முருகன் தமிழனின் முப்பாட்டனா?

Date:

இந்த வருட தைப்பூசத் தினத்தன்று ஒரு படம் காட்டுத்தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவலானது (Viral – பரவல்). கூடவே சர்ச்சையும் தான். மேலே இருக்கும் படம் தான் அந்த சர்ச்சைகளுக்கு காரணம்.

இப்படத்தில், கையில் வேலோடும், அருகில் மயிலோடும் இருப்பவர் யாரென தெரிகிறதா? நமது தமிழ்க் கடவுள் முருகனே. என்ன இது… மீசையுடன் முருகனா என்றா நினைக்கிறீர்கள்?

கடந்த சில வருடங்களாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், முருகனை ‘முப்பாட்டன் முருகன்’ என்றே அழைத்துவருகிறார். அவர்தான் மீசையுடன் இருக்கும் முருகன் படத்தை வெளியிட்டுள்ளார். தமிழர்கள் அனைவருக்கும் கடவுளாக இருப்பவர் எப்போது முப்பாட்டன் ஆனார் என்றும், அவர் கூறுவது ‘நல்ல நகைச்சுவை’ என்றும், அப்போதிருந்தே பலரும் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்  இருக்கின்றனர்.

Seeman-Calls-Murugan-Muppattan-Thaipoosamபலர் முருகன் நமது முப்பாட்டன் தான் என்று கூறுவதோடு, முன்னோர் வழிபாடு என்பது தமிழர்களிடையே இருக்கும் வழக்கம் தானே என்றும், முருகன் நமது மூதாதை தான் என்ற கருத்தையும் பதிவு செய்தே வந்திருக்கிறார்கள்.

முன்னோர் வழிபாடு என்பது தமிழர் பழக்கமே. அதனால் முருகன் தமிழர் மூதாதையாக இருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

சில மாதங்களுக்கு முன்பு ‘முருகன் எவ்வாறு தமிழனின் முப்பாட்டன் ஆனான்’  என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிந்த கருத்துக்களை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் மூன்று காரணங்களை கொண்டு முருகன், தமிழர்களின் முப்பாட்டனே என்பதை நிறுவ முயல்கிறேன். அம்மூன்று காரணங்களும் இங்கே உங்களுக்காக.

காரணம் 1: சேயோன் = முன்னோர் = முருகன் 

உங்களில் சிலருக்கு ‘பரம்பரை’ என்ற வார்த்தையின் பொருள் தெரிந்திருக்கக்கூடும். தமிழ் மொழி இலக்கணத்தின் படி ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’. பரன் + பரை என்பதே பரம்பரை என்றானது. நமது ஏழாம் தலைமுறை மூதாதையினரின் ஆண்பால் பரன் எனவும், பெண்பால் பரை எனவும் அழைக்கப்பட்டனர் என்று சில வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன்.

உறவுமுறை ஏணியில் நம்மிலிருந்து ஆறாவது தலைமுறை சேயோன் என்றழைக்கப்படுகிறது. அதாவது இன்றைய உறவு முறையில் நமது அப்பாவின் தாத்தாவின் தாத்தா. நமது அப்பாவின்-தாத்தாவின்-தாத்தா இன்று உயிரோடு இருந்திருந்தால், நாம் அவரை சேயோன் என்று அழைத்திருப்போம்.

சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் ‘சேயோன்’ என்று முருகனை கூறுகிறார். முருகனுக்கு இன்னொரு பெயர் சேயோன் என்பது.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்,

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்

– தொல்காப்பியம் அகத்திணையியல்

மாயோன், வேந்தன், வருணன் என்று பிற கடவுளரை பெயர் சொல்லி குறிப்பிடும் போது தொல்காப்பியர், முருகனையும் சேயோன் என்று பெயரைக் கூறியே குறித்திருப்பார். உறவைச் சொல்லி குறித்திருக்கமாட்டார். சேயோன் என்ற சொல்லுக்கு சிவந்தவன் என்ற பொருளும் உண்டு. சிவன் என்ற பொருளும் உண்டு. சிவந்தவன் சுருங்கி சிவன் என்றும் ஆனது என்கிறார் சொல்லரிமா ம.சோ.விக்டர் அவர்கள். அதைப்பற்றி நாம் வேறொரு கட்டுரையில் விவாதிப்போம்.

முருகன் சித்தராக இருந்தவர். அவர் சித்தர் அகத்தியர் காலத்துக்கும் முற்பட்டவர். அவர் தொல்காப்பியருக்கும் 1500 ஆண்டுகளுக்கும் மேல் முற்பட்டவர். முருகன் என்ற பெயரிருக்க சேயோன் என்று தொல்காப்பியர் ஏன் கூறுகிறார்? பாடலின் நயத்திற்காக என்பதைத் தவிர்த்து, வேறு எதற்கென எண்ணினால் எனக்கு தோன்றுவது சேயோன் என்பது முருகனைக் குறிக்க மக்கள் அதிகம் பயன்படுத்திய வேறு ஒரு பெயராக இருந்திருக்கும் என்பதே.

