மண்ணிற்குள் புதைந்து கிடந்த ஓவியம் 1200 கோடிக்கு ஏலம்!!

0
208
HT_forrest_fenn_treasure_chest_
Credit: ABC News

“அதிர்ஷ்டம் கூரைய பிச்சுகிட்டு கொட்டும்” என தமிழில் ஒரு சொல்லாடல் உண்டு. ஆனால் அதிர்ஷம் படுகுழியிலும் கிட்டும் என்கிறது பிரான்சில் தற்போது கிடைத்திருக்கும் செய்தி ஒன்று.

கடந்த 2014 ஆம் ஆண்டு தனது அன்றாட வேலையில் மூழ்கியிருந்தார் மார்க் லார்பே (Marc Labarbe). பிரான்சின் முன்னணி ஏல நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் இவருக்கு போன் மூலம் அழைப்பு ஒன்று வந்தது. பிரான்சின் டவுலஸ் (Toulouse) மாநிலத்தில் இருந்து பேசிய ஒருவர் வீட்டினுள் குழிபறிக்கும்போது ஓவியம் ஒன்று கிடைத்திருப்பதாகவும், அது பயனுள்ளதா? எனத் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

caravaggio-judith-and-holofernes
Credit: CNN

எரிக் டர்கின் (Eric Turquin) என்னும் பழங்கால ஓவிய ஆராய்ச்சியாளரின் உதவியுடன் இந்த ஓவியத்தைக் கைப்பற்றியபோது டர்கினுடைய கண்கள் அகல விரிந்திருக்கின்றன. மனதிற்குள் ஆர்வம் கரைபுரண்டு இது அதுதானா? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். ஆமாம் அது அதுதான்.

5 வருட ஆராய்ச்சி

ஓவியத்தின் சில பகுதிகள் சேதமடைந்திருந்தாலும் அதன் கரு குன்றாமல் சுத்தப்படுத்தி ஆய்வுக்கு அனுப்பியிருக்கின்றனர். அதன் முடிவுகள் எரிக் நினைத்ததைப் போலவே வந்திருந்தன. அது இத்தாலியின் மிகச்சிறந்த ஓவியரான காரவேகியோவின் படைப்புதான். பழங்கால ஓவியங்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் பூதக்கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு ஆமாம் இது அதுதான் என்றார்கள். வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்ட நகரத்திலேயே ஏலத்திற்கு வருகிறது. இதன் ஆரம்ப விலை 171 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (1200 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஜூடித் மற்றும் ஹோலோபிர்ணஸ் (Judith and Holofernes) என்னும் இந்தப்படம் 1607 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகும். ஓவியம் கிடைத்து விட்டாலும் இதன் மர்மங்கள் இன்னும் விலகியபாடில்லை.

கொலையுதிர் காலம்

ரோமன் திருச்சபையைச் சேர்ந்தவர்களால் இயற்றப்பட்ட விவிலியம் பழைய ஏற்பாட்டில் ஒரு கதை வருகிறது. போர் – அடிமைக் கதை. பெந்துலியா என்னும் நகரத்தில் வசிக்கும் ஜூடித் (Judith) என்னும் விதவையை அடிமைப்படுத்துகிறார் அசீரியாவின் ராணுவ தலைமையாளரான ஹோலோபெர்ணஸ் (Holofernes). தனது நகரத்தை விடுவிக்கும்படி மன்றாடிய ஜூடித்திடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார் ஹோலோபெர்ணஸ். தனது இச்சைக்கு இணங்கினால் இந்த நகரத்தை ஏதும் செய்யமாட்டேன் என உறுதிகூறுகிறார்.

caravaggio-judith-and-holofernes 1
Credit: Cabinet Turquin

படுக்கையறையில் ஜூடித்தின் அழகில் மயங்கிக்கிடந்தவரின் தலையைத் துண்டிக்கிறார் ஜூடித். இதைத்தான் ஓவியமாக வரைந்திருக்கிறார் காரவேகியோ. முழுவதும் வன்முறை பற்றிய இந்தப்படம் ஓவிய வரலாற்றில் மிகமுக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இதுவரை இதனை நகலெடுக்க யாராலும் முடியவில்லை எனில் நீங்களே இதன் உன்னதத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

காரவேகியோ

ரோம் நகரத்தில் வசித்துவந்த காரவேகியோவின் மீது கொலைகுற்றம் சுமத்தப்பட, நாட்டைவிட்டு ஓடிப்போனார். தனிமையில், உடல்நலம் குன்றிய தன் கடைசிக்காலத்தில் தான் அவர் இதனை வரைந்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் இந்தப்படத்தை காரவேகியோ வரைந்ததற்கு இரண்டு சாட்சிகள் தான் இருக்கின்றன. ஒன்று 1607 ஆம் ஆண்டு மெந்துவா (Mantua) நகர ஆட்சியாளருக்குக் கிடைத்த இரண்டு கடிதங்கள். இரண்டிலும் காரவேகியோ இந்தப்படத்தை வரைந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. மற்றொன்று லூயிஸ் பின்சன் (Louis Finson) என்னும் ஓவிய வர்த்தகரின் சாட்சி.

caravaggio-judith-and-holofernes PIC
Credit: Cabinet Turquin

தன் நண்பர் ஒருவரின் பூங்காவில் இந்த ஓவியம் கேட்பாரற்றுக் கிடக்க, அதை எடுத்து பத்திரப்படுத்தி விற்பனைக்குத் தயார் செய்தார் பின்சன். இது நடந்தது 1619 ஆம் ஆண்டு. அதிலிருந்து இந்த ஓவியம் 1689 ஆம் ஆண்டுவரை ஆண்ட்வெர்ப் (Antwerp) நகர கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதற்குப்பின்னால் தான் வரலாற்றுப் பக்கங்களில் இருள் படிந்திருக்கிறது. திடீரென ஓவியம் மாயமானது. அதன்பின்னர் யாருமே அந்த ஓவியத்தைப் பார்க்கவில்லை.

எங்கெங்கோ பயணித்து கடைசியில் 2014 ஆம் ஆண்டு பிரான்சின் தெற்குப்பகுதியில் உள்ள நகரமான டவுலஸ்ல் வீட்டிற்கு உள்ளே தோண்டப்பட்ட குழியில் கிடைத்திருக்கிறது, இந்தப்புதையல். இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது என்கிறீர்களா? ஓவியத்தை வரைந்த காரவேகியா கடைசியில் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. ஆண்ட்வெர்ப் அருங்காட்சியகத்தில் இருந்த ஓவியம் எப்படி? காணாமல்போனது என்பதைப்பற்றிய குறிப்புகளே இல்லை. ஆண்ட்வெர்ப் நகரத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் டவுலஸ் நகரத்திற்கு இதனை யார் எடுத்துச்சென்றார்கள்? என பல கேள்விகள் கேள்விகளாகவே எஞ்சுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் சிலர்,” வன்முறை நிரம்பிய இந்த ஓவியம் சபிக்கப்பட்டதாக இருக்கலாம். அதுதான் இப்படி நிலையில்லாமல் இந்த ஓவியம் கைமாறிக்கொண்டே இருக்கிறது. இதனை வாங்குபவர்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்றெல்லாம் பயமுறுத்தியிருக்கிறார்கள்.

அதை நீங்களே பத்திரமா வச்சுக்கங்கப்பா…