நாம் அனைவருமே X – Men திரைப்படம் பார்த்திருப்போம். அதில் வரும் லோகன் (Logan) கதாப்பாத்திரம் கையில் சிறிய வாளுடன் வலம் வருவார். அந்த வாள் எப்போதும் அவர் கையுடனே பிணைந்திருக்கும். அதே போல் வாழ்நாள் முழுவதும் கைக்குப் பதிலாக வாளை உபயோகித்த மனிதரின் சடலத்தை இத்தாலியில் கண்டுபிடித்துள்ளனர்.

இரத்த பூமி
இத்தாலியை ஒரு காலத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த லங்கோபார்ட்(Longobard) இன மக்கள் ஆண்டு கொண்டிருந்தனர். 6 – ஆம் நூற்றாண்டிலிருந்து 8 – ஆம் நூற்றாண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. லங்கோபார்ட்டின் ஆண்களுக்குப் பிடித்த விளையாட்டு, பொழுதுபோக்கு, வேலை, இலட்சியம் எல்லாமே போர் தான். அப்படி ஒரு போர்ப் பைத்தியங்கள். அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த வெனிட்டோவில் (Veneto, Italy) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வினை மேற்கொண்டார்கள்.
கத்தியில் கை
இந்த ஆராய்ச்சியின் போது 222 எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டன. தலை இல்லாத குதிரை, மிகப்பெரிய வேட்டை நாய் என வித்தியாசமான எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் தான் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது ஒரு 40 வயது மதிக்கத்தக்கவரின் எலும்புக் கூடு. அவரது வலது கை மணிக்கட்டிற்குப் பதில் சிறிய வாள் ஒன்று பொருத்தப்பட்டு இருந்திருக்கிறது. கை எலும்போடு வாளானது இணைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைக் கைப்பற்றி மேலும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தியதில் திடுக்கிடவைக்கும் பல உண்மைகள் வெளி வந்திருக்கின்றன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
போரிலோ அல்லது தனிப்பட்ட மோதலின் காரணமாகவோ அவர் கையை இழந்திருக்கலாம் என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள். மேலும், கத்தியைக் கையினுள் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறை தான் கேட்கவே பயமளிக்கிறது. வலது கை எலும்பினுள் கத்தியின் பிடியை நுழைத்திருக்கின்றனர். மேலும் அதைச்சுற்றி வலுவான நூலினைக் கொண்டு கட்டுப் போட்டிருக்கின்றனர். அதனாலென்னவா? அப்போது மயக்கமருந்து என்ற ஒன்றே கண்டுபிடிக்கப்படவில்லை!! மேலும், அறுவை சிகிச்சையின் போது வெளியேறும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மருந்து கிடையாது. இந்நிலையில் எப்படி எந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அரசின் அங்கீகாரம்
கைக்குப் பதிலாக கத்தியை வைத்துக் கொள்ள அனுமதியளிக்கும் அரசினை என்ன சொல்வது? ஆனால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள். ஒருவர் கையை இழக்கிறார். மயக்க மருந்தில்லாமல் அதற்கு சிகிச்சை அளிப்பதே வேதனையின் உச்சமாக இருந்திருக்க வேண்டும். அதனோடு கத்தியை இணைத்துக்கொள்ள அவர் ஒத்துழைத்திருக்கிறார் எனில் அரசும், சமூகமும் அவருக்குத் துணையாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும், அந்த கத்திக் கையினோடு போர்க்களம் புகுவதற்கும் ஊக்கப்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறது அவர்களின் ஆய்வு முடிவு. இன்னும் பல எலும்புக்கூடுகள் சிகிச்சைக்கு உட்ப்படுத்தப்படாமல் இருப்பதால் இனிவரும் காலங்களில் இப்படிப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கப் போகின்றன.