ஐரோப்பாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொன்றொழித்த நோய்க்கு மூலக்காரணம் எது தெரியுமா? அந்நாட்டிற்கு வந்த 12 கப்பல்கள் தான். துறைமுகத்திற்குக் கப்பல் வந்திறங்கிய அந்த நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக ஐரோப்பாவில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சம்!! வரலாற்று ஆசிரியர்கள் கவலையோடு நினைவுகூரும் இந்த இருள் மரணத்திற்குக் (Black Death) காரணமான நோயின் பெயர் பியூபோனிக் பிளேக் (Pubonic Plague).

இருளின் உதயம்
வருடம் 1347. காலை நேரம். இத்தாலியின் புகழ்பெற்ற மெசினா துறைமுகம் (Sicilian port of Messina) பரபரப்பாய் இருந்தது. தூரத்தில் புள்ளியாய் தெரிந்த கப்பல்கள் அருகில் வந்து நங்கூரமிட்டு நின்றன. சரக்குகளை இறக்குவதற்கு ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். அனுமதி கொடுத்த பிறகும் கப்பலில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகித்த துறைமுக அதிகாரிகள் ஆய்வு செய்யக் கப்பலில் ஏறினார்கள்.

கப்பலின் மேற்புறத்தில் பிணங்கள் குவியலாக கிடந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அதிகாரிகள். சற்று நேரத்திற்கெல்லாம் அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 கப்பல்களிலும் பிணங்கள் இருப்பது தெரிந்ததும் ஒட்டுமொத்த நாடும் பயத்தில் மூழ்கிப் போனது. அதிர்ஷ்டவசமாக அவர்களால் மூடிய அறைகளுக்குள் இருந்து சில பிரயாணிகளை மீட்க முடிந்தது. உயிருடன் இருந்த சிலரும் உடல் முழுவதும் கட்டிகளுடனும், சில இடங்களில் சீழ் வடியும் நிலைமையில் இருந்தனர். இந்தக் கோர சம்பவத்தின் காரணத்தை உயிர் பிழைத்தவர்களின் வாயிலாக அறிந்து கொண்ட அரசு உடனடியாக ஒரு முடிவு எடுத்தது.
திகில் வருடங்கள்!!

கிழக்கு தேசங்களில் கொள்ளை நோய் ஒன்று வேகமாய் பரவி வருகிறது என்ற செய்தி இத்தாலியில் தீ போன்று பரவியிருந்த காலம் அது. அப்போது தான் அந்தக் கப்பல்களும் வந்து சேர்ந்தன. உடனடியாக வெளிநாட்டுக் கப்பல்களை திருப்பியனுப்பியது அரசு. சொந்தக் கப்பல்கள் சிலவற்றை நடுக்கடலில் மூழ்கடித்த பின்னர் தான் மூச்சே வந்தது அவர்களுக்கு. ஆனாலும் அன்று முதல் பிளேக் பரவத் தொடங்கியிருந்தது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
ஐந்தே ஆண்டுகளில் மொத்த கண்டத்தின் மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்து போனார்கள்.
சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கனோர் பிளேக் நோயினால் இறக்கத் துவங்கினர். கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் என்பவை அந்நோயின் அறிகுறிகளாகவும், பாதுகாப்பாய் இருக்கும்படியும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நோயின் பரவல் கடுமையாக இருந்தது. பாதிக்கப்பட்டவரின் அருகினில் சில நிமிடங்கள் இருந்தாலும் பரவும் தன்மை கொண்டதால் மருத்துவர்கள் வேலைக்கு வராமல் தவிர்த்தார்கள். குணப்படுத்துவதற்கான மருந்தும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நோய் தாக்கிய 4 நாட்களுக்குள்ளாக மரணம் நிகழ்ந்தது. தடுப்பதற்கும் வழி தெரியாமல் போகவே ஒட்டுமொத்த ஐரோப்பா முழுவதும் பரவியது பிளேக். அடுத்த ஐந்தே ஆண்டுகளில் மொத்த கண்டத்தின் மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்து போனார்கள்.

ஐரோப்பா சந்தித்த மிகப்பெரிய பேரழிவு அது. பிளேக் கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. கணிசமான அளவில் ஆடுகளும் மாடுகளும் இறந்துபோயின. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்கள். சுகாதாரமின்மையே நோய்க்குக் காரணம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு வர பல ஆண்டுகள் பிடித்தன. அதுவரை இறப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்தது. முழுவதும் மூடிய ஆடையில் தான் மக்கள் வெளியில் சென்றார்கள். மிச்சமிருந்த சில மருத்துவர்கள் இவ்வகை ஆடைகள் அணிந்தே நோயாளிகளை கவனித்து வந்தார்கள்.
பரவிய முறை

சரக்குக் கப்பல்களே பிளேக் நோயை எல்லா நாடுகளுக்கும் பரவச் செய்தது. உண்மை தான். அப்போதைய சீனாவில் தான் இந்நோய் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. சீனாவிலிருந்து கிளம்பிய கப்பல்கள் நின்ற இடங்களில் எல்லாம் பிளேக் பரவ ஆரம்பித்தது. இந்நோய் பாதிக்கப்பட்ட பயணிகள் சீனாவிலிருந்து கருங்கடல் வழியாக இத்தாலி வந்ததே உடனடிக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கப்பல்களில் இருந்த எலிகளும் முக்கியக் காரணம்.
காற்றின் மூலம் அதிகம் பரவிய இந்நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது 19-ஆம் நூற்றாண்டில் தான். அலெக்ஸ்சாண்டிரே எர்சின் (Alexandre Yersin) என்னும் பிரஞ்சு ஆராய்ச்சியாளர் பிளேக் நோய்க்கான காரணம் ஏர்சினா பேஸ்டிஸ்(Yersina pestis) என்ற கிருமி தான் எனக் கண்டுபிடித்தார். இக்கிருமி அசுத்தமான இடங்களில் உருவாகும். அங்கு வாழும் பூச்சிகள், எலி போன்றவைகளின் மூலம் மனிதர்க்கும் பரவியது. ஆங்காங்கே சில இடங்களில் இருந்த பிளேக் பாதிப்புகள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அசுத்தம் எவ்வளவு பெரிய ஆபத்தைத் தரும் என்பதற்கு ஐரோப்பாவின் இருள் மரணம் ஒரு சான்று.
இப்போது கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவி மீண்டும் இத்தாலி முதற்கொண்ட மொத்த ஐரோப்பாவையும், உலகையும் அச்சுறுத்தி வருகிறது.