உலக வரைபடத்தில் அமெரிக்கா எங்கிருக்கிறது? என்பதைப் புள்ளி வைத்து பாகம் குறித்தவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ்(Christopher Columbus). அவருடைய கப்பல் அமெரிக்கக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நாள் இன்று. உலக வரலாற்றில் மிக முக்கியமானதொரு நாள். சும்மாவா? சர்வ வல்லமையுடன் வலம் வரும் அமெரிக்காவை வெளியுலத்தினருக்கு அடையாளம் காட்டிய நாள் அல்லவா? அமெரிக்கா முழுவதும் பல நகரங்கள் கொலம்பஸின் வருகையை நினைவு கூறும் வகையில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருக்கிறது.

புதிய பூமி
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்? என்ற கேள்வியின் பதிலுக்குரியவர் பிறந்தது இத்தாலியில். 14 ஆம் நூற்றாண்டு வாக்கில் பல ஐரோப்பிய அரசுகள் புது நாடுகளைத் தேடிச் செல்ல பணியாட்களை நியமித்துக்கொண்டிருந்தன. அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்று வர்த்தகம். ஐரோப்பியாவின் காலநிலை காரணமாக அங்கு விளையாத தானியங்கள், வாசனைப்பொருட்கள், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வாங்குவதற்குத் தகுந்த நாடுகளைப் பல ஐரோப்பிய அரசுகள் தேடியலைந்தன. மற்றொன்று காலங்காலமாய் மனிதனுக்கு இருக்கும் வக்கிர புத்தி. நாடு பிடிக்கும் ஆசை. மேற்கு மாகடலைத் தாண்டும் தகுதியுள்ள மனிதர்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்தன பல அரசுகள். குறிப்பாக பிரான்சு, நெதர்லாந்து, இங்கிலாந்து, போர்ச்சுக்கீஸ், ஸ்பெயின் ஆகியவை செலவளிக்கத் தயாராயிருந்தன.

கைகொடுத்த இசபெல்லா
சற்றுப்பொறுங்கள். அரசர் ஃபெர்டினான்ட் கோபித்துக்கொள்ளப் போகிறார். இசபெல்லா ஸ்பெயினின் அரசி. அவர் தான் கொலம்பஸின் பயணத்திற்குப் பொருளதவி செய்தது. ஆசியா நோக்கிய தனது பயணத் திட்டத்தைப் பார்த்துவிட்டு பிரான்சும் இங்கிலாந்தும் சல்லிக்காசு தரமுடியாது என்று சொல்லிவிட்டன. நெதர்லாந்தும் கையை விரித்துவிடவே கடைசியாக ஸ்பெயினிற்குச் சென்றார் கொலம்பஸ். இசபெல்லாவின் புண்ணியத்தால் 3 கப்பல்களில் கொலம்பஸ் தனது பயணத்தைத் தொடங்கினார். 1492 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் கிளம்பிய கொலம்பஸ் அக்டோபர் 12 – ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார்.

சிதறிய அரசுகள்
ஆசியாவை நோக்கிப் பயணித்த கொலம்பஸ் காற்றின் திசையை சரியாகக் கணிக்காததால் அட்லாண்டிக்கைக் கடந்து அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டார். அஸ்டெக் இன மக்களும், மாயன் இன மக்களும் பழைய அமெரிக்காவை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் தான் கொலம்பஸ் அங்கு சென்றார். சிவப்பான உடலமைப்பைப் பார்த்துவிட்டு அவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததும் அவர்தான். ஒருவகையில் அமெரிக்கா அடிமைப்பட காரணம் கொலம்பஸ் தான். தனது சாதனைச் சரித்திரத்தை ஸ்பெயின் திரும்பியுடன் அரசரிடம் விவரிக்க, ஸ்பானிஷ் படை அப்புதிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்றது. அங்குள்ளவர்களை அழித்துவிட்டு அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
