ஒட்டுமொத்த சோழவள நாடும் எதிர்பார்ப்பில் ஏங்கிக் கிடந்தது. குலோத்துங்க சோழனின் குலவிளக்கிற்கு கவிதை சொல்லித்தர இருக்கிற கவி யார் என்ற கேள்வி காலையிலிருந்து அனைவரின் வாயிலும் முனுமுனுத்துக் கொண்டிருந்தன. பல போர்க்களங்களில் பரணி கேட்ட அநபாயன் அவைக்களம் வந்து சேர்ந்தான். வெளியூர் போயிருந்த ஒட்டக்கூத்தர் பற்றிய ஓலை இன்னும் வரவில்லை. வசந்தபஞ்சமி நாளை வருவதாக அரண்மனை அந்தணர்கள் தேதி குறித்திருந்தனர். கல்வி தொடங்க ஏற்ற நாளான வசந்த பஞ்சமி அன்று குலக்கொடியான அமராவதிக்கு கவிதை சொல்லித்தர ஆசிரியரை அமைத்திட வேண்டும் என ஆணையிட்டான் அநபாயன்.
கம்பன் இருக்கையில் வேறு யாருக்கு வாய்ப்பு போய்விடும்? அவையில் இருந்த புலவர்களும் கம்பரின் பெயரையே மந்திரமாக்க, மாமன்னன் மசிந்துவிட்டான். கவிச்சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுத்து ஓலை பறந்தது. இலக்கிய உலகை தனது எழுத்தாணியின் உரசல்களால் உணர்ச்சி வசப்படுத்திக் கொண்டிருந்த கம்பனின் கையில் ஓலை கிடைத்தது. கவியில் ஓட்டக்கூத்தனை நெற்றிக்கு நேர் நின்று வீழ்த்தியவனின் விரல்கள் ஓலைக்கு பதில் எழுதுவதை பார்த்துக் கொண்டிருந்தான் அம்பிகாபதி. காதலின் கணைகள் அவனது இதயத்தை குறிவைத்திருப்பது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பதில் ஓலையில் இருந்த கம்பனின் நிபந்தனையைப் படித்து மன்னனே விதிர்ப்புற்றான். எனது மாணவியிடம் கவிபாடும் ஆற்றல் இருக்கிறதா? எனத் தெளிந்த பின்னரே வகுப்புகள் வகுக்கப்படும் என்ற கம்பனின் வார்த்தைகளுக்கு வாழ்க்கை கொடுத்தான் அநபாயன். அடுத்த வினாடியே தந்தப் பல்லக்கில் காவலர்கள் புடைசூழ புறப்பட்டாள் அமராவதி. வாழ்க்கை தனக்கு அளிக்க இருக்கும் இன்பப் புதையலின் இருப்பிடத்தில் இறங்கினாள் சோழகுல இளவரசி.
குலோத்துங்கனின் அரண்மனையில் தங்க விரிப்பில் நடந்த கால்கள் கம்பனின் மண் குடிசையில் ஊன்றி நின்றன. செம்பொன் நிற உடலில் இருந்த தங்கமெல்லாம் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டிருந்தன. பருவத்தின் தலைவாசலில் நின்றிருந்த அமராவதி தன் வாசலில் நிற்பதைக் கண்டு பூரித்தார் கம்பர். உள்ளே அழைத்துச்சென்று புண்ணியம் செய்த ஆசனத்தில் அமரச் செய்தார். நிபந்தனையை நேர் செய்ய கேள்வியைத் தொடுக்க, அமராவதியிடமிருந்து பதில் கடுகி வந்தது. அநபாயன் மகள் அறிவில் மட்டும் எப்படி இருப்பாள்? கம்பர் அவளை மாணவியாக ஏற்றுக்கொண்டார். வேலையாக வெளியேறியிருந்த அம்பிகாபதி அந்த வேளையில் உள்நுழைந்தான். உயிரின் உள்ளே உலைக்களம் வைத்தது போல் ஆனான். பூலோகத்தில் இருக்கும் அழகை எல்லாம் ஒரே உடம்பில் கண்ட திகைப்பில் வீழ்ந்தான் கவிச்சக்கரவர்த்தியின் மகன்.
கவிதையின் இலக்கணம் கேட்டுக்கொண்டிருந்த இளவரசி காதலின் மோதலில் கடுமையாகத் தாக்கப்பட்டாள். அரண்மனை திரும்பியதில் இருந்து படுக்கையே உலகம் என ஏற்றுக்கொண்டாள். தண்ணீரை வாங்கும்போது அவன்விரல் பட்ட இடத்தில் முன்னூறு முத்தமிட்டாள். காதலின் விலையாக தூக்கத்தை கொடுத்திருந்த அமராவதி உலகத்து இன்பமெல்லாம் அவன் முகத்தில் குடியிருப்பதை ஆயிரமாவது முறை நினைத்துக்கொண்டாள். எப்போது விடியும் என கிழக்கில் கண்வைத்துக் காத்திருந்தாள்.
அம்பிகாபதியின் நிலைமை இன்னும் மோசமாகியிருந்தது. வந்திருந்தது பெண்தானா என்ற சந்தேகமே அவனை விடவில்லை. அவளுடைய மேலாடை நெய்ய உயிர்துறந்த பட்டுப்பூச்சிகள் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் என அம்பிகாபதி எண்ணிக்கொண்டிருந்தான். அவள் கன்னக் கதுப்பில் விழுந்த குழியில் தன்னைப் புதைக்க சாசனம் எழுதினான். இளவரசியின் கண்களில் இருந்த கருப்பு வெள்ளையில் கடிகாரத்தைத் தொலைத்துவிட்டான் அம்பிகாபதி.
