வரலாற்றில் இந்தியா எத்தனையோ படையெடுப்புகளைச் சந்தித்திருக்கிறது. கிரேக்கத்தின் அலெக்சாண்டர், முகலாயர்களில் பாபர், மங்கோலியர்களில் தைமூர் எனப் பெருந்தலைகள் கூட இந்தியாவின் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர். ஆனால், வெள்ளையர்களின் வருகைக்குப் பின்னர் தான் இந்தியா மிக மோசமான பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்தது. சுமார் 400 வருட அடிமை ஆட்சி. இந்தியாவின் வளங்கள் அனைத்தும் ஐரோப்பாவிற்கு நாடு கடத்தப்பட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வர வேண்டும்? அதற்கு விடை இரண்டே பொருட்கள் தான். ஒன்று மிளகு, மற்றொன்று பருத்தி.

ஐரோப்பாவின் குளிர்காலம்
ஐரோப்பாவின் குளிர்காலம் மிகக் கடுமையானது. வெள்ளிப் போர்வை விரித்தது போல் பனி, மண்ணை மறைத்து விடும். ஐரோப்பாவில் குளிர்காலமே அதிக நாட்கள் நீடிக்கும் என்பதால் விவசாயம் மிகக் குறுகிய காலத்திற்குள் நடைபெறும் தொழிலாகவே இருந்தது. வெயில் காலங்களில் நடைபெறும் சொற்ப விவசாயத்தில் கோதுமையைப் பயிரிடுவார்கள். கால்நடைகளைப் பராமரிப்பார்கள். எல்லாம் குளிர்காலம் துவங்கும் வரையில் தான். ஐரோப்பாவில் குளிர்காலத்தின் போது சராசரியாக -18 டிகிரிக்கும் குறைவாகவே வெப்பநிலை இருக்கும். இதனால் கைவசம் இருக்கும் கோதுமையை மாவாக அரைத்துப் பத்திரப்படுத்துவார்கள். ஆரோக்கியமான கால்நடைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றையெல்லாம் உணவிற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மாடுகளுக்குத் தீவனம் கிடைக்காத நேரம் என்பதால் குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே அவற்றைக் கொன்று, அதன் இறைச்சியைப் பதப்படுத்தி வைப்பார்கள். வசந்த காலத்தின் தொடக்கம் வரை கோதுமை மாவால் சுடப்பட்ட ரொட்டியினுள் பதப்படுத்தப்பட்ட மாட்டுக் கறியினை வைத்துச் சாப்பிடுவார்கள். அங்குதான் பிரச்சனை. அதில் உப்பு மட்டும் இருக்கும். வேறு எந்தச் சுவையும் இருக்காது. எவ்வளவு நாள் அப்படி சாப்பிட முடியும்? அது தான் அங்கு இறக்குமதியான மிளகு, சுக்கு, மிளகாய் ஆகியவற்றின் மதிப்பைக் கிடுகிடுவென ஏற்றிவிட்டது. இன்னொன்று கடுங்குளிரால் இருந்தவர்களுக்கு இந்தியா மற்றும் சீனா நாடுகளில் இருந்து போன பட்டாடைகள் கதகதப்பை அளித்தது.
இந்தியாவைத் தேடி !!
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தெற்காசிய நாடுகளில் இருந்து தான் மிளகு, பருத்தி அதிகம் விளைகிறது என்பது 1400 – ஆம் ஆண்டு வாக்கில் தெளிவாகத் தெரிந்திருந்தது. இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கி வருவதற்காக வியாபாரிகளை ஒவ்வொரு ஐரோப்பிய அரசும் தேடி அலைந்தது. அகப்பட்டவர்களை இந்தியா சீனாவிற்குப் பெரும்பணம் செலவழித்து வர்த்தகத்திற்காக அனுப்பியது. அதுவரை ஆசிய – ஐரோப்பிய வர்த்தகம், பட்டுச் சாலை (Silk Road) வழியாக நடந்து வந்தது. 1453 – ஆம் ஆண்டு துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றி ஒட்டமான் சாம்ரயாஜ்யத்தை நிறுவினார்கள். அதன் பின்னர் துருக்கியர்களால் பட்டுச் சாலையைப் பயன்படுத்துவோருக்குக் கடும் வரிகள் விதிக்கப்பட்டன. இது ஐரோப்பியர்களை கடல்வழி வாணிபத்தினை நோக்கி நகர்த்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிளம்பியவர் தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ்(Christoper Columbus). ஆனால், அவர் வழி மாறி அமெரிக்காவிற்குச் சென்றுவிடவே, முதன் முதலில் இந்தியாவிற்கு வந்திறங்கிய(1498) ஐரோப்பியர் என்ற பெருமை வாஸ்கோட காமா (Vasco da Gama)விற்குக் கிடைத்தது. போர்த்துக்கீசியரான வாஸ் கோட காமா, கேரளாவின் கோழிக்கோட்டில் வந்து இறங்கினார். ஒரு கப்பல் முழுவதும் மிளகு, பருத்தியை வாங்கிச் சென்றார். அந்த வணிகப் பயணம் இந்தியாவின் வளம் குறித்த ஐரோப்பியர்களின் ஆசைத் தீயில் கப்பல் கப்பலாக எண்ணெயை ஊற்றியது. அப்படி போர்த்துக்கீசியர்களுக்கு அடுத்து இங்கிலாந்துக்காரர்கள் இந்தியா வந்தனர். அதற்குப் பின்னால் நடந்தவையெல்லாம் உங்களுக்கே தெரியுமல்லவா?