நாம் இன்றும்  திரு.ஈ.வெ.ரா அவர்களை நாம் பெரியார் என்று அழைப்பது போல், திரு. உ.வே.சா அவர்களை தமிழ்த் தாத்தா என்று அழைப்பது போல், காமராஜரை இன்றும் பெருந்தலைவர் என்று அழைப்பது போல் அக்காலத்தவர் முருகனை முதலில் உறவு முறையில் சேயோன் என்று அழைத்திருக்கக்கூடும். பின்னர் அதுவே நிலை பெற்றிருக்கக்கூடும்.

திரு.ஈ.வெ.ரா அவர்களை நாம் இன்றும் பெரியார் என்று அழைப்பது போல், திரு. உ.வே.சா அவர்களை தமிழ்த் தாத்தா என்று அழைப்பது போல், காமராஜரை இன்றும் பெருந்தலைவர் என்று அழைப்பது போல் அக்காலத்தவர் முருகனை முதலில் உறவு முறையில் சேயோன் என்று அழைத்திருக்கக்கூடும். பின்னர் அதுவே நிலை பெற்றிருக்கக்கூடும். அம்மா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அழைப்பது தமிழ் சமூகத்தில் எத்தனை காலம் பீடித்து நிற்க போகிறதோ? கொடுமை.

உறவு முறைப்படி சேயோன் எனில், முருகன் எத்தனை பேருக்குத்தான் சேயோனாக இருந்திருப்பார்?

அக்காலத்தில் ஒரு தலைமுறையின்  சராசரி குழந்தைப்பேறு 6 என வைத்துக்கொண்டால், அதில் பாதி பேர் அதாவது 3 பேர் ஆண்கள் எனக்கொண்டால் ஆறாவது தலைமுறையினர் 243 பேருக்கு (3 ஆண் குழந்தைகள் ஒரு தலைமுறைக்கு * 5 தலைமுறை. அதாவது  3*3*3*3*3 = 243) அவர் சேயோனாக இருந்திருக்கக்கூடும். இந்த எண்ணிக்கை என்பது சுமார் 250 குடும்பங்கள் எனக்கொண்டால், இது ஒரு சிற்றூர் அளவு இருக்கக்கூடும். கவனிக்க. இங்கே ஆண்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளேன். பெண்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும். ஒரு தலைமுறை வயதென்பது 30 வருடங்கள் எனில் 5 தலைமுறைகள் அதாவது, சேயோன் என்பவர் 150 வருடங்கள் பின்னால் வந்தவர்களால் அவ்வாறு அழைக்கப்பட்டிருப்பார்.

உறவுமுறைப்படி சேயோன் என்றழைக்கப்படுவது முருகன் எனின் அவர் தமிழனின் முப்பாட்டனே!

சேயோன் என்ற சொல் எவ்வாறு உருவாக்கி இருக்கும் என்பது பற்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை முன்வைக்கும் கருத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.

காரணம் 2: திரு + பரன் + குன்றம்  = திருப்பரங்குன்றம்

சேயோனுக்கு கோயில் கட்ட முனைந்த ஒரு தலைமுறை, தங்களது அடுத்த தலைமுறைக்கும் அந்த எண்ணத்தை கடத்தி இருக்கும். முருகன் அந்த அடுத்த தலைமுறையின் பரன் ஆகி இருப்பார்.

பரன் என்று அழைக்கப்பட்ட தாத்தாவின்-தாத்தாவின்-தாத்தாவுக்கு  (முப்பாட்டனுக்கு) அவர்கள் வழி வந்த ஏழாம் தலைமுறையினரோ அதற்கு பின்னால் வந்தவர்களோ கட்டிய கோயிலே, பரன் குன்றமாக இருக்கும். பிற்காலத்தில் திரு என்ற சிறப்பை உணர்த்தும் அடைமொழியைச் சேர்த்து திரு +பரன் + குன்றம் என்றாகி பின் திருப்பரங்குன்றம் ஆகியது.

திரு + பரம் + குன்றம் என்று பிரித்து பொருளறிவது தவறு என்றே நான் கருதுகிறேன். தமிழறிஞர்கள் தங்கள் கருத்துக்களை இங்கே கூறவும் கேட்டுக்கொள்கிறேன்.

Thiruparankundram-Murugan-Templeஅந்தத் தலைமுறையில் முருகனை பரன் என்று அழைத்தோர் எண்ணிக்கை 729 (3*3*3*3*3*3) ஆக இருந்திருக்கும். இது ஒரு சராசரி மக்கள் தொகை கொண்ட இன்றைய ஊராட்சி அளவுக்கு இருந்திருக்கும்.

உறவுமுறை ஏணிப்படி, பரனுக்கு முந்தைய தலைமுறையை அழைக்க சொல்லில்லை/சொல் நமக்கு தெரியவில்லை. பரன் ஏழாவது தலைமுறை. நாம் இன்றும் கூட ‘ஏழு தலைமுறை’ என்று தான் சில நேரங்களில் சொல்கிறோம். பின்னால் வந்த தலைமுறையினரும் முருகனை பரன் என்ற சொல்லைக்கொண்டே அழைத்திருப்பர். ஏன் ஏழாவது தலைமுறை வரை குறிக்க மட்டுமே சொல் இருக்கிறது அதற்கு மேல் இல்லை என்பதை எனது அடுத்த கட்டுரையில் எழுத இருக்கிறேன்.

முதன் முதலில் பரனாகிய முருகனுக்கு திருப்பரங்குன்றத்தில் தான் கோயில் கட்டப்பட்டது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், முருகனின் ஆறு படை வீடுகளில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தான் முதலாவது படை வீடு. சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் சிறு கோயிலாக இருந்திருக்கும். அதன் பிறகு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக ஆன பின்னர், கி.பி 700-800 காலத்தில் பெரிய கோயிலாக கட்டி இருப்பர்.

சங்க காலத்தில், அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இதிலிருந்தும் முருகன் முப்பாட்டனே என்பது தெளிவாகும்.

காரணம் 3: ஆறுமுகம் வந்த கதை 

முருகனுக்கு எப்படி ஆறுமுகம் என்ற பெயர் வந்தது என்பது தொடர்பாக நீங்கள் இணையத்தில் தேடி படித்தீர்களேயானால் அனைத்துக் கருத்துக்களும் நகைப்பை வரவழைப்பதாகவே இருக்கும். புராணக் கட்டுக்கதைகள் மட்டுமே இன்றும் எழுதப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றன. நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடை கண்டுபிடிக்க முடியாவண்ணம் செய்யவே இந்த புராண கட்டுக்கதைகள் இன்றும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. ஆறு தலைகளுடன், பன்னிரண்டு கைகளுடனும் ஒரு மனிதன் எவ்வாறு வாழ்ந்திருப்பான்? வாழ்ந்தான் என்கிறது புராணம். அதுவும் போர்க்குணம் கொண்டவனாக வாழ்ந்தான் என்கிறது. திசை அனைத்தையும் காக்க ஒவ்வொரு தலையாம். திசை நான்கா… இல்லை எட்டா? என்னே அறிவு. நாமும் நம்ப வேண்டும்; இல்லையேல் சாமி கண்ணை குத்திவிடும்.

Arrumugan-Aarumukam-Murugan
Courtesy: http://kataragama.org/docs/raghavan.htm

முருகனுக்கு எவ்வாறு ஆறு முகங்கள்  வந்திருக்கும்?

பரனுக்கு (முப்பாட்டன் முருகனுக்கு) கோயில் கட்டிய ஏழாம் தலைமுறையினர் தங்களது தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன், சேயோன் முதலிய முன்னோர்களை நினைவில் கொள்ளாமல் விட்டிருப்பார்களா? ஏழாம் தலைமுறையினர் தங்களது அனைத்து முன்னோர்களையும் குறிக்கவே ஆறு தலைகளையும் முருகனுக்கு உருவம் தரும்போது ஓவியமாக, சிலையாக வடித்திருப்பர். ஏழாம் தலைமுறையில் வந்த அறிவில் சிறந்த ஒரு குடும்பமே இதை தொடங்கி இருக்கும். அதுவே பின்னாளில் நிலைத்து நின்றிருக்கும்.

திருப்பரங்குன்றத்தில் முதன்முதலில் முருகனின் வேல் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பு அதிகம். அதனால் தான் அங்கு இன்றும் வேலுக்கு வழிபாடு நடக்கிறது.

தினமலர் கோவில்கள் பகுதியின் கட்டுரையின் ஒரு வரி மேற்கோளாக…

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. – தினமலர்

இங்கே தினமணியில் வந்த செய்தி மேற்கோளாக…

திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். – தினமணி 

பிறகு வந்த தலைமுறையினரே உருவம், ஓவியம், சிற்பம், சிலை என்று படைத்திருப்பர். அதன் பிறகே முருகன் ஆறுமுகன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்பட்டிருப்பார்.

மேற்கண்ட மூன்று காரணங்களை வைத்துப் பார்க்கும் போது முருகன் தமிழனின் முப்பாட்டனே என்பதை நாம் அறியலாம்.

இந்தக் கட்டுரை பற்றி உங்களது கருத்துக்களை இங்கே பின்னூட்டமாக பதிய வேண்டுகிறேன். முருக வேலுண்டு வினையில்லை.

நன்றி! வணக்கம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!