பொதுவுடைமை தத்துவஞானி காரல் மார்க்ஸ் – ஜென்னி காதல் கதை!

Date:

வாலிபத்தின் வாசலில் இனிக்கும் காதல், திருமணத்திற்குப் பின்னால் கசந்துவிட்டதற்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம். ஆண்டாண்டு காலமாக காத்துக்கிடந்த பொருள் கையில் சிக்கிய பின்னர், மதிப்பிழந்து போனதாக என்னும் மதி கொண்டவர்கள் ஏராளம். வாழ்வின் கடைசி நொடி வரை காதலின் பிடியில் சிக்கித் தவிக்கும் சாபம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதனால் தான் காரல்மார்க்ஸ் – ஜென்னி இணை இன்றும் வரலாற்று வரிகளுக்கு இடையே வரவு வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஜெர்மனியின் பிரபு வம்சம் ஒன்றில் உதித்தவர் ஜென்னி. இரத்தத்தை உறிஞ்சும் வல்லோர்கள் நிரம்பிய குலத்தில், ஏழைகளுக்கு இரங்கும் இதயம் அவருக்கு இருந்தது. கொள்கை நாயகனான மார்க்ஸை வீட்டார் சம்மதப்படியே மனமும் புரிந்துகொண்டார். நாடுவிட்டு நாடு, நகரம் விட்டு நகரம் என வறுமை துரத்திய நாட்களில், மார்க்ஸை சுமந்தவர் ஜென்னி.

அப்போதைய ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த கொடுஞ்செயல்களை எதிர்த்து பத்திரிக்கைகளில் எழுதத் துவங்கினார் மார்க்ஸ். ஜென்னி அதனை முழுமையாக ஆதரித்தாள். அரசாங்கம் அவர்களை மிரட்டியது. பதிலுக்கு மார்க்சின் எழுத்தில் தீப்பறந்தன. அதனால் மார்க்சின் குடும்பத்திற்குக் கிடைத்த பரிசு நாடுகடத்தல். காலாச்சார மாற்றத்தின் மையப்புள்ளியாக இருக்கும் பிரான்சிற்கு குடிபுகுந்தார் மார்க்ஸ்.

எத்தனை தாழ்ந்தாலும் சுடர் மேல்நோக்கித்தானே மேவும்? பிரான்சிலும் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்த மார்க்ஸ் மறுபடியும் தன் பேனாவில் மையூற்றினார். மறுபடி சிக்கல். மறுபடி நாடுகடத்தல். இடையில் சிறிதுகாலம் பெல்ஜியத்தில் இருந்தது இந்தக்குடும்பம். உலக வரலாறு இன்று தலைமேல் வைத்துக்கொண்டாடும் மார்க்சிற்கு இடம் தர பெல்ஜியமும் மறுக்கவே கடைசியாக இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தார்.

எத்தனை பயணம்? எத்தனை புறக்கணிப்புகள்? எத்தனை வறுமை? எத்தனை கண்ணீர்? அத்தனையிலும் உனக்காக நான் இருக்கிறேன் என்ற ஜென்னியின் ஒற்றைக்குரல் தான் மார்க்சை மாமனிதன் ஆக்கியது. இங்கிலாந்தின் கடுங்குளிர் காலத்தில் விரிப்புகளும், போர்வைகளும் இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் மிச்சமிருந்த உடற்சூட்டை வைத்தே உயிர்வாழ்ந்தார்கள் இருவரும். பிரசிஸ்கா பிறந்த வீட்டில் தொட்டில் வாங்கக் காசில்லாமல் தவித்தனர் இருவரும். புரட்சியின் பிடியிலேயே இருந்தவருக்கு குடும்பத்தின் வறுமையைப் போக்க வழி தெரியவில்லை. பகல் முழுவதும் நூல்களுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டார். காலம் கருப்பு வெள்ளயாய்த் தெரிந்தது.

சிறிய வேலைகளுக்கு எழுதிப்போட்டார். பதில் கடிதம் கூட வரவில்லை. வறுமையின் வல்லிருட்டு இறுக்கமாக சூழ்ந்தது. இருப்பினும் புத்தகப் பித்து இன்னும் அவரை விடவில்லை. தொழிலாளர்களின் பைபிள் எனப்படும் மூலதனம் புத்தகத்தை வெளியிட்டார். விற்பனையின் நிழலில் சிறிதுகாலம் மகிழ்ந்திருக்கலாம் என்று ஜென்னியிடம் முத்தத்திற்கு நடுவே சொன்னார். காலம் மறுபடியும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தது. புகையிலை வாங்கும் அளவிற்குக்கூட புத்தகம் விற்கவில்லை என ஆருயிர் நண்பர் எங்கெல்சிற்கு எழுதினார் மார்க்ஸ்.

பனிக்காலம் முடிந்தவுடன் புதுவிடியல் நிச்சயம் பிறக்கும் என ஜென்னி ஆறுதல் கூறினாள். காலம் முழுவதும் அலைந்ததால் உடம்பில் அலுப்பு அழையா விருந்தாளியாக உட்புகுந்தது. ஆஸ்துமா, இரத்தக்கொதிப்பு போன்றவற்றிற்கும் தன்னுடம்பில் ஆதரவு அளித்து தான் ஒரு பொதுவுடமைவாதி என்று மறுபடியும் நிரூபித்தார். குளிரின் கோரமுகத்தை காணச்சகிக்காமல் பிரசிஸ்கா இறந்துபோனான். உடைந்துபோனார்கள் இருவரும்.

அப்போதும் காலம் அவர்களைக் கண்கலங்க வைத்தது. பிஞ்சுக் குழந்தையினை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கவும் அவர்களிடம் காசில்லை. வறியவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை வீசிச்சென்றவனுடைய வாழ்வு இப்படித்தான் இருந்தது. பாலைநிலத்தில் பாவுகிற வெப்பமாக வாழ்க்கை இருந்தபோதும் குளிர்ந்த நதியாகவே ஜென்னி இருந்தாள். மரணம் அவளையும் ஒருநாள் அவரிடமிருந்து எடுத்துக்கொண்டது. வாழ்வின் கடைசித் தருணங்களை, கொடும் தனிமையில் களித்த மார்க்ஸ் சொல்கிறார், ஜென்னி என் தாய். ஜென்னி என் மீட்பள்.

இத்தனை துயரங்களுக்கும் நடுவே மார்க்சைக் காதலித்த ஜென்னிக்கு ஈடாக யாரையும் இவ்வையத்தில் சொல்லிவிடமுடியாது. வறுமை அவர்களது வாழ்க்கையைப் பறித்திருக்கலாம். ஆனால் அவர்களது காதல் வானமாய் இன்றும் நிற்கிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!