டு Sumitomo Heavy Industries என்னும் ஜப்பானிய நிறுவனம் இந்தக் கப்பலை உருவாக்கியது. சரக்குக் கப்பல் வரலாற்றில் சீவைஸ் ஜியண்ட் ஒரு சாதனையாகும்.

ஏன் கடல் வழி வர்த்தகம் ?
உலகில் 90% சரக்குப் பரிமாற்றம் கடல்வழியே தான் நடக்கின்றன. இந்தக் கடல் வாணிபத்தில் எண்ணெய் ஏற்றுமதி கப்பல்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அடுத்தபடியாக ஏனைய வாகன, எலெக்ட்ரானிக் பொருட்கள் சரக்குக் கப்பலில் இடம்பெறுகின்றன. உலகம் முழுவதும் முக்கிய வர்த்தகத் துறைமுகங்கள் பலவற்றை இவை இணைக்கின்றன.
கப்பல்களின் அசாதாரணமான எடை காரணமாக அதில் உபயோகிக்கப்படும் எரிபொருளின் அளவானது அதிகரிக்கிறது. இப்படி லிட்டர் கணக்கில் எரிபொருளை எடுத்துக்கொள்ளும் இந்தக் கப்பல்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவை நினைத்தால் தான் பயம் எட்டிப்பார்க்கிறது.
ராட்சசன்
முழுவதும் நிரப்பப்பட்ட நிலையில் இந்தக் கப்பலின் எடை 6,57,019 டன்கள் ஆகும். இதன் மொத்த நீளம் 1598 அடி. அகலம் 226 அடியாகும். 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரான் – ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட இந்தக் கப்பல் கடலில் மூழ்கிப்போனது. அதன்பின்னர் நார்மன் இன்டர்நேஷனல் என்னும் நிறுவனம் அதை கடலில் இருந்து மீட்டெடுத்து பழுதுநீக்கி மறுபடியும் களம் இறக்கியது.

அப்போது அதன் பெயர் ஹேப்பி ஜியண்ட் என மாறியிருந்தது. அதன் பின்னர் கைமாறிய இந்தக் கப்பல் ஜஹ்ரே வைக்கிங் என்று அழைக்கப்பட்டது. நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தக் கப்பலை வாங்கியிருந்தது. இப்படி தன் 30 ஆண்டுகால பயணத்தில் 5 முறை பெயர்மாற்றம் கண்ட இந்தக் கப்பலின் கடைசிப் பயணம் இந்தியாவிற்கு வந்தது தான். கடந்த 2009 ஆம் ஆண்டு குஜராத் துறைமுகத்தில் தனது 30 ஆண்டு பயணத்தை நிறுத்திக்கொண்டது.