ஹாலிவுட் படங்கள் என்றாலே பரபரப்பூட்டும் காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதே சமயத்தில் நம்ப முடியாத விஷயங்களையும் படம் முழுவதும் அள்ளித் தெளித்து இருப்பார்கள். ஆனால், தற்போது புதிய தகவலொன்று ஹாலிவுட் மக்களிடையே ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.
தி விஸார்ட் ஆப் ஓஸ்(The Wizard Of Oz) என்னும் ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி செருப்புகள் கடந்த 2005 – ஆம் ஆண்டு காணாமல் போனது. அதைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 250000 டாலர்கள் பரிசளிக்கப்படும் எனக் காவல் துறை அறிவித்தது. 13 வருடங்கள் கழித்து இப்போது தான் அந்த காலணிகளை மீட்டிருக்கிறார்கள்.

மாணிக்கச் செருப்பு!!
1939 – ஆம் ஆண்டு வெளிவந்த “தி விஸார்ட் ஆப் ஓஸ்”(The Wizard of Oz) படம் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த படமாக இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில் டோரோத்தி (Dorothy) கதாப்பாத்திரத்தில் ஜூடி கார்லண்ட் (Judy Garland) நடித்திருப்பார். விஷயம் அதுவல்ல. அந்தப்படத்தில் அவர் மாணிக்கச் செருப்பு (Ruby Slipper) ஒன்றை அணிந்திருப்பார். அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 2005 – ஆம் ஆண்டு, அப்படம் வெளிவந்த நாளினைக் கொண்டாடும் வகையில் மினிசோட்டா (Minnesota) நகர அருங்காட்சியத்தில் அந்தச் செருப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஒரு நாள் காலை வழக்கம் போல அதிகாரிகள் அந்தச் செருப்பு இருக்கும் அறையினைத் திறக்க, செருப்புகளைக் காணவில்லை!!. திருடர்கள் அருங்காட்சியகத்தின் பின் வாசல் வழியாக வந்து செருப்பினைத் திருடிச் சென்றிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நாளே அமெரிக்கப் புலன் விசாரணை ஆணையம் (Federal Bureau of Investigation) தன் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

13 வருட தேடுதல் !!
2005 – ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தித் தனது தேடுதலைத் தொடர்ந்தது ஆணையம். தொடர்ந்து நடைபெற்ற பல ஆய்வுகள் பலனளிக்காமல் போகவே காவல்துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். தொலைந்து போன செருப்பினைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்தனர். விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது இதன் பின்னர்தான்.
இதன்மூலம் பல போலிகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட ஆசாமிகளும் உண்டு. இதனிடையே அருங்காட்சியத்திற்குப் பின்னால் இருக்கும் டியோகா மைன் பிட் (Tioga Mine Pit) ஏரியை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆயிரக்கணக்கான நீச்சல் வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருடனால் நிச்சயம் அதை வெளியில் எங்கும் விற்க முடியாது. மேலும், வீட்டிலும் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்ற முடிவிற்கு காவல் துறை வந்ததன் விளைவு தான் ஏரிக்குள் ஆட்களை இறக்கியது.

குப்பையில் கிடந்த மாணிக்கம்!!

எத்தனையோ தகவல்கள், தேடுதல்களுக்கு அடுத்து ஒரு வழியாக அந்த மாணிக்கச் செருப்பு கிடைத்தே விட்டது. மிஸ்ஸோரி (Missouri) மாகாணத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் குப்பைகளுடன் கிடந்த செருப்பினை எடுத்து ஆய்விற்கு உட்படுத்தியிருக்கிறார்கள். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து இது உண்மையான மாணிக்கச் செருப்பு தான் என்று ஆராய்ச்சி நிறுவனம் அறித்துள்ளது. இதன் மூலமாக 13 வருட தேடல் முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் திருடியவர்களைக் கண்டுபிடித்துத் தண்டனை வாங்கித் தரும் வரை இந்த வழக்கு முடிவடையாது என அந்நாட்டுக் கடமை தவறாத காக்கிச் சட்டைத் துறை தெரிவித்திருக்கிறது.