உழவின் உன்னதத்தை உலகறியச் செய்வதன் பொருட்டு கொண்டாடப்படும் தமிழர் திருவிழா பொங்கலாகும். உணவை அளிக்கும் பூமியையும், உதவிசெய்த கால்நடைகளையும் வணங்குவதே இப்பண்டிகையின் நோக்கம். இந்த நாளில் தகுந்த நேரத்தில் மழையினைக் கொடுத்து, பயிர்களைக் காக்கும் மழைக்கடவுளான இந்திரனுக்கு நன்றி கூறுவர் மக்கள். மக்களின் மீதான இயற்கையின் தனிப்பெருங்கருணைக்கான விவசாயிகளின் பதில் மரியாதையே இந்த தைமாதக் கொண்டாட்டம்.

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் போகிப்பண்டிகையில் இருந்து பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பிக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி ஆகும். அன்று வீட்டைத் தூய்மை செய்து, புதுவர்ணம் அடித்து தை முதல் நாளை வரவேற்பர் மக்கள். விட்டு அகலும் குப்பைகளைகளினால் இப்பண்டிகை முதலில் போக்கி என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி போகி என்றானது.
இந்திர விழா
சங்க காலத்தில் பொங்கல் 28 நாட்கள் கொண்டடப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது தை மாதம் முழுவதும் இந்த கொண்டாட்டங்கள் தொடர்ந்திருக்கின்றன. ஆடிப்பட்டம் தேடி விதை என்று தமிழகத்தில் பழமொழி ஒன்றுண்டு. ஆடி மாதம் முழுவதும் பயிரிடுதல் பணி வெகுவிமர்சையாக நடக்கும். விவசாயமே முதன்மைத் தொழிலாகவும், பெரும்பாலானோரை ஈடுபடுத்தும் பொருளாதார மையமாக இருந்ததால் அம்மாதம் முழுவதும் மக்கள் அனைவரும் வேறு எதிலும் தங்களது கவனத்தை குவிக்கமாட்டார்கள். அதிலிருந்து சரியாக ஆறுமாதம் கழித்து, விளைந்த அரிசியை பொங்கலிட்டு மகிழ்வர்.
சங்க இலக்கியத்தில் தைப்பொங்கல் என்பது,
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் குறிப்பிடுகின்றன.
கால்நடைச்செல்வம்
விவசாயிகளைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒன்று. வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவர்களோடு இணைந்திருக்கும் துணை அது அவைகள்தாம். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, குங்குமம் இட்டு, கரும்பு மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் இட்டு மாடுகளுக்கு அளிப்பர். பழக்கிய காளை மாடுகளை ஜல்லிக்கட்டில் பங்குபெற அழைத்துச்செல்வர்.

அடுத்த நாளான காணும்பொங்கலின் போது, உறவினர்கள் அனைவருக்கும் இனிப்பு பலகாரங்களை வழங்கி, வயதில் மூத்தோரிடம் ஆசிகளைப் பெறுவர். ஊர் முழுவதும் பல்வேறு விதமான விளையாட்டுகள் ஆர்ப்பரிக்கும். வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற விளையாட்டுகள் பிரபலமானவையாகும். மேலும் இந்நாள் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படி இயற்கையை வணங்கி மகிழும் பண்டிகையான தைப்பொங்கல் எல்லோருடைய வாழ்விலும் பல நன்மைகளைக் கொண்டு வந்திடட்டும். அனைவருக்கும் நியோதமிழின் (முன்பு எழுத்தாணி) சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.