மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்களில் ஒன்று நாசாவின் முதல் நிலவுப்பயணம். அத்தோடு நிலவில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கையும் அத்தனை எளிதில் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது. ஆனால் அவரது இறப்பு குறித்த பல்வேறு சர்ச்சைகள் இந்த நிமிடம் வரையிலும் பரப்பப்பட்டு வருகின்றன. உலகத்திற்கே தெரிந்த ஒரு மனிதரின் மரணம் ஏன் இத்தனை மர்மங்களைக் கொண்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?

கடந்த 2012 ஆம் ஆண்டு தனது 82 வது வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டார் ஆம்ஸ்ட்ராங். உடனே சின்சினாட்டியில் உள்ள Mercy Health — Fairfield மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கரோனா பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னரும் அவரது உடல்நலம் மோசமாகவே அவருக்கு தற்காலிக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்த பின்னர் செவிலியர்கள் பேஸ்மேக்கரில் உள்ள வயர்களை துண்டிக்கும்போது கடும் உதிரப்போக்கு நிகழ்ந்து ஆம்ஸ்ட்ராங் மரணமடைந்திருகிறார். பிரபல ஆங்கில சஞ்சிகையான டைம்ஸ் இதழ் ஆகஸ்ட் 25, 2012 ஆம் ஆண்டு அவர் இறந்ததாகவும் அதற்கு இரண்டு வாரம் கழித்து கடலில் அவரது உடல் புதைக்கப்பட்டது என செய்தி வெளியிட்டது. அதே இதழில் இன்னொரு செய்தியும் குறிப்பிடப்பட்டிருந்தது!!
93 பக்க மருத்துவ அறிக்கை
ஆம்ஸ்ட்ராங்கின் உடல்நிலை மாறுபாடு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 93 பக்க மருத்துவ அறிக்கை மருத்துவமனையின் அதிகாரி ஒருவரால் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. பேஸ்மேக்கர் அகற்றத்தில் ஏற்பட்ட குழறுபடியே அவரது மரணத்திற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் விஷயம் தீவிரமடைந்தது. 2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மருமகள் வெண்டி ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை உயர்மட்ட குழுவிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

மின்னஞ்சலில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அளிக்கப்பட தவறான சிகிச்சை குறித்த ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், இந்த தவறுக்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட் ஈடாகத் தரவேண்டும் எனக் கோரியிருக்கிறார். மேலும் பணம் கொடுக்கத் தவறும் பட்சத்தில் மருத்துவ அறிக்கையை பொதுவெளியில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை டைம்ஸ் இதழ் சோதித்தது மட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட பகுதிகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.
கைமாறிய பணம்
வெண்டி ஆம்ஸ்ட்ராங்கின் கோரிக்கைப்படி மருத்துவமனை நிர்வாகம் பணத்தினை குடும்பத்தாரிடம் வழங்கியிருக்கிறது. அதன்பின்னரே கோப்புகளில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின் ஹீரோக்களில் ஒருவரான ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்திற்கு பின்னால் இருந்த இந்த உண்மை பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.