கிரேக்க நாட்டிலிருந்து இந்தியா மீது படையெடுத்ததில் அலெக்ஸாண்டரை மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கும். அலெக்ஸாண்டர் இந்தியா வந்து சென்ற பின்னர் மற்றொரு கிரேக்க மன்னன் இந்தியா நோக்கிப் படையெடுத்து வந்தது பலருக்கும் தெரிவதில்லை. இன்றுவரை அப்போரினைப் பற்றிய குறிப்புகள் விரிவாகக் கிடைப்பதில்லை. போர் எங்கு நடந்தது என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் போரில் கிரேக்கம் பரிதாபமாகத் தோற்றிருக்கிறது. அப்போது கிரேக்கத்தைக் கலங்கடித்தவர் மௌரியப் பேரரசர் சந்திர குப்தர்.

கர்ஜிக்கும் சிங்கம்
சங்க கால இந்தியாவின் முதற்பெரும் அரசர் சந்திர குப்தர் தான். நிர்வாகம், நீதி வழங்குதலில் மிகச்சிறந்த மன்னராக சந்திர குப்தர் விளங்கியதாக வரலாறு தெரிவிக்கிறது. மௌரியர்களுக்கு முன்னால் ஆட்சி புரிந்த நந்தர்களை வீழ்த்தியவர் சந்திரகுப்தர். நகர நிர்வகிப்பு, குறை கேட்புக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி மக்கள் சுமைகளைக் குறைப்பதையே அரசின் முதற்நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் போர் என்று வந்துவிட்டால் கர்ஜிக்கும் சிங்கமென மாறி விடுவார். ஒரு காலத்தில் தமிழகத்தைத் தவிர ஒட்டுமொத்த இந்தியாவும் மௌரியப் பேரரசின் கீழ்தான் இருந்திருக்கிறது.

சக்கரவர்த்தி
மேற்கே பாரசீகத்திலிருந்து கிழக்கே வங்காள விரிகுடா வரை தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தவர் சந்திரகுப்தர் மட்டுமே. தென்னிந்தியாவை முற்காலச் சோழர்கள் ஆண்டுகொண்டிர்ருந்த காலம். கிரேக்க மன்னன் சிந்து நதியைக் கடந்து இந்தியாவிற்குள் புகுந்தார். சுமார் 2 லட்சம் வீரர்களுடன் கிரேக்கத்தை எதிர்த்திருக்கிறார் சந்திர குப்தர். போர் முழுவதும் யானையை விட்டுக் கீழே இறங்காமல் சந்திரகுப்தர் போரை நிகழ்த்தியதாக ரோமானிய வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு பெரிய சைனியத்தை செல்யுகஸ் எதிர்பார்க்கவில்லை எனவும் போரில் தோற்ற பின்னர் தன் மகளை சந்திர குப்தருக்கு மனம் முடித்து வைத்ததாகவும் ரோமானிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
அப்போது துவங்கிய மௌரிய – கிரேக்க நட்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த பிந்துசாரருக்கு கிரேக்கத்திலிருந்து பரிசுகள் வந்திருக்கின்றன. இந்த நட்பினை தொடரும் விதமாகப் பல அறிஞர்களை கிரேக்க அரசர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.
