உலக வரைபடத்தில் மேற்கு ஆசியாவிற்கும் கிழக்கு ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு அடி ஸ்கேல் வைத்து கோடு போட்டால் அது அசர்பைஜானின் முதுகு வழியே செல்லும். அப்படிப்பட்ட அமைவிடம் அந்த நாட்டிற்கு. அந்நாட்டின் தலைநகர் காபுவிற்கு அருகில் இருக்கிறது அப்ஷெரோன் தீபகற்பம். மூன்று புறமும் காஸ்பியன் கடல் விரிந்திருக்கிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக அசர்பைஜானிற்கு சுற்றுலா செல்லும் 35 லட்சம் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கியவுடனே கேட்கும் கேள்வி ,” யானர் டாக் எங்கிருக்கிறது? என்பதுதான். மொழிபெயர்த்தால் “நெருப்பின் நிலம்”. அங்கே இயற்கையாகவே தீ எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. 4000 வருடங்களாக இந்தத் தீ அணையாமல் சுடர்விடுகிறது. எவ்வளவு தான் காற்றடித்தாலும், மழை பெய்தாலும் நிறுத்த முடியாத தீ.

தீயின் அடியில்
அந்த தீ எப்படி எரிகிறது என்பதை அடுத்த பாராவில் பார்க்கலாம். அதற்கு முன்னர் அதைப்பற்றிய சில முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றிக் காணலாம். இவை மிக முக்கியம். ஏனெனில் 3 மதங்களுடன் இந்த தீ சம்பந்தப்பட்டிருக்கிறது. பெர்சியர்களின் காலத்தில் (தற்போதைய ஈரான்) இது அடேஸ்காஹ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் நெருப்பின் இல்லம் என்று பொருள். அதனை அவர்கள் வழிபட்டிருப்பதும் தெரியவருகிறது. இவை நடந்ததெல்லாம் 10 – ஆம் நூற்றாண்டில். அதன்பின்னர் மத்திய கிழக்கில் குறிப்பாக ஈரானை மையமாகக் கொண்டு ஜொராஷ்டிரியம் பரவ ஆரம்பித்தது. அவர்களும் இந்த இடத்தை தங்களுடைய சடங்குகளின் முக்கிய ஸ்தலமாகப் போற்றியிருக்கின்றனர். அங்கே ஒரு கோட்டை கட்டப்பட்டு அதன் மையத்தில் தீ எரிவதற்க்கான தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
தீ மனிதனின் குரோதங்களை எரித்து தூய்மையானவர்களாக ஆக்குவதாக அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அடுத்ததாக 17 மற்றும் 18 – ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து அசர்பைஜானிற்குக் குடியேறியவர்கள் அங்கு வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்னோடியாக சீனாவிலிருந்து பட்டுச்சாலை வழியாக வியாபாரம் செய்ய வந்த அனைவரும் இந்தத் தீயினைப் பற்றித் தங்களது ஊர்களில் கதையை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

அறிவியல் சொல்வது என்ன ?
சமன்பாடுகளின் வழியே எடுத்துரைக்கப்படாத அல்லது எடுத்துரைக்க முடியாத விஷயங்களை அறிவியல் ஏற்றுக்கொள்வதில்லை. மதம், வழிபாடு எல்லாம் சரி, எதனால் இந்த இடம் எரிகிறது? என்ற கேள்விக்கு விடை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் காரணத்தைக் கண்டுபிடித்தனர். பொதுவாகவே அந்த பிரதேசம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதி. இயற்கை எரிவாயுவும் அதிகம். புரிந்துவிட்டதா? அதுதான் விஷயம். மண்ணில் உள்ள துளைகளின் வழியாக பூமிக்குள்ளிருக்கும் எரிவாயு தரையின் மட்டத்திற்குத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் தீ அணையவில்லை. வாயுவின் அழுத்தம் காரணமாக தீ பிடித்திருக்கிறது. எது எப்படியோ, பனி மற்றும் மழைக்காலத்தில் அசர்பைஜான் செல்பவர்கள் காஸ்பியன் கடலைப் பார்த்துக்கொண்டே குளிர்காய ஓர் அருமையான இடம் இருக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.