இந்த உலகத்தின் போக்கையே மாற்றிய பிறப்புகளுள் ஒன்று இயேசுவுடயது. காலங்காலமாக சிறுமைப்படுத்தப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு நின்ற பாலஸ்தீன யூதரல்லாத மக்களின் துயர்துடைக்க பிறந்த குழந்தையின் பெயர் ஜீசஸ் அல்லது ஜோஷுவா அல்லது இயேசு. அன்பு என்னும் ஒற்றை வார்த்தையை மட்டுமே நம்பி பெருங்கடல்களின் இரக்கமில்லாத அலைகளிலும், சுட்டெரிக்கும் பாலைவனத்தின் வெம்மையிலும் பயணம் செய்தவர். இப்படி அவரைப்பற்றி ஆயிரம் விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வரலாறு தன்வசம் வைத்திருக்கும் குறிப்புகள் அவரைப்பற்றி என்ன சொல்கிறது?

வரலாற்றின் ஆதி பக்கங்களில் விழுந்த சில முடிச்சுகளுக்கான விடையை இன்றும் அதன் எச்சங்களிலிருந்து ஆர்வமாய் தேடுகிறது மனிதகுலம். இப்படியான ஆராய்ச்சிகளை, அதன் முடிவுகளை குறைந்தபட்ச ஆதாரங்களோடு சமர்ப்பிப்பதன் வாயிலாக பல வரலாற்று உண்மைகள் பொய்களாக்கப்பட்டிருகின்றன. அதன் ஆரம்ப நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது இயேசுவின் பிறப்பினைப் பற்றியது. உண்மையில் அவருடைய தோற்றம் என்ன? என்பதில் துவங்கி அவர் தமிழர் தான் என்று கூறப்படும் வரை பல சிக்கல்களைக் கொண்டிருக்கும் ஒரு மாய வரலாறு அவருடையது.
கருணையின் முகம்
இன்று தேவாலயங்களில், புகைப்படங்களில் நாம் பார்க்கும் இயேசு உண்மையில் இயேசு அல்ல. பொதுவான மற்றும் பெரும்பாலான மக்களோடு பொருந்திப்போகிற படியான ஒரு உருவத்தைக் கொண்டவர் இயேசு என்று சொல்வதன் வாயிலாக அவரை ஒரு உலக ரட்சிப்பராக எளிதில் அடையாளம் காட்ட முடியும். இதைத்தான் பல கிறிஸ்துவ அமைப்புகள் பன்னெடுங்காலமாக செய்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த புகைப்படம் மேற்கத்திய ஒவியைக்கலைக்கு ஒரு சான்று மட்டுமே.
சொல்லப்போனால் பைசாந்தியர்களின் காலமான 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசர் ஒருவரின் புகைப்படமே இப்போது இருக்கும் இயேசு ஆவார். அந்த அரசருடைய புகைப்படத்தை இன்றும் ரோம் நகரத்தில் உள்ள சான்டா புடேன்சியானா (Santa Pudenziana) சர்ச்சில் காணலாம். (கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

இது இப்படி இருக்க இயேசுவுடைய உருவம் வந்த கதை நம்மை இன்னும் குழப்புகிறது. ஏனெனில் அவருடைய உருவமானது கிரேக்க கடவுளான சீயஸின் உருவத்தைப் பார்த்து உருவாக்கப்பட்டது. சீயசின் இளமை வயது உருவத்தினைப்போன்றே கிறிஸ்துவையும் வடிவமைத்தவர்கள் பைசாந்தியர்கள் தான்.
இயேசு என்னும் கறுப்பர்
கடந்த 2001 ஆம் ஆண்டு பிபிசி மற்றும் டிஸ்கவரி சேனல் ஆகியவை இணைந்து சன் ஆஃப் காட் (Son of God) என்னும் தொடரினை ஒளிபரப்பியது. பல ஆய்வுகளுக்குப் பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இதற்கான கதை மற்றும் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி University of Manchester ல் படித்த ரிச்சர்ட் நீவ் என்னும் தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணர் கிறிஸ்துவின் உடல் நிறம் கறுப்பு தான் என்று பல சான்றுகளின் மூலம் விளக்கியுள்ளார். அவருடைய கருத்துப்படி அகன்ற முகத்தையும், நீளமான நாசியையும் கிறிஸ்து கொண்டிருந்தார்.
ஒட்ட வெட்டப்பட்ட சிகையும், சிறிய தாடியையும் அவர் கொண்டிருந்ததாகவும் செய்திகள் இருக்கின்றன. இவற்றிற்கும் ஆதாரங்கள் இல்லை. இஸ்ரேலுக்கு அருகே இயேசுவின் காலத்திய மனித உடல் ஒன்றினைக் கைப்பற்றி ஆராய்ந்ததில் அந்த மனிதனுக்குத் தாடி இருந்ததை வைத்தே மொத்த யூத சமூகமும் அப்படி இருந்திருக்கும் என நம்பப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சிகை வளர்க்கும் முறை இருந்திருக்கிறது. உதாரணமாக மத்தேயு பகுதி 11 வசனம் 19 ல் “அவருக்கு முடி நீளமாக இருந்திருந்தால் அவர் நாசரேத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணப்பட்டிருப்பார்” என்று வருகிறது. இவை அனைத்துமே இன்றைக்கு நமக்குக் காட்டப்படும் கிறிஸ்துவின் புற அடையாளங்கள் எந்தவித வரலாற்று பிரக்ஞையும் இல்லாத, அதே நேரத்தில் சமயங்களின் ஊடாக எழுந்துவந்த கலைப்படைப்பின் உச்சம் மட்டுமே என்று நிறுவுகிறது. இந்த நிச்சயமில்லாத தன்மைக்கு அவை நிகழ்ந்த காலம் தான் மிக முக்கிய காரணமாக அமைகிறது.

கிறிஸ்து ஒரு தமிழரா?
இந்தக் கேள்விதான் சமீப ஆண்டுகளாக பலரையும் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது சற்றே நகைப்புக்கு உரியதாகத் தோன்றும் இந்தச் செய்திக்குப் பின்னால் பல தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. இயேசுவைப் பற்றிய மிகப்பெரிய மர்மங்களுள் ஒன்றான “மறைக்கப்பட்ட வருடங்கள்” தான் இந்த எல்லாக் கதைகளையும் இத்தனை நாட்களாகத் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது அவருடைய 12 முதல் 29 வயது வரையிலான காலம். இந்த வருடங்களில் அவர் பாலஸ்தீனத்தில் இருந்ததற்கான வரலாற்றுச் சுவடே இல்லை. சரி, அப்படியென்றால் அந்த காலகட்டத்தில் இயேசு எங்கே இருந்தார்? அதற்கு அவருடைய பிறந்த நாள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மத்தேயு வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி” நட்சத்திரங்களின் வழிகாட்டுதலின் படி கிழக்கில் இருந்து வந்து சேர்ந்த மூன்று புனிதர்கள் தேவகுமரனுக்குப் பரிசுகளை வழங்கினார்கள்” என்பதில் தான் இந்த இரண்டாயிர வருடப் புதிர் ஒளிந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் புத்த மதத்தின் தலைமை குரு அல்லது லாமா இயற்கை எய்தினார். எனவே கடவுளின் அடுத்த அவதாரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த அவரது சீடர்கள் மேற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர் என்கிறது புத்த மதக் குறிப்புகள். அந்த துறவிகள் பாலஸ்தீனத்திலிருந்து அந்தக் குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். புத்த சமயம் பற்றிய போதனைகளை அக்குழந்தை முழுமையாகப் பெற்றவுடன் தனது 29 வது வயதில் இஸ்ரேலுக்குத் திரும்பியதாகவும் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. மேலும் புத்த மடாலயக் குறிப்புகளில் அந்தக் குழந்தையின் பெயரானது ஈசா என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே பின்னர் ஜீசஸ் என்று மாறியது.
“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்றபடி அளவில்லாத அன்பினைப் போதிக்கும் மதம் யூத மதம் இல்லை. மாறாக புத்தம் வாழ்க்கையையே அன்பு செலுத்துவதின் மூலமாகப் பார்க்கும் மதம் என்பதாலும் இயேசுவின் போதனைகள் அனைத்தும் அங்கிருந்தே வெளிப்பட்டவை என்றும் நம்பப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டில் திபெத்திற்குப் பயணம் மேற்கொண்ட ரஷியாவைச் சேர்ந்த Nicolas Notovitch தான் இதனை முதன்முதலில் வெளிக்கொண்டுவந்தது. திபெத்தில் இருக்கும் புத்த மடாலயத்தில் இருந்த கிறிஸ்து பற்றிய குறிப்புகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டார் இவர். Unknown Life of Jesus Christ என்று பெயரிடப்பட்ட அந்தப் புத்தகம் 1894 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பிரெஞ்சு மட்டுமல்லாமல் ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் கிறிஸ்து இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்னும் செய்தி உறுதியாகிறது. அப்போது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொழி தமிழ் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி. ஆரியர்களின் வருகைக்கு முன்னதாக தமிழ் மொழியே இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன. மேலும் தமிழ் மொழியிலிருந்து வேர்ச்சொற்களைக் கொண்ட பல மொழிகளும் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் அராமிக். ஜுதேயாவைச் சேர்ந்த மக்கள் பேசிய இம்மொழிதான் இயேசுவின் தாய்மொழியாகும். இந்த மொழியில் உள்ள பல சொற்களில் தமிழின் ஆதிக்கம் இருந்தது. ஆமென், அப்பா, பார்த்தக் போன்ற சொற்கள் நேரிடியாக தமிழிலிருந்து கையாளப்பட்டவை.
எனவே இதன்மூலம் இந்தியா வந்த இயேசு புத்தமதம் குறித்து தமிழ் மொழிமூலம் தெரிந்துகொண்டார் என்று பல ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான தரவுகள் மூலம் நிறுவுகின்றனர்.
கிறிஸ்து ஓர் இந்துவா?
இத்தனை குழப்பங்களும் போதாதென்று கணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் தனது புத்தகமான Christ Parichay வில் கிறிஸ்து ஓர் இந்து எனவும் அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து முக்தியடைந்தார் என்றும் கூறியிருக்கிறார். ஆர்.ஆர்.எஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான இந்த கணேஷ் தாமோதர் சாவர்கர் வெளியிட்ட இந்தப் புத்தகம் அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியலைகளை எழச்செய்தது. அதில் சொல்லப்பட்டிருக்கும் சில “விவகாரமான” செய்திகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
- ஏசு கிறிஸ்துவின் நிஜப்பெயர் கேசவ் கிருஷ்ணா.
- தமிழ்தான் அவரது தாய் மொழி.
- ஏசு கிறிஸ்து இயல்பில், தமிழகத்து இந்துக்களைப் போல கருப்பு நிறம் கொண்டவர்.
- தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா பிராமணர் ஜாதி என்றே அழைக்கப்படுகிறது.
- ஏசுவின் 12வது வயதில் அவருக்கு பூணூல் போடும் சடங்கு நிறைவேற்றப்பட்டது.
- ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் திரிந்து சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
- தமிழும், சமஸ்கிருதமும் அக்காலத்தில் உலகின் ஆதி மொழிகளாக இருந்தன.
- ஜெருசலேம், அரபு நாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தது. இப்போதும்கூட அரபு மொழிகளில் தமிழின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். அப்படித்தான் பாலஸ்தீன் பகுதியில் பிறந்த ஏசுவுக்கும் தமிழ் தாய் மொழியாக இருந்தது.
- ஏசு இந்தியாவுக்கு வந்து யோகா பயின்றிருந்தார்.
- ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகும், தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்கள் மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர்.
- ஏசு தனது இறுதி காலத்தில், இமயமலைப் பகுதியில், லிங்க வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்தார்.
- 3 வருட கடும் தவத்திற்குப் பிறகு ஏசுவுக்கு சிவபெருமான் காட்சியளித்து முக்தியை அளித்தார்.
- பல்வேறு பகுதிகளி்ல இருந்தும் சாதுக்களும், முனிவர்களும் அங்கு வந்து ஏசுவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். ஏசுவை ஈஷாநாத் என்றே முனிவர்கள் அழைத்தனர்.
- ஏசு தனது 49வது வயதில், இந்த ஜட உடலை விட்டுச் செல்ல முடிவு செய்தார். இதன்பிறகு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார்.
- இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளது.
- கிறிஸ்தவம் என்பது தனி மதம் கிடையாது. இந்து மதத்தின் ஒரு அங்கமே கிறிஸ்தவம். பைபிள் ஏசு கூறிய வார்த்தைகள் கிடையாது.

மேற்கூறிய செய்திகளைப் போன்றே ஏராளமான செய்திகள் இயேசுவைப் பற்றி இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன. வரலாறு விதிக்கும் இலக்கணங்களுக்குப் பொருந்துபவை உண்மையாகவும், மற்றவை வதந்திகள் என்னும் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உண்மைகளை விட வதந்திகளே அதிகமாக பரப்பப்படுகின்றன, நம்பப்படுகின்றன.
இவ்வளவு தூரம் படித்து வந்த நீங்களே சொல்லுங்கள். இயேசு யாராக இருக்கக்கூடும்? பாலஸ்தீன வெள்ளையரா? கறுப்பானவரா? முடி அதிகம் கொண்டவரா? தமிழ் பேசக்கூடியவரா? இவை எவற்றிலும் இயேசுவைத் தேடுபவன் கடைசியில் தோற்றுப் போகிறான். அன்பின் முடிவிலியில் கண்களில் இருந்து விழுந்து தெறிக்கும் கண்ணீர்த் துளிகளுக்குள்ளே குடியிருக்கும் தேவதூதன் அவன். அன்பின் வழியாக அவரைப் பார்ப்பதே அவரை அடைவதற்கான, தொட்டு உணர்வதற்கான, அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. அது மட்டுமே.