அமெரிக்காவின் 35 ஆவது அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஜான் எப்.கென்னடி(John F.Kennedy). பதவியேற்ற மூன்றாம் ஆண்டில் லீ ஹார்வர்ட் ஆஸ்வால்ட் (Lee Harvey Oswald) என்பவரால் அமெரிக்க மண்ணிலேயே படுகொலை செய்யப்பட்டவர். அதிபரின் மரணம் குறித்த ஏராளமான வதந்திகளும் சர்ச்சைகளும் அமெரிக்க மக்களிடையே இன்னும் இருந்து வருகின்றன.
இந்நிலையில், நிக்கோலஸ் நல்லி (Nicholas Nalli) என்னும் ஆராய்ச்சியாளர் அதிபரைக் கொன்ற குண்டு பயணித்த திசை, ஏற்பட்ட காயம் ஆகியவற்றைக் கணக்கிட்டு அறிக்கை ஒன்றைச் சமர்பித்திருக்கிறார். விசாரணைக் கமிஷனின் அறிக்கையின் படி ஆஸ்வால்ட், அதிபரின் பின்தலையை நோக்கிச் சுட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் உயிர் பிரிந்தது எனவும் அறிக்கை விளக்கியது. தற்போது நல்லியின் ஆராய்ச்சி முடிவும் அதையே வலியுறுத்தியிருக்கிறது.

கருப்பு நாள்
1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி, டெக்சாஸ் மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியிருந்தனர். அந்நகரின் வழியாகச் சென்று கொண்டிருந்த அதிபர் கென்னடி மக்களிடையே கை அசைத்தவாறு தனது காரில் அமர்ந்திருந்தார். சாலை நெடுகிலும் மக்கள் கூடி அதிபரை நோக்கி உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். காரில் அதிபர் கென்னடி மற்றும் அவரது மனைவி ஜாக்குலீன்(Jacqueline), டெக்சாஸ் மாநில ஆளுநர் ஜான் கானலி (john connaly) மற்றும் கானலியின் மனைவி நெல்லி (Nellie) ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
சற்று நேரத்திற்கெல்லாம் காவல்துறை அதிபரின் காரைச் சுற்றிவளைத்தது. கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வந்த ஆம்புலன்சில் ஏற்றப்படும் போது தான் மக்களுக்குத் தெரிந்தது, கென்னடி சுடப்பட்டார் என்ற விஷயம். அருகில் இருந்த பார்க்லாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கென்னடி சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார். சுடப்பட்டு அரைமணி நேரத்திற்குள் அவர் உயிர் பிரிந்திருந்தது. அமெரிக்கா உச்சகட்ட பரபரப்பில் இருந்த நாள் அது. சுட்டது யார்? என்ற கேள்விக்கான விடையை அன்றே கண்டுபிடித்தனர் டெக்சாஸ் மாநிலக் காவல்துறையினர்.

அறிக்கை கூறுவது என்ன?
அமெரிக்க கப்பற்படையின் முன்னாள் ஊழியரான ஆஸ்வால்ட் தனியாக அதிபரை மூன்று முறை சுட்டுக் கொன்றதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதிபரின் காருக்கு பின்புறத்தில் இருந்த டெக்சாஸ் மாகாண பள்ளிப் புத்தகக் களஞ்சியத்தின்(Texas School Book Depository) ஆறாவது தளத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்வால்டின் துப்பாக்கிக்குண்டு கென்னடியின் தலையை பின்புறமாக ஊடுருவிச் சென்றது. தலையில் ஏற்பட்ட தீவிரத் தாக்குதலால் அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. உடன் இருந்த கானலி பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
50 ஆண்டுகால சர்ச்சை
படுகொலைக்குப் பின் பல தனியார் நிறுவனங்களால் நடைபெற்ற ஆராய்ச்சிகள் மேலும் பல மர்மங்களை வெளிக் கொணர்ந்தது. அதிபரின் படுகொலையின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. காருக்கு முன்புறத்தில் இருந்த கிராஸி நோல்(Grassy Knoll) என்னும் இடத்தில் இருந்து தான் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்க வேண்டும் எனவும், அதிபரின் பின்தலையில் இருந்த காயமானது குண்டு வெளியேற்றத்தினால் உருவானது எனவும் பல சர்ச்சைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கென்னடி கொலை வழக்கைப் பொறுத்தவரை அமெரிக்க மக்களால் அதிகம் நம்பப்படும் கருத்து, அதிபரைச் சுட்டது ஆஸ்வால்ட் மட்டுமல்ல. அவனுடன் இன்னொருவரும் அதிபரைச் சுட்டிருக்கக்கூடும் என்பதாகும். அதற்குக் காரணம், அதிபரின் காரில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவுப் பெட்டியில் பதிவாகியிருந்த இரண்டு வெவ்வேறு விதமான துப்பாக்கிச் சத்தங்கள்.
அதிபரின் மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட வாரன் கமிஷன் (Warren Commission) அறிக்கையிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. போதாது? மக்கள் அரசை நோக்கிக் கேள்விகளை அடுக்கத் துவங்கினர். அதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் அதிபரைக் கொலைசெய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆஸ்வால்ட்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஜாக் ரூபி(Jack ruby) என்பவரால் கொல்லப்பட்டான்.
ரூபி அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஊழியராக இருந்தவர். உடனடியாக டெக்சாஸ் மாகாண காவல்துறை ரூபியைக் கைது செய்தது. பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரூபியின் கைது அடுத்த குழப்பத்தை மட்டுமே மக்களுக்கு அளித்தது. கைது செய்யப்பட்ட சில மாதங்களில் சிறையினுள்ளே மர்மமான முறையில் ரூபியும் இறந்து போனான். இப்படி கென்னடியின் படுகொலையில் பல முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
80% அமெரிக்க மக்கள் கென்னடியின் கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக நம்புகின்றனர்!!
உலகின் வல்லரசு நாட்டின் அதிபரின் மரணத்திற்கான காரணங்கள், இன்னும் அந்நாட்டின் சொந்த மக்களால் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 80% அமெரிக்க மக்கள் கென்னடியின் கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக நம்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. நல்லியின் இந்த அறிவியல் பூர்வ அணுகுமுறை ஆஸ்வால்ட் தான் இக்கொலையைச் செய்தான் எனத் தெளிவுபடுத்தினாலும், என்ன காரணத்திற்காக என்பது பில்லியன் டாலர் கேள்வியாக எஞ்சியுள்ளது. ஆஸ்வால்டினை இயக்கியது, அப்போதைய கியூபாவின் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ தான் என்ற கூற்றும் வெகுகாலமாய் இருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகள் தொடரும் பட்சத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம், இல்லையேல், இன்னும் குழப்பத்தை நீட்டிக்கக் கூடச் செய்யலாம்.