தமிழக வரலாற்றில் தவிர்க்கமுடியாத அரசனான ராஜராஜ சோழனின் சமாதியைத் தேடும் தீவிரத்தில் இருக்கிறது தமிழக தொல்பொருள் ஆராய்ச்சியகம். ராஜராஜனின் சமாதி இருக்கும் இடமாக கருதப்படும் உடையாளூரில் இந்த ஆய்வு நடத்த்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அதில், “மகாராஷ்டிராவில் சிவாஜி சிலையும், குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையும் பல கோடி ரூபாய் செலவில் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்தியா முழுவதும் ஆட்சி புரிந்து, பல நாடுகளையும் வென்ற ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையாளூரில் தொல்லியல் துறையினர் இதுவரை ஆய்வு எதுவும் செய்யவில்லை. எனவே, தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்து, அரசு சார்பில் மணிமண்டபமும், இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா ஆகிய இடங் களில் ஏதாவது ஒரு இடத்தில் ராஜ ராஜனின் உயரமான சிலையையும் அமைக்க வேண்டும்” எனக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த ஏப்.11-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி இருப்பது உண்மையா என நவீன முறையில் அகழ்வாராய்ச்சி செய்து அதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
ராஜ ராஜ சோழன்
சோழர்களை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது சங்க கால சோழர்கள். அவர்களில் சிறந்தவன் கரிகால் சோழன். இரண்டாவது வகை பேரரசுச் சோழர்கள். விஜயாலய சோழன் தோற்றுவித்த இந்த மாமரபில் வந்தவன் தான் அருண்மொழித்தேவன் எனப்படும் ராஜராஜ சோழன். முதலாம் ஆதித்யன், முதலாம் பராந்தகன், அரிஞ்சரிய சோழன் போன்ற மாவீரர்களின் வரிசையில் சுந்தர சோழருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார் ராஜராஜ சோழன். முதலமானவன் ஆதித்த கரிகாலன் மேலக்கடம்பூர் அரண்மனையில் பாண்டியர்களால் கொல்லப்பட, கண்டாரதித்த தேவரின் மகன் உத்தம சோழன் பதவிக்கு வந்தார்.
பாண்டியர்களின் எழுச்சி, இலங்கையில் ஐந்தாம் மகிந்தனின் அச்சுறுத்தல்கள், மேலை சாளுக்கியர்களின் அதிகார அதிகரிப்பு போன்றவைகளின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் அரியணை ஏறினான் ராஜராஜன். அசாதாரணமான வீரம். மதிநுட்பம், ராஜ தந்திரம் என மன்னனுக்குத் தேவையான அனைத்து குணங்களையும் ஒருங்கே கொண்டவன் ராஜேந்திரன்.
தன் தூதுவனை அவமதித்ததாக கேரள பாஸ்கர ரவிவர்மன் மீது படையெடுத்து மாபெரும் வெற்றியை பெற்றான். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தனை அவனது சொந்த நாட்டில் தோற்கடித்து அனுராதபுரத்தில் சிவன் கோவிலைக் கட்டினான். முந்நீர் பழந்தீவுகள் (மாலத்தீவுகள்), மைசூர், தக்காணம் போன்றவைகளை முதன்முதலில் கைப்பற்றிய ஒரே சோழகுல அரசன் ராஜராஜன் மட்டுமே.
இறுதி தூக்கம்
கிபி.1012 ஆம் ஆண்டு மகன் ராஜேந்திர சோழனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு பழையாறை மாளிகையில் தனது கடைசி காலத்தை கழித்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 1014 ல் மரணித்த ராஜராஜன் எங்கு புதைக்கப்பட்டார் என்பதை என்பதைக் கண்டறிவதுதான் மிகப்பெரும் கேள்வியாக நம் முன்னே நிற்கிறது. உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் லிங்க வடிவிலான சிலை மட்டுமே காணக்கிடைக்கிறது.
ஆனால் பல்லாண்டுகளாக ஊர் மக்கள் ராஜராஜனின் சதய விழா அன்று இங்கு பூஜை நடத்துகின்றனர். ஆனால் உண்மையில் அங்குதான் ராஜராஜனின் உடல் புதைக்கப்பட்டதா? என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும். உலக வரலாறுகளை மாற்றி எழுதியவனின் இறுதித்தூக்கம் எங்கே என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாய் உள்ளனர்.