இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஜாலியன்வாலாபாக் தான். இந்தியாவில் இந்தியருடைய உரிமைகள் என்பது ஏதுமில்லை என மக்கள் உணர்ந்த தருணமும் கூட. வருடம் 1919. ரௌலட் சட்டத்தை எதிர்த்து இந்திய அளவில் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருந்தன. இதனைக் காரணம்காட்டி மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டது. அப்போதுதான் அந்த திருவிழாவும் வந்தது.
பைசாகி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைப் போன்றது பஞ்சாபில் பைசாகி. அமிர்தசரஸ் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதற்கு அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் கூட்டம் ஒன்று நடைபெறுவதாக தகவல் கசியவே ஏராளமான மக்கள் அங்கு குழுமினர். ஆனால் இதே தகவல் ஆங்கிலேயருக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பது மக்களுக்குத் தெரியவில்லை.
குறுகிய ஒரு வழியினை மட்டுமே நுழைவுவாயிலாகக் கொண்ட அந்த மைதானத்திற்குள் ஏராளமான குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் இருந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் ரெஜினால்ட் எட்வர்டு ஹேரி டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பெரும் படை ஒன்று அந்த இடத்தை சுற்றிவளைத்தது.
1,650 தோட்டாக்கள்
கலைந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டதை மக்கள் சாதாரண எதிர்ப்பாகவே நினைத்தனர். ஆனால் டயர் அடுத்த சில நொடிகளில் சிப்பாய்களுக்கு கூட்டத்தினரை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான். காற்றைக்கிழித்துக்கொண்டு கொடும்பசியுடன் சென்ற தோட்டாக்கள் அப்பாவி மக்களுடைய குருதி குடித்து தாகம் தீர்த்தன.
பீதியில் நாலாப்புறமும் சிதறியோடிய மக்கள் எவரும் துப்பாக்கி முனைக்குத் தப்பவில்லை. கடைசிக்குண்டும் தீர்ந்தபிறகே சிப்பாய்கள் தங்களது இயக்கத்தை நிறுத்தினார்கள். எங்கு நோக்கிலும் மனித சடலங்கள். நிலம் முழுவதும் உதிரம் ஊறிக்கிடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது உலக அளவில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜெனரல் டயர் இதற்காக பதவி நீக்கப்பட்டு இங்கிலாந்திற்குத் திரும்ப அனுப்பப்பட்டார். ஆனாலும் 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் டயரை உத்தம் சிங் என்ற இளைஞன் சுட்டுக் கொன்றான்.
பிரிட்டன் வருத்தம்
2013 இல் இந்தியா வந்திருந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அந்தப் படுகொலைகளை ‘வெட்கக்கேடானது’ என்று கூறினார். இன்றோடு ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 வருடங்கள் ஆகிறது. இரண்டு நாட்கள் முன்பு ஹவுஸ் ஆப் காமென்சில் உரை நிகழ்த்தும்போது அந்நாட்டின் அதிபர் தெரசா மே இதற்காக வருத்தம் தெரிவித்தார்.
காலங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்றளவும் அந்த தாக்குதல் ஏற்படுத்திய வடு ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஆறாத வடுவாக இருக்கிறது.