கடல் பார்த்த வீடு. காற்றில் கலந்திருக்கும் மெல்லிய உப்பு நெடி. நூற்றாண்டுகால வரலாற்றைத் தாங்கி நிற்கும் நகரம். உலகின் முன்னணி ஒயின் தயாரிப்புகள் அனைத்தும் தயாரிக்கும் இடம். சுற்றிலும் பூந்தோட்டங்கள். அரியவகை திராட்சைத் தோட்டங்கள். இவற்றிற்கு மத்தியில் அமைந்திருக்கும் வீடு ஒரு டாலருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு இடம் இருக்கிறது. இத்தாலியின் தென்கோடியில் அமைந்திருக்கும் சிசிலி தீவு நகரமான செம்புகா தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கிரேக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிசிலியை சராசெனியர்கள் கைப்பற்றியதிலிருந்து வரலாற்றில் மிக முக்கிய அங்கத்தைப்பெற்றது செம்புகா. இங்குள்ளவர்கள் அரேபிய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள்.
மக்கள் தொகை
இத்தாலியின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த செம்புகாவில் முன்னாளில் ஏராளமான மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் வேலைவாய்ப்பின் காரணமாக பெரும்பாலான மக்கள் இத்தாலிக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் குடியேறிவிட்டனர். அதனால் அந்நகரம் தற்போது போதிய மக்கள் இல்லாததால் சூனியமாய்க் கிடக்கிறது. இதனைச் சரி செய்யவே இங்குள்ள வீடுகளை விற்பனை செய்ய அந்நகர அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதன்மூலம் இந்நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். இதனால் உள்ளூர் மக்களின் வியாபார, பொருளாதார வளர்ச்சிகள் சாத்தியமாகும். மேலும் கலை இழந்துபோன செம்புகாவை மீட்டெடுக்க இம்மாதிரியான முயற்சிகள் அவசியம் என்கிறார் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
வீடு விற்பனை
இதுவரை பத்து வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டினர் இந்த வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. வீடு வாங்கும் வெளிநாட்டினர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீட்டினை விரிவுபடுத்தவும், மேலும் பலரை இங்கே வரவேற்கவும் இத்தாலியின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இதனால் இன்னும் பத்தாண்டுகளில் செம்புகாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
பேய் வீதி
சிலுவைப்போரின் எச்சங்களாக இன்னும் சில இடங்கள் இங்கே இருக்கின்றன. போரில் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் இங்கே இருப்பதாக ஏராளமான கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆவிகள் வீதி என்றே ஒரு வீதி இருக்கிறது என்றால் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். ஆனால் பயணிக்கும் ஒவ்வொரு வெளிநாட்டினரும் முதலில் பார்க்க விரும்புவது இந்த இடத்தைத்தான்.

சிசிலி அங்கு வழக்கத்தில் இருந்த பழங்கால உணவுப் பொருட்களின் ருசி இன்னும் ஐரோப்பியர்களால் மறக்கமுடிவதில்லை. பாஸ்தா, பீட்ஸா, சாசேஜ் மற்றும் இங்குள்ள பிரத்யேக ஆட்டுப்பாலில் செய்யப்பட வெண்ணெய் ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க உணவுவகைகள் ஆகும். இன்றும் இங்கே அந்த உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. வெளிநாட்டினரைக் கவரும் முக்கிய அம்சங்களில் இந்த உணவுக்கு என்று தனி இடம் இருக்கிறது. சிசிலியின் மேற்கூரை என்று அழைக்கப்படும் செம்புகா நகரம் இன்னும் சில ஆண்டுகளில் தனது பழைய அடையாளங்களை வரலாற்றிலிருந்து மீட்டெடுக்கும் என அந்நாடு இன்றும் நம்புகிறது. வரலாறு என்பதே திரும்பித் தொடர்வதுதானே?