இத்தனை ஆசைகளை, இத்தனை ஏக்கங்களை, இத்தனை எதிர்பார்ப்புகளை கேட்டுக்கொண்டிருந்த நிலவு வெட்கத்தினால் மேகங்களுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டது.
கம்பனிடம் கற்ற வித்தைகளை அவர் மகனிடமே பிரயோகித்தாள் அமராவதி. அவளுடைய அழகிற்கு உவமை சொல்ல திணறிப்போனான் அம்பிகாபதி. அவன் தீண்டிய இடமெல்லாம் காதல் தீ மூட்டியது அவளுக்கு. சுடர் நாவுக்கு தன்னை இரையென கொடுத்தாள் இளவரசி. காத்திருத்தலின் களிப்பிலும், விடைபெறுதலின் விசும்பல்களிலும் நாட்கள் நகர்ந்தன.
இரவெல்லாம் விழித்திருந்ததனால் உண்டான கருவளையத்தில் தன் செம்மஞ்சி உதடுகளால் ஒத்தடம் கொடுத்தனர் இருவரும். கண்களின் இடத்தை உதடுகள் பிடிக்க வெகுநேரம் ஆகவில்லை. ஆடைகள் எவ்வளவு கனமானவை எனத் தோன்றியது. ஒவ்வொரு இரவிலும் வசந்தகாலத்தை வரவேற்றார்கள் அம்பிகாபதியும் அமராவதியும்.
வாளின் முனையால் வடதிசையை தனதாக்கிய சோழனின் காதிற்கு இந்த காதல் கதை போய்ச்சேர்ந்தது. அரசவையில் கம்பரும், அம்பிகாபதியும் கைதிகளாக நின்றனர். உப்பிரிகையில் இருந்த அமராவதி மார்பிற்கு நடுவே கைவைத்து நின்றிருந்தாள். “பயிற்றுவிக்கும்படி சொன்னது கவிதையைத் தவிர காதலை அல்ல” என அவையின் பெருமவுனத்தை உடைத்தான் குலோத்துங்கன்.
உதடுகள் ஒட்டாமல் கவிதை ஏது? என்றான் அம்பிகாபதி. எனது வாள் உரையில் இருக்கும் வரை தான் உயிர் உமக்கு என்றான் மன்னன். அப்போதுதான் அரசவைக்கு வந்திருந்த ஒட்டக்கூத்தர் மன்னரின் காதுகளில் மடல் வாசித்தார். சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்களைப் பாடினால் குலோத்துங்கன் மகள் உனக்கு மனைவியாவாள் என்று அவையில் அறிவித்தார் ஒட்டக்கூத்தர்.
கம்பனின் மகனுக்கு கவிதையில் என்ன பஞ்சம்? பரம்பொருளை வைத்து முதல் பாடலைத் தொடங்கினான். அவைக்களத்தில் திரண்டிருந்த மக்கள் ஒன்றிலிருந்து எண்ணத் தொடங்கினர். கற்பனைக் குதிரைகளை கால தேச வர்த்தமானங்களைக் கடந்து ஓடவிட்டான் அம்பிகாபதி. தேர்ந்த சொற்களால் வரியமைத்து கவிச்சக்கரவர்த்தியின் வாரிசு நான் என்பதை நிலைநாட்டினான். கடைசி பாடலுக்கு முன் அமராவதியின் முகத்தில் ததும்பிய புன்னகையை புத்தியில் ஏற்றிகொண்டான். சிற்றின்ப எல்லைக்குள் நுழைந்து, மலரினும் மெல்லிவளின் மார்புகளைப் பற்றி பாட்டிசைத்தான்.
மன்னனின் விழிகள் வீரர்களுக்கு கட்டளையிட்டன. அம்பிகாபதி மண்டபத்தை வீட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டான். உப்பிரிகையில் இருந்தவள் மூர்ச்சையானாள். தங்கக் குவளையில் நீர் கொண்டுவந்து தோழிகள் அமராவதியினை எழுப்பினர். காலச் சக்கரம் கடைசியாகச் சுழன்ற இடத்தை மனத்தால் கண்டடைந்தாள். கொலைக்களம் நோக்கிப் புறப்பட்டாள். இடைமறித்த அனைவரையும் முன்னேறினாள்.
காலன் அவளை முந்தியிருந்தான். தன்னை இமைக்காமல் பார்த்தவனின் கண்கள் நிரந்தரமாய் மூடியிருந்தன. எச்சிலை அமிர்தம் என்றவனின் இதழ்கள் வறண்டு போயிருந்தன. தன்னை பற்றி எரியச் செய்த அவனுடைய விரல்கள் குருதிப்புனலில் தோய்ந்திருந்தன. தலையை விட்டுத் தனியாகக் கிடந்த உடம்பில் முகம் புதைத்து அழுதாள். செய்தி கேட்டு விரைந்துவந்த குலோத்துங்கன் தன் மகளின் நிலைமையைக் கண்டார். பரந்து விரிந்த சோழ தேசத்தின் இளவரசி அம்பிகாபதியின் உயிரற்ற உடல்மேல் முத்தமிட்டாள். கடைசி முத்தம். மன்னன் ஓடிப்போய் கைப்பற்றிய அவளுடைய கரங்களில் எஞ்சியிருந்தது அவனுடைய இரத்தம் மட்டுமே. தன்னைக் கேட்காமல் என்னவனின் உயிரை எடுத்த காலனிடம் முறையிட வான வெளியில் கடுகி சென்றுகொண்டிருந்தாள் அமராவதி.