பழங்கால மருத்துவ வரலாற்றின் ஏழு வியக்க வைக்கும் உண்மைகள் – பகுதி 1

0
372

விஞ்ஞான விருட்சம் விதையாக இருந்த பண்டைய காலங்களில் மனிதர்கள் எம்மாதிரியான மருந்துகளைக் கொண்டு தங்களது நோய்களை குணப்படுத்தியிருப்பார்கள் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? மயக்க மருந்துப் பிரயோகம் முதல் சிசேரியன் வரை மருத்துவ உலகின் மிக முக்கிய ஏழு மைல் கற்களை மருத்துவ வரலாற்றில் 100 வியக்க வைக்கும் உண்மைகள் எனும் நூலின் வாயிலாக சுட்டிக்காட்டியிருக்கிறார் கரோலின் ரான்ஸ்(Caroline Rans).

ஆரோக்கியமான உடல் நலத்தைப் பேணுவதில் மனித சமுதாயம் எத்தனையோ இடங்களில் பல இடர்களைச் சந்தித்து சமராடி வென்றிருக்கிறது. அத்தகைய வரலாற்றில் நிகழ்ந்த சாதனைகளையும், சாதித்துக் காட்டியவர்களையும் பற்றிய நூறு சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பே, மருத்துவ வரலாற்றில் 100 வியக்க வைக்கும் உண்மைகள் (the history of medicine in 100 facts) எனும் நூல் . அதில் மிக முக்கியமான ஏழு தகவல்களைப் பற்றிக் கீழே காணலாம்.

1.பழங்காலத்தில் புகழ் பெற்றிருந்த பெண் மருத்துவர்கள்

எகிப்து நாட்டிலுள்ள கெய்ரோவிற்கு(Cairo) தெற்குப் பகுதியில், 20 மைல் தூரத்தில் இருக்கிறது சக்காரா(Saqqara) எனும் இடம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமி. ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னால் எகிப்திய நகரமான மெம்பிஸ்(Memphis)ன் இடுகாடாக இருந்து வந்திருக்கிறது இந்த இடம். சமீபத்திய ஆய்வின் போது இப்பகுதியில் ஓர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மேல் “மெரிட் த்பாஹ்” (Merit Tbah) என்ற பெண் பெயர் பொறிக்கப்பட்டு, அதற்குக் கீழே “தலைமை மருத்துவர்” என ஹிரோக்ளிப்ஸ்-ல்(Hieroglyph) எழுதப்பட்டுள்ளது. வருடம் கி.மு.2600 !!!

courtesy: TWITTER.COM

தற்போதையத் தரவுகளின் படி மருத்துவ வரலாற்றின் முதல் பெண் மருத்துவர் மெரிட் த்பாஹ் தான். அதிலிருந்து 200 வருடங்களுக்குப் பின் வாழ்ந்த பெசெஷெத்(Peseshet) என்னும் பெண் மருத்துவரின் கல்லறையும் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது பெசெஷெத் அக்கால கட்டத்தில் பெண் மருத்துவர்களின் மேற்பார்வையாளராகவும், மருத்துவப் பயிற்சி மையத்தின் இயக்குனராகவும் விளங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அறிந்து தெளிக !

ஹிரோக்ளிப்ஸ் – பண்டைய எகிப்திய எழுத்து முறை.

இவற்றில் சின்னங்கள்(Logograms) வார்த்தைகளைக் குறிக்கவும்

ஒலியமை வடிவம் (Phonograms) ஒலியை குறிக்கவும்

வாக்கியத்தின் கடைசியில் இடம்பெற்றிருக்கும் பெயரடை(Determinatives) தெளிவான அர்த்தத்தை உணர்த்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இப்படி 1000 வகையான எழுத்துக்கள் அம்மொழியில் உள்ளன.

2.கி.மு ஆறாம் நூற்றாண்டில் நடைபெற்ற கண்புரை அறுவை சிகிச்சை!!

சுஸ்ருதா சம்ஹிதா உலகின் பழமையான மருத்துவ நூல்களுள் ஒன்று. இந்நூல் சுஸ்ருதா என்பவரால் சமஸ்கிருதத்தில் கி.மு.600-ல் எழுதப்பட்டதாகும். வட இந்தியாவின் பனாரஸ் பகுதியில் வாழ்ந்த சுஸ்ருதா மருத்துவராகவும் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இவரது நூலான சம்ஹிதாவில் மருந்து, பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு பற்றிய எண்ணற்ற தகவல்கள் இருக்கின்றன.

Eye treatment
Courtesy: Getty Images
கண்புரை அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகள்
  • கண்புரை கொண்ட நோயாளியை மருத்துவரின் எதிரே அமர வைப்பார்கள்.
  • பின்பு மருத்துவரின் மூக்கை தொடர்ந்து பார்க்கும்படி நோயாளியை அறிவுறுத்துவார்கள். மருத்துவர் தன் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலால் கண்ணை விரித்து கூர்மையான ஊசி போன்ற கருவியால் புரையை அகற்றுவார்.
  • மருத்துவராலோ, கருவிகளாலோ கண்களில் தோற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட கண்ணில் தாய்ப்பாலை செலுத்துவர்.
  • கடைசியாக கண்ணின் வெளிப்புறத்தை மூலிகை எண்ணெய் கொண்டு சுத்தம் செய்வர்.

கண் அறுவை சிகிச்சையின் மிக முக்கிய பகுதி குணமடைதலின் போது இருமலோ தும்மலோ இல்லாமல் நோயாளியை பார்த்துக்கொள்வதே ஆகும். இல்லையேல் கண் அழுத்த நோய் வர வாய்ப்பிருக்கிறது. இப்படி பல்வேறு மருத்துவக்குறிப்புகள் சம்ஹிதாவில் காணக்கிடைகின்றன.

3.ஸ்கர்வி நோயினைக் குணப்படுத்திய அதிசய மரம்.

பிரான்சை சேர்ந்த ஜாக்குயிஸ் கார்ட்டியர் (Jacques cartier) 1536 ஆம் ஆண்டு ஸ்டாடகோணா (இன்றைய க்யூபெக் பகுதி) பயணித்துக்கொண்டிருந்தான். 6 மாதக் கடல் பயணம். பனி படர்ந்த அத்தேசத்தை நெருங்கும் பொது கப்பலில்  இருந்த வீரர்களுக்கு வாய் துர்நாற்றம் அடையத்  தொடங்கியது. சிலருக்கு ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்தது. அதற்குக் காரணம் ஸ்கர்வி என்னும் நோய் எனப் புரியாமல் திணறினான் கார்ட்டர்.

SCURVY
Credit: BBC

நாளாக நாளாக நிலைமை மோசமடைந்துகொண்டே சென்றது. வேறு வழியில்லாமல் சிரமப்பட்டு ஸ்டாடகோணா நகரத்திற்குள் நுழைந்தான் கார்ட்டர்.

அறிந்து தெளிக !
ஸ்கர்வி – பற்களின் ஈறுகளில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டு நோய். விட்டமின் c நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் ஸ்கர்வியை முழுமையாகக் குணப்படுத்தலாம்.

கார்ட்டரின் துரோக சரித்திரம் தெரியாமல் ஸ்டாடகோணா நகர மருத்துவர்கள் அவனுக்கு உதவி செய்ய இசைந்தார்கள். அன்னேட்டா(Annedda) எனும் மரத்தின் மூலம் காபி செய்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள். அதை உட்கொண்ட சில மணி நேரங்களில் அவர்களின் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது குணமடைந்தது. ஆச்சரியமடைந்த கார்ட்டியர், அன்னேட்டா மரங்களில் இருந்து காபி தயாரிக்கத் தானே கற்றுக்கொண்டான். அந்நகரத்திலிருந்த எல்லா அன்னேட்டா மரங்களும் காப்பியாக்கப்பட்டு மருந்தாக்கப்பட்டது. படையில் உள்ள அனைவரும் குணமடைந்த பின்பு மீண்டும் கடற்பயணத்தை தொடங்கினான் கார்ட்டியர். “நன்றிக் கடனாக” சிகிச்சை அளித்த எல்லா மருத்துவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றான்.

Courtesy: GEOCACHING.COM

1541-ல் கனடா நோக்கிக் கப்பல் சென்று கொண்டிருக்கும் போது மறுபடியும் வீரர்களுக்கு ஸ்கர்வி தாக்கியது. அப்போது கைவசமிருந்த அன்னெட்டா தூள் மொத்தமும் காலியாயிருந்தது. உடனிருந்த மருத்துவர்களும் பசியின் காரணமாக இறந்துபோகவே மாற்று மருந்து தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தது கப்பல். அன்னேட்டாவை சரியாகப் பேணாததால் அடுத்த இருநூறு வருடங்களுக்குக் கடற்பிராயாணிகள் ஸ்கர்வி நோயினால் அவதியுற வேண்டியிருந்தது.