சீனாவின் கிழக்குப்பகுதியில் சமீபகாலமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குவியத்துவங்கியுள்ளனர். மண்ணுக்கடியில் ஏதாவது கிடைக்குமா என கிண்டிக் கிழங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காரணம் சூ வெய்ஹோங் (Xu Weihong) என்னும் ஆராய்ச்சியாளர், கின் வம்ச (Qin Dynasty) ஆட்சியின் போது இறந்தவர்களின் கல்லறைகளைக் கண்டுபிடித்தது தான். வெண்கலத்திலான குடுவையில் இருந்த 2000 வருட மதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசர் கின் பற்றி தெரிந்துகொள்ள எந்த ஆராய்ச்சியாளருக்குத்தான் ஆசை வராது? ஏன் என்கிறீர்களா? அவர் எப்போதும் ஒரு புரியாத புதிர். முரண்பாடுகளின் மூட்டை. சரி அவரைப் பற்றி பார்த்துவிடலாம்.

கின் வம்சம் (Qin Dynasty)
வாசிக்கத்தான் சற்று கடினமாக இருக்குமே தவிர சீனப் பெயர்கள் எல்லாம் மிகச்சிறியவை. சின், மின், பன் என்று தான் இருக்கும். அவர்களது கண்களைப் போலவே. கின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) என்பவர் தான் முதன்முதலில் ஒருங்கிணைந்த சீனப்பேரரசை உருவாக்கியவர். “இந்த மனுஷனைப் புரிந்துகொள்வது மிகக்கடினம்” என்று பல ஆராய்ச்சியாளர்கள் கின்-னிற்கு பாராட்டுப்பத்திரம் வாசித்திருக்கிறார்கள். மனுஷன் எப்போது எதை செய்வார் என்பது படைத்த பரம்பொருளுக்கு மட்டுமே தெரியும்.
மரணத்தை விரும்பாத கின் தன்னுடைய நினைவிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தானே வடிவமைத்திருக்கிறார்!!!
ஆனால் கின் மிகுந்த உயிர் பயம் கொண்ட ஆசாமி. எப்போதும் தன்னை யாராவது கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தோடே இருந்தவர். யார் மேலாவது துளி சந்தேகம் வந்தாலும் போதும். முடிந்தது. துயர் மிகுந்த இவ்வுலக வாழ்க்கையிலிருந்து அவர்களுக்கு மோட்சம் கொடுக்கப்படும். அவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டவர் பேரரசர் கின். அரசரைச்சுற்றி எப்போதும் நீண்ட தாடி வைத்த மருத்துவர் கூட்டம் அலைமோதும். காரணம், மரணத்தை மரணிக்கச்செய்யும் மருந்துகளை தயாரிக்குமாறு கின் உத்தரவிட்டிருந்தது தான்.
பள்ளிக்கூடங்கள் வேண்டாம் !!
அதிக பயம் கொள்பவர்கள் மிக அதிகமாய் கோபப்படுவார்கள் என்று உளவியல் சொல்கிறது. அது அரசரின் விடயத்தில் உண்மை தான். ஒருநாள் அரசவையில் கின் இருந்த போது மக்களுக்கு நல்லது கெட்டது தெரிவதில்லை என மந்திரி ஒருவர் சொல்லியிருக்கிறார். மாமன்னருக்கு வந்த யோசனை என்ன தெரியுமா? பள்ளிக்கூடங்கள் தான் அவர்களைக் கெடுக்கிறது, உடனே எல்லா பள்ளிக்கூடங்களையும் மூடுங்கள் என ஒரே போடாகப் போட்டார். ஆடிப்போனார்கள் மக்கள். ஆனால் “மகா கணம்” பொருந்திய அரசரல்லவா? தன் திருக்கையாலேயே அனைத்துப் பள்ளிகளைளையும் மூடினார். உள்ளிருக்கும் புத்தகங்களை என்ன செய்வது? என்ற வீரரின் கேள்விக்கு எரித்துவிடுங்கள் எனப் பதில் வந்தது மன்னரிடமிருந்து! நல்ல வேளையாய் மருத்துவம் மற்றும் விவசாய நூல்களுக்கு ஹோம குண்டத்திலிருந்து விலக்களித்தார் கின்.
வரலாறு பல விநோதங்கள் நிறைந்தது. மரணத்தை விரும்பாத கின் தன்னுடைய நினைவிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தானே வடிவமைத்திருக்கிறார்! 8000 போர் வீரர்களின் களிமண் பொம்மைகளுக்கு நடுவே கின் புதைக்கப்பட்டார். அதுவே சுடுமண் சிலைப் படை (Terracotta Army) என்று அழைக்கப்படுகிறது. கூடவே 130 தேர், 600 குதிரை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பரலோகத்தில் சாத்தான்களோடு போரிட நேர்ந்தால்? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்று மன்னர் ஒருமுறை சொன்னதாகத் தகவல்!! இவற்றை செய்துமுடிக்க 7 லட்சம் சிற்பிகள் பணியில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர்!!! அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது எனச் சொல்லவில்லையே?
மரண மருந்து ?!
மரணத்தைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருந்த மருத்துவர்கள் காடு, மலை, அருவி, பாலைவனம் எனச் சுற்றிக் கிடைத்த வஸ்துக்களையெல்லாம் ஒன்றாய்ப் போட்டுக்கலந்து, சாவை நீக்கும் மருந்து என ஜாடியில் எழுதி மன்னரிடம் நீட்டிவிட்டனர். ஆர்வமாய் வாங்கிக்குடித்த மன்னர் கொஞ்ச நேரத்தில் இறைவனடி சேர்ந்தார். எந்தவித சோதனைகளும் இல்லாமல் நேரிடையாக மன்னரே மருந்தை உபயோகித்திருக்கிறார் என்றால் அவரின் மரண பயத்தைப் பற்றி என்ன சொல்லுவது. வேண்டுமென்றே விஷம் வைத்துதான் அவர் கொல்லப்பட்டார் எனச் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்பவர்களும் உண்டு. ஆனால் தன் 49 வது வயதில் மாமன்னர் கின் அகால மரணமடைந்தது மட்டும் உண்மை.

இப்படி புரிந்துகொள்ளவே கடினமான மனிதராகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கிறார் கின். ஆனால் அவர்தான் சீனா எனப் பெயர் வரக்காரணமாக இருந்தவர். கின் என்று நாம் தமிழில் உச்சரிப்பதை அம்மக்கள் சின் என்பார்களாம். அதுவே பின்னர் சீனா என்றாகிப்போனது. மேலும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க மாபெரும் தடுப்புச்சுவர் ஒன்றை கட்டத்துவங்கியவரும் இவரே. எந்தச்சுவரா? அட!! சீனப்பெருஞ்சுவர்!!. இவ்வாறு பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சில சமயங்களில் உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டே நம்பியார் போல மாறிவிடுவார் நம் கின்.
எங்கே விட்டேன்? ஆமாம் அந்தப் பழைய சரக்கு. இவ்வாறு புதைக்கப்பட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கல்லறைகள் தான் போன மாத ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அரசமரபில் உடலோடு மதுவையும் சேர்ந்து புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இயற்கை நார்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த புட்டிகளில் 300 மி.லி மதுவும், 60 செ.மீ. நீளமுள்ள போர்வாளும், 15 செ.மீ. நீளமுள்ள ஆமையின் மேலோடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசர் கின் பற்றியும் அவரின் அரசாட்சி குறித்தும் பல கேள்விகள் கேள்விகளாகவே உள்ள நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி அவரைப் பற்றிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பலாம். இன்னும் என்னவெல்லாம் செய்து தொலைத்திருக்கிறாரோ என்ற எண்ணமும் இயல்பாகவே வருகிறது!