கிபி. 705 ஆம் ஆண்டு. ஸ்கேன்டிநேவியாவிலிருந்து வைகிங்குகள் அமெரிக்காவிற்கு குடியேறி 300 ஆண்டுகள் ஆகியிருக்கவில்லை. இங்கிலாந்து என்னும் நாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 225 ஆண்டுகள் கடந்துவிட்டதாக ஜப்பானில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஜப்பானில் கியுன் (Keiun) வம்சம் ஆட்சியில் இருந்த நேரம். உலகத்தில் பல மாற்றங்கள் அதற்கே உரிய பொறுமையோடு நடைபெற்றுக்கொண்டிருந்தன. பல தொழில்கள் புதிதுபுதிதாக முளைத்துக்கொண்டிருந்தன.

அதே வருடம் தான் ஜப்பானின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் துவங்கும் இடத்தில் ஹோட்டல் ஒன்றினைத் துவங்கினார் புஜிவாரா மஹிடோ (Fujiwara Mahito). கியுன் வம்சம் ஆட்சியில் இருந்ததால் ஹோட்டலுக்கு நிஷியாமா ஆன்சென் கேயுன்கன் (Nishiyama Onsen Keiunkan) எனப்பெயரிட்டார்.
நிஷியாமா ஆன்சென் என்றால் இயற்கை வெந்நீர் ஊற்றுக்கள் என்று அர்த்தம். அந்தக் காலத்தில் ஜப்பானிய அரசாங்க அதிகாரிகள் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். எனவே உணவு விடுதி லாபம் தரும் தொழிலாக பார்க்கப்பட்டது. ஆகவே தான் புஜிவாராவும் இத்தொழில் இறங்கினார்.

52 தலைமுறைகள்..
போன பாராவில் உணவு விடுதியைத் திறந்த புஜிவாராவின் வாரிசுகள் இத்தொழிலை மேற்கொண்டனர். அடுத்த 1300 வருடங்களுக்கு இவை தொடர்ந்தன. இன்றும் அதே இடத்தில் இருக்கிறது நிஷியாமா ஆன்சென் கேயுன்கன் விடுதி. இதுவரை 52 தலைமுறைகளாக இந்த ஹோட்டலானது புஜிவாரா வம்சத்தால் பராமரிக்கப்படுகிறது. இதனால் தான் கின்னஸ் புத்தகத்தில் இந்த ஹோட்டலின் பெயர் வந்தது.

குடும்பம்
மொத்தம் 37 அறைகள் கொண்ட இந்த விடுதிக்கு வரும் அனைவரும் மறக்காமல் குறிப்பிடுவது உபசரிப்பு பற்றித்தான். அத்தோடு விருந்தினர்களுக்கு பிறந்தநாள் என்றால் சிறப்பு விருந்துகள் எல்லாம் உண்டாம். அதேபோல விருந்தினர்கள் அனைவரும் தங்களது வீட்டில் உள்ளதைப்போன்றே உணர்வதாகத் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு இதனை புதுப்பித்திருகிறார்கள். ஆனாலும் சேவைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ராஜ உபச்சாரம் தான். வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.