ராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் !!!

Date:

வட பசிபிக்கில் இருக்கிறது குவாம் தீவு(Guam Island). 1898-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க-ஸ்பானிஷ் யுத்தத்தில் ஸ்பெயினைப்  புரட்டி எடுத்த பின்னர் அமெரிக்காவிற்கு கிடைத்த தீவு. இரண்டாம் உலகப்போர் வரையிலும் எவ்விதப் பிரச்சனையும் இன்றி குவாமை, அமெரிக்கா ஆண்டுவந்தது. இதனிடையே, 1939-ல் ஹிட்லர் இரண்டாம் உலகப் போருக்குப் பிள்ளையார் சுழிபோட்டுத் துவக்கி வைத்தார். அமெரிக்காவிற்கு எதிராக முறுக்கிக் கொண்டு நின்ற ஜப்பான், அமெரிக்காவிற்குச் சொந்தமான குவாமைக் கைப்பற்றியது.  ஜப்பான்,” இது எங்க ஏரியா”எனப் பாட்டுப் பாட ஆரம்பித்தபோது, அமெரிக்கா எதிர்ப்பாட்டுப் பாடக் கப்பல் மற்றும் ராணுவ விமானங்களில் பறந்தது.

guam island
Credit: Britannica kids
யுத்தச் சத்தம்

தொடங்கியது போர். அங்குலம் தவறாமல் அடித்தார்கள் அமெரிக்கர்கள். சில நாட்களிலேயே போர் உச்சத்தை எட்டியது.  ஜப்பானிய ராணுவக் கப்பல்களின் மீது தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது அமெரிக்கா. அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே அமெரிக்க போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமானது, போரில் அமெரிக்காவின் கை ஓங்க வழிவகுத்தது. கப்பல்கள் மற்றும் கணிசமான வீரர்களை இழந்தது ஜப்பான்.

திரும்பிய பக்கமெல்லாம் சிதறிய உடல்கள். தீவில் இருந்த ஜப்பானியர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற முடிவிற்கு வந்த பின்னரே அமெரிக்கத் துப்பாக்கிகள் தங்கள் இயக்கத்தை நிறுத்தின. விமானங்களின் மூலம்  பதுங்கியிருப்போரைத் தேடியலைந்தது அமெரிக்க ராணுவம். குவாமில் அடர்காடுகள் அதிகம் என்பதால் அமெரிக்கர்களால் பதுங்கியிருந்த 15 ஜப்பானியர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை!!! ஜப்பானிய அரசும் அனைத்துப் போர் வீரர்களும் இறந்து விட்டதாக எண்ணிவிட்டது.

எலி, தேரை என எது சிக்கினாலும் மறுக்காமல் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொண்டார் யோகோய்.

212 மைல் பரப்புள்ள தீவு அது. அதுவரை ராணுவ உயர் அதிகாரிகள் மூலம்  கப்பல்களில் இருந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கட்டளைகள் முற்றிலுமாக நின்று போனது.   நாடு திரும்பிவிடலாம் என்ற யோசனையில் அடர்காடுகளுக்கிடையே பயணித்து கடற்கரைக்கு வந்து நின்ற வீரர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. கப்பல்கள் எல்லாம்  கடலுக்குள் மூழ்கியிருந்தன.

Shoichi Yokoi
Credit: BBC

எஞ்சியிருந்த ஜப்பானிய வீரர்கள், சரியான தகவல் வரும் வரையிலும் காத்திருக்கலாம் என முடிவெடுத்தார்கள். பதுங்கு குழிகள் தயார் செய்யப்பட்டன. சில துப்பாக்கிகள் மட்டுமே மிச்சமிருந்தன. வீரர்கள் வைத்திருக்கும் உணவுகள், மருந்துப்பொருட்கள் கணக்கிடப்பட்டு, திட்டமிடப்பட்டுச் செலவழிக்கப்பட்டது.  அதேநேரம் தீவின் மறு எல்லையில் எதிரிகள் எல்லோரையும் ஒழித்து விட்ட நினைப்பில், அமெரிக்க ராணுவம் தங்களது சேதமடைந்த ராணுவத்  தளவாடங்களை சரி செய்யும் வேலையில் இறங்கியது. விமானங்கள் அமெரிக்காவிற்கு திருப்பியனுப்பப்பட்டன. போர் ஓய்ந்தது.

ஒரு வருடத்திற்குள்ளாகவே பசியால் பலர்  இறந்துவிட்டனர். கோடைகாலம் ஆரம்பிக்கும் போது யோகோய் மட்டுமே மிச்சமிருந்தார்.

ஆனால் அது ஜப்பானிய வீரர்களுக்குத் தெரியவில்லை. பதுங்குக் குழிகளிலேயே வாழத்துவங்கினர். கைவசமிருந்த உணவுகள் காலியாகவும், குவாமில் பருவ மழை துவங்கவும் சரியாக இருந்தது. குவாமைப் பொறுத்தவரை மழையின் அளவு மிக அதிகம். குளிரும் சேர்த்துக்கொண்டால் எப்படி இருக்கும்?  ஒரு வருடத்திற்குள்ளாகவே பசியால் பலர்  இறந்துவிட்டனர். கோடைகாலம் ஆரம்பிக்கும் போது யோகோய் மட்டுமே மிச்சமிருந்தார்.

தனிமையின் இருளில்

தனிமையில் இருந்த யோகோய், மூங்கில்களால் ஆன பதுங்கு குழி ஒன்றைத் தனியாக உருவாக்கியிருக்கிறார். எலி, தேரை என எது சிக்கினாலும் மறுக்காமல் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொண்டார் யோகோய். குவாமில் சூறாவளிகள் அதிகம். பசிபிக்கில் வீசும் வியாபாரக்காற்று, சூறாவளியாக மாறி வெளுத்து வாங்கும். பெருமழையின் காரணமாக ஊற்றெடுக்கும் ஆறு மீன்களை வாரி வழங்கியது அவருக்கு.

27 வருடம்,  தாய்நாட்டிலிருந்து தன்னை யாராவது மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார் யோகோய். எத்தனையோ புயல்கள், சூறாவளிகள் அத்தீவை நொறுக்கியெடுத்த போதும் யோகோய் அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்திருக்கிறார். போர் வீரனாவதற்கு முன் தையல் தொழிலாளியாக இருந்தவர் என்பதால் காட்டில் தனக்கான உடைகளைத் தானே தைத்துக்கொண்டார். காட்டு விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட உடை!!

Yokoi 2
Credit: The Guam Guide
மீண்டும் தாய்நாட்டிற்கு

ஒருநாள் ஆற்றங்கரையில், மீனுக்காகக் காத்திருந்த யோகோயை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. வருடம் 1972!! எதிரி நாட்டுப்படை எனத் தாக்க முற்பட்டிருக்கிறார் யோகோய். விஷயம் தெரியாத அவர்கள் அங்குள்ள காவல்துறையினரிடம் அவரை  ஒப்படைத்தனர்.  உடனே ஜப்பானுக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது.  சிறப்பு விமானம் மூலம் யோகோய் 27 ஆண்டுகள் கழித்து தாய்நாட்டிற்குத் திரும்பினார்.

அவருக்கு தாய்நாட்டில் மாபெரும் வரவேற்புகள் கொடுக்கப்பட்டன. மக்களின் முன்னால் பேசிய யோகோய், தாய் நாட்டிற்காக உயிர்துறக்கும் பேறு எனக்குக் கிடைக்கவில்லையென வருந்துகிறேன் எனத் தெரிவிக்க,  கலங்கிப் போனார்கள் மக்கள். 27 ஆண்டுகள் குடும்பத்தை மறந்து, நாட்டைத் துறந்து தனிமையில் வாழ்ந்த யோகோய் அதன் பின்னர் மக்களின் நாயகனாக மாறினார். ஒரு போர்வீரனுக்கான துணிச்சலை யோகோயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தன் போர்வீரர்களுக்கு இன்றும் ஜப்பான் பெருமையுடன் கற்பிக்கிